Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

“ரகசியப் பிரிவு அதிகாரி ரகசியமா தப்பு செய்யலாமா?”

தமிழக காவல்துறையின் ரகசியப் பிரிவின் உயரதிகாரி ஒருவர், தன்னை நேர்மையானவராகக் காட்டிக்கொண்டாலும், மான்செஸ்டர் நகரத்தில் அவர் முறைகேட்டுக்குத் துணைபோயிருப்பது பலரையும் முணுமுணுக்க வைத்துள்ளது. மான்செஸ்டர் மாநகராட்சியில் ‘ரிசர்வ் சைட்’ எனப்படும், பூங்கா இடத்தில் முறைகேடாகக் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கட்டட உரிமையாளரான தன் நண்பருக்காக மாநகராட்சி உயரதிகாரியிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, தன் வழிக்குக் கொண்டுவந்தாராம் ரகசியப் பிரிவு உயரதிகாரி. இதையடுத்து, “ரகசியப் பிரிவு அதிகாரி ரகசியமா தப்பு செஞ்சா வெளியே தெரியாமப்போகுமா!” என்று கமென்ட் அடிக்கிறார்கள் சக காவல்துறை அதிகாரிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

காவலர்களின் அரைகுறை ஆடை உலா!

காட்பாடி ரயில் நிலையத்தில் செயல்பட்டுவரும் போலீஸ் ஸ்டேஷனை இரவு நேரங்களில் கடக்கும் பயணிகள் தலையில் அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். இங்கு ஆண், பெண் என 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்துவரும் நிலையில், இரவு நேரம் ஆகிவிட்டால் புழுக்கம் தாங்காத ஆண் காவலர்கள் சீருடையைக் களைந்து, இடுப்பில் துண்டை மட்டுமே கட்டிக்கொண்டு காற்றோட்டமாக உலாவருகிறார்கள். ஸ்டேஷனைத் தாண்டி நடைபாதையிலும் இவர்களின் அரைகுறை ஆடை உலா தொடர்வதால் ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே ஊழியர்கள் எனப் பலரும் முகம் சுளிக்கிறார்கள். இது குறித்து இங்கு பணிபுரியும் பெண் காவலர்கள் கண்டித்தும், ஆண் காவலர்கள் திருந்துவதாகத் தெரியவில்லையாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘சம்மன்’ காக்கிக்கு சரமாரி திட்டு!

தீவு ஊரின் பஜார் காவல் நிலையத்தின் உயரதிகாரி, காரணமே இல்லாமல் காவலர்களை வசைபாடுவதில் வல்லவர். காக்கிக் சட்டை அணிந்துகொண்டு காவல் நிலையத்துக்குள் யார் வந்தாலும், என்ன ஏதென்றுகூட விசாரிக்காமல் சரமாரியாகத் திட்டத் தொடங்கிவிடுவார். அப்படித்தான் சில நாள்களுக்கு முன்பு தேனி மாவட்டத்திலிருந்து நீதிமன்ற சம்மனைக் கொண்டுவந்த காவலரை, ‘‘எங்கேய்யா போனே இத்தனை நாளா... ஒழுங்கா இங்கே டூட்டி பார்க்குறதுன்னா பாரு... இல்லைன்னா டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு ஓடிடு...’’ என்று மூச்சுவிடாமல் வறுத்தெடுத்திருக்கிறார். பொறுமையிழந்த சக காக்கிகள், ``ஐயா, அவரு நம்ம ஸ்டேஷன் இல்லை... சம்மன் கொடுக்குறதுக்காக தேனியிலருந்து வந்திருக்காரு” என்று சொல்ல... அப்போதும் சளைக்காதவர், “ஏன்யா... உனக்கு வாய் இல்லையா... நீயெல்லாம் எப்படிய்யா போலீஸ் ஆனே?’’ என்று மீண்டும் எகிறியிருக்கிறார். படாதபாடுபட்டு அவரிடமிருந்து சம்மன் காக்கியை மீட்டிருக்கிறார்கள் சக காக்கிகள்.

“இதெல்லாம் ஒரு பொழப்பா!” - திட்டித்தீர்த்த போதைப்பொருள் தடுப்பு போலீஸ்!

சமீபத்தில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தங்கள் டீமை அலர்ட் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், திருச்சியில் ரயில் நிற்கும்போது கஞ்சா கும்பலை கைதுசெய்யத் திட்டமிட்டிருக்கிறது. இந்தத் தகவலை மோப்பம் பிடித்த திருச்சி ரயில்வே போலீஸார், சுதாரித்துக்கொண்டு அரியலூரில் இருந்த ரயில்வே போலீஸாரை அனுப்பி ரயிலை சோதனை செய்தபோது, 30 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் பெண் ஒருவர் சிக்கியிருக்கிறார். இதையடுத்து, ரயில் திருச்சிக்குச் சென்றால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் தங்களுக்குச் சிக்கல் எழலாம் என்று நினைத்தவர்கள், ஸ்டாப்பே இல்லாத பொன்மலை ஸ்டேஷனில் செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியவர்கள், குற்றவாளியைக் கைதுசெய்து கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த போதைப்பொருள் தடுப்புப் போலீஸார், இந்த விஷயம் தெரிந்ததும் ‘இதெல்லாம் ஒரு பொழப்பா!’ என்று கொதிப்புடன் திட்டித்தீர்த்துவிட்டுச் சென்றார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

மணல் கடத்தலில் இறங்கிய எஸ்.ஐ!

டெல்டா நகரத்தின் ‘வாசல்’ வைத்த காவல் நிலையத்தில் பணிபுரியும் அந்த எஸ்.ஐ., மணல் கொள்ளை விவகாரத்தில் செய்யும் ஜெகஜ்ஜால வேலையைப் பார்த்து சக காவலர்களே வாயைப் பிளக்கிறார்கள். இரவு நேரத்தில் வெண்ணாற்றில் நடக்கும் மணல் கொள்ளையைக் கண்டுகொள்ளாமல் இருக்க, அந்த எஸ்.ஐ-க்கு மணல் கடத்தல் கும்பலிடமிருந்து வாரம்தோறும் ஸ்வீட் பாக்ஸ்கள் வந்துகொண்டிருந்தன. ஆனாலும், இதில் திருப்தி அடையாத எஸ்.ஐ., மணல் கடத்தல் தொழில் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, தானும் ஒரு தொழில்முனைவோராகிவிட்டார். லாரி ஒன்றை பினாமி பெயரில் வாங்கியவர், மணல் கடத்தல் கும்பலிடம் கொடுத்து தொழிலைப் பக்காவாகச் செய்துவருகிறார். இரவு நேரங்களில் மணல் ஏற்றிச் செல்லும் தனது லாரிக்கு சிக்கல் ஏற்படாமலிருக்க, அவரே லாரிக்கு முன்பாகப் பாதுகாப்புக்குச் செல்கிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism