Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘பேரை மாற்றினால் போதுமா?’’

வசூல்வேட்டைப் புகார் காரணமாக, கோவை காவல் நிலையங்களில் ‘நுண்ணறிவுப் பிரிவுக் காவலர்’ என்ற முறை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. “முன்பு காவல் நிலையத்தில் இருந்த நுண்ணறிவுப் பிரிவு, தற்போது ‘ஸ்பெஷல் டீம்’ என்று பெயர் மட்டும் மாறியுள்ளது. மற்றபடி வசூல்வேட்டை கொஞ்சமும் மாறவில்லை. ஏனெனில், நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றுபவர்கள் பலரும் நீண்டகாலமாகப் பணியில் உள்ளனர். இந்த அனுபவத்தால், போதை வஸ்துகள், கட்டப்பஞ்சாயத்து நெட்வொர்க்கிடம் தொடர்ச்சியாகத் திரைமறைவில் டீல் போட்டு சன்மானம் பெற்றுவருகின்றனர்” என்று உண்மையைப் போட்டு உடைக்கின்றனர் நேர்மையான அதிகாரிகள். இது குறித்துப் பேசுகிறவர்கள், ‘‘பேரை மட்டும் மாத்திட்டா பிரச்னை சரியாகிடுமா... நீண்டகாலமாக அதிலுள்ள காக்கிகளை மாற்றினால்தானே தீர்வு கிடைக்கும்’’ என்று நொந்துகொள்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘பதுக்கினாலும் பக்காவா பங்கு கொடுத்துடுவாரு!’’

தூங்காத நகரத்தின் காவல்துறையில், பெரிய கொள்ளை வழக்குகளைக் கண்டுபிடிக்கும் ‘தீவிர குற்றக் கண்காணிப்புப் பிரிவில்’ பணியாற்றிவரும் சந்தோஷமான அதிகாரி, சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரணம்.... கள்ளநோட்டுக் கும்பலைப் பிடித்துக் கணக்கு காட்டியவர், கும்பலிடமிருந்த நல்ல நோட்டுகளையும் கைப்பற்றி, அதை வழக்கில் காட்டாமல் பதுக்கிக்கொண்டாராம். பணத்தைப் பறிகொடுத்த கும்பலோ, சந்தோஷ அதிகாரியின் தில்லு முல்லுவை மாவட்ட அதிகாரியிடம் புகார் செய்திருக்கிறது. ஆனாலும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. அடுத்தகட்டமாக உயரதிகாரிகளுக்குப் புகாரைத் தட்டிவிட்டது கும்பல். இதையடுத்து, சந்தோஷ அதிகாரியின் தில்லு முல்லுகளை விசாரணை டீம் தோண்டியெடுக்க... அதிகாரியின் பல கடந்தகாலத் தில்லு முல்லுகளும் வெளியே வந்துள்ளனவாம். கூடவே, பதுக்கலில் கிடைக்கும் பணத்தை மாவட்ட உயரதிகாரி வரை, சந்தோஷ அதிகாரி பங்கிட்டுக் கொடுத்துவந்த உண்மையும் இப்போது வெளியே வந்திருப்பதைக் கிண்டல் செய்கிற சக காக்கிகள், ‘‘மனுஷன் பதுக்கினாலும் பக்காவா பங்கு கொடுத்துடுவாரு’’ என்று வடிவேலு பட காமெடியைச் சொல்லிச் சிரிக்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘எங்ககிட்ட வாடகை கேட்டது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா?’’

ஊட்டி மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைக்க, நீலகிரிக்குச் சென்ற முதல்வரின் பாதுகாப்புக்காக வந்திருந்த காக்கிகளில் சிலர், குன்னூரில் உள்ள இரண்டு பெரிய லாட்ஜுகளில் தங்கியிருக்கிறார்கள். அங்கேயே இரண்டு வேளையும் சாப்பிட்டிருக்கிறார்கள். மறுநாள் பெட்டி, படுக்கைகளை எடுத்துக்கொண்டு ரூமைக் காலி செய்த காக்கிகளிடம் ரூம் வாடகையைக் கேட்டிருக்கிறது லாட்ஜ் நிர்வாகம். “சி.எம் டூட்டிக்கு வந்த எங்ககிட்டயே ரூம் வாடகை கேட்பியா..?’’ என்று லாட்ஜ் ஓனர்களை மிரட்டியுள்ளனர் காக்கிகள். இந்த மிரட்டலில் லாட்ஜ் ஓனர்கள் மிரண்டுபோனதைக் கண்டவர்கள் ‘‘கோர் செல் செக்யூரிட்டிகிட்ட இப்படிப் பணம் கேட்டதே எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா...” எனக் கூடுதலாக இரண்டு பிட்டுகளைப் போட, லாட்ஜ் ஓனர்கள் நடுங்கிப்போயிருக்கிறார்கள். ஆனால், இப்போது ஓசியில் தங்கியது மட்டுமல்லாமல் லாட்ஜ் நிர்வாகத்தையும் மிரட்டிய காக்கிகளின் சிசிடிவி காட்சிகளை, டி.ஜி.பி-க்கு அனுப்பும் முடிவில் இறங்கியிருக்கிறதாம் லாட்ஜ் நிர்வாகம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

அமைச்சர் அட்ராசிட்டியும் அதிகாரியின் அமைதியும்!

பசுமை அமைச்சரும், அவரது வாரிசும் செய்யும் அட்ராசிட்டிகள் குறித்து மேலிடத்துக்குத் தகவல் அனுப்பாமல் அமைதி காக்கிறாராம், தேசியத் தலைவர் பெயர்கொண்ட அந்த உளவுப் பிரிவு அதிகாரி. அமைச்சரின் சொந்த ஊரைச் சேர்ந்த தன் நெருக்கமான உறவுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே அரசு வேலை வாங்கிக் கொடுத்ததற்கான விசுவாசம்தான் அதிகாரியின் அமைதிக்குப் பின்னே உள்ள காரணம் என்கிறார்கள். அமைச்சரது குடும்ப அட்ராசிட்டிகளைத் தடுக்க வழி தெரியாமல், உடன்பிறப்புகளே அதிகாரியின் அமைதியைக் கரித்துக்கொட்டிப் புலம்புகின்றனர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘நான் போலீஸ் இல்லை... பிஸினஸ்மேன்!’’

அரிதான மாவட்டத்தில், குணமான காவல் நிலைய ஆய்வாளர் ஒருவரை சக போலீஸார் எல்லோருமே ‘பிஸினஸ்மேன்’ என்று செல்லப்பெயர் வைத்துக் கிண்டலடிக்கிறார்கள். அந்த அளவுக்குத் திட்டமிட்டுச் சம்பாதிப்பதில்... சாரி, மாமூல் வசூலிப்பதில் கைதேர்ந்தவர் என்கின்றனர். காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சரக்கு விற்பனை படுஜோராக நடக்கிறது. தொழிலைவிட்டு ஒதுங்கியவர்களின் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டு, அவர்களை மீண்டும் தொழிலுக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறாராம். இல்லீகலாகச் செயல்படும் சந்துக் கடைகளில் மாதா மாதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று கறார் காட்டிவருகிறாராம். மற்றொருபுறம், பணம் வாங்குவதற்கு இடையூறாக இருக்கும் போலீஸாரை, பெட்டிஷன் போட்டு வேறு இடத்துக்கு டிரான்ஸ்ஃபரில் அனுப்பிவிடுவதிலும் ஐயா கில்லி என்கிறார்கள். பெட்டிஷன் போடுவதற்கென்றே மூன்று வழக்கறிஞர்களைக் கையில்வைத்திருக்கிறாராம். இந்த பிஸினஸ்மேன் மீது பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதன் பின்னணியில் மத்திய மாவட்ட உயரதிகாரி ஒருவரைக் கைகாட்டுகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism