Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

மண்டையை மறைச்சீங்களே... கொண்டையை மறைச்சீங்களா சார்?!

கொங்கு மண்டலத்தின் மூன்றெழுத்து மாவட்டத்தில் பணியாற்றும் பெரிய அதிகாரி அவர். காமெடி நடிகரின் பெயரைக்கொண்ட அவர் செய்த காமெடி இப்போது போலீஸார் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது. ஆளுங்கட்சிப் புள்ளிகளுக்கு வளைந்து கொடுப்பதில் ஒரு நாணல்போல இருக்கும் இவர், போடாத ரோட்டைப் போட்டதாக அரசுப் பணத்தை ஆட்டையைப் போட்டவருடன் அநியாயத்துக்கு அன்பு பாராட்டுகிறார். சமீபத்தில் அந்தச் சுருட்டல் புள்ளி தனது சொந்த ஊரில், காமெடி அதிகாரிக்கு தடபுடல் மதிய விருந்து வைத்திருக்கிறார். விருந்துக்கு மஃப்டியில் சென்ற அதிகாரிக்குப் பாதுகாப்பாக ஸ்ட்ரைக் கிங் ஃபோர்ஸும் கூடவே போனதாம். “மண்டையை மறைச்சவர், கொண்டையை மறைக்க மறந்துட்டாரே...” என்ற கேலியுடன், இந்தச் சம்பவம் பற்றிய புகாரை மேலிடத்துக்கு எவிடென்ஸுடன் அனுப்பிவைத்து விட்டு, நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள் நேர்மையான காவல் அதிகாரிகள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

ஊரான் வீட்டு நெய்யே... தீயணைப்பு காவலர் கையே...

‘விருது’ பெற்ற நகரின் தீயணைப்புக் காவலர் ஒருவரும், பிரபல ஹோட்டல் அதிபரும் நெருங்கிய நண்பர்கள். அந்த ஹோட்டல் அதிபர் தொழில் கடன் வாங்குவதற்கு அரசுப் பணியில் இருக்கும் நண்பரிடம் ‘ஜவாப்தாரி’ கையெழுத்து கேட்டிருக்கிறார். “நான் ஏற்கெனவே ஒருத்தருக்குக் கொடுத்துட்டேனே, உங்களுக்கு வேற ஏற்பாடு பண்றேன்” என்று சொல்லி, தீயணைப்பு நிலைய அலுவலரின் சம்பள ரசீதைக் கொடுத்திருக்கிறார் காவலர். அதைச் சரிபார்த்த நிதி நிறுவனம், கையெழுத்தைச் சந்தேகப்பட்டு, கள விசாரணையில் இறங்கியிருக்கிறது. நிலைய அலுவலரிடம் நேரிடையாக விசாரிக்கையில், “இவ்வளவு நாளும் மெடிக்கல் லீவுல இருந்துட்டு, இன்னைக்குத்தான் டூட்டிக்கே வந்திருக்கேன். நான் யாருக்கும் கையெழுத்து போட்டு குடுக்கலையே” எனச் சொல்ல விஷயம் தீப்பிடித்திருக்கிறது. லீவில் இருந்தவரின் சம்பளப் பட்டியலைத் திருடி அலுவலக சீலைத் தவறாகப் பயன்படுத்தியதுடன், போலிக் கையெழுத்தும் போட்ட காவலர் வகையாக மாட்டிக்கொண்டார். கடைசிவரை ‘நான் அவனில்லை’ என்று சாதித்த அந்தக் காவலரின் ஏமாற்று வேலை குறித்து நிலைய அலுவலர் காவல் நிலையத்துக்குப் புகாரைத் தட்டிவிட, எஃப்.ஐ.ஆர் போடாமல் விசாரிக்கிறதாம் காவல்துறை!

ஜூனியர் வாக்கி டாக்கி

மணல் தந்த வாழ்வு... மீண்டும் வந்த போலீஸார்

மலைக்கோட்டை மாவட்டத்தில் மண்ணசை பகுதியில் உள்ள இரு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நிறைய மணல் குவாரிகள் இயங்கிவருகின்றன. இங்கு சட்டவிரோத மணல் கொள்ளைக்குத் துணைபோனதாக, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களின் தனிப்பிரிவு போலீஸார் இருவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து, வேறு ஸ்டேஷனுக்குத் தூக்கியடித்தனர். கவனிக்கவேண்டியவர்களை கவனித்துவிட்டு அந்த இருவரும் மறுபடியும் அதே ஸ்டேஷனுக்கு, அதே போஸ்ட்டிங்குக்கு வந்துவிட்டார்கள். மணல் மாஃபியாக்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க, நேர்மையான காவலர்களோ, “என்னய்யா இது விநோதமா இருக்கு... நம்ம ஸ்டேஷனை அந்த முருகன்தான் காப்பாத்தணும்” என்று குமுறுகிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

குண்டாஸ் மாமூலில்... குளுகுளு ஏசி!

வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், `மாமூல் வாங்குவது எப்படி?’ என்று புத்தகம் எழுதும் அளவுக்கு அனுபவசாலியாக இருக்கிறாராம். அந்த போலீஸ் லிமிட்டிற்குள் வரும் ஓர் ஊராட்சியில் தலைவியாக இருப்பவரின் கணவரும், மகனும் சமீபத்தில் மணல் கடத்தி கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார்கள். 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு அவர்களை வழக்கிலேயே காட்டாத அவர், இப்பவோ அப்பவோ என்றிருக்கும் முதியவர் ஒருவரை வழக்கில் போலியாகக் கோத்துவிட்டிருக்கிறார். அதேபோல, போதைப்பொருளுக்கு எதிரான டி.ஜி.பி-யின் ரெய்டு உத்தரவைக் காரணம் காட்டி, பிரபல சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார். அவர் கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் மாமூலை வாங்கி, கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வீட்டுக்கு குளுகுளு ஏ.சி போட்டிருக்கிறாராம் இன்ஸ்பெக்டர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

மன்மத லீலை ஏட்டையா... மருளும் பெண்கள்!

விழுப்புரம் நகரில் இருக்கும் காவல் நிலையம் ஒன்றில் நிலவின் மறு பெயரைத் தன் பெயராகக்கொண்டவர் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். திருமணமாகி, பிள்ளை குட்டிகள் இருந்தாலும்கூட, பிற பெண்களை டார்ச்சர் செய்துவருகிறாராம் மனிதர். புகார் கொடுக்கவரும் எளிய பின்னணிகொண்ட பெண்களை, “நான் உன்னை கவனமாப் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிக் கவிழ்ப்பதே ஐயாவின் பிரதான டூட்டி! எல்லாம் அடுத்த பெண் சிக்கும் வரைதான். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்யும் மனநிலைக்குப் போனால், சூசகமாகச் செயல்பட்டு அவர்களுக்கு மறைமுகச் சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறாராம் ஏட்டையா. இந்த மன்மத ராசாவால் அண்மையில் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் துணிந்து எஸ்.பி-யிடமே புகார் கொடுத்துவிட்டார். ஆனாலும் அதே ஸ்டேஷனில் உட்கார்ந்துகொண்டு அந்தப் பெண்ணுக்கும் குடைச்சல் கொடுக்கிறாராம் ஏட்டையா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism