Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத், ஓவியங்கள்: சுதிர்

ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

“கொலை கேஸில் உன்னையும் சேர்த்துடுவேன்!”

‘குட்டி’ மாநிலத்தில் கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியைக் கைதுசெய்த ‘பேட்டை’ போலீஸார், குற்றவாளியின் நண்பரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கில் அவருக்குச் சம்பந்தமே இல்லை என்று தெரிந்த பிறகும், ‘கொலை கேஸில் உன்னையும் சேர்த்துவிடுவோம்’ என்று மிரட்டியே பெருந்தொகையைக் கறந்துவிட்டனராம். விசாரணைக்காக வாங்கிய செல்போனைத் திருப்பிக் கொடுக்கவும் தனியாக ஒரு தொகையை வாங்கியிருக்கின்றனர். உச்சகட்டமாக, ‘‘மேலதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டும்’’ என்று மேலும் சில ‘லட்டுகள்’ கேட்கவே, வெகுண்டெழுந்தவர் காவல்துறையின் உயரதிகாரிகளைச் சந்தித்துக் கொட்டித் தீர்த்துவிட்டார். கலெக்‌ஷன் செய்த அதிகாரிகள் இப்போது கலக்கத்தில்!

“என் பைக் என்ன தண்ணிலயா ஓடுது?!”

நெற்களஞ்சிய மாவட்டத்தின் நான்கெழுத்து காவல் நிலையத்தில், ‘உயிரா’னவர் எஸ்.ஐ-யாகப் பணிபுரிகிறார். அவரிடம் சொத்துப் பிரச்னையில் தான் தாக்கப்பட்டதாக, மலைக்கோட்டை நகரில் எஸ்.எஸ்.ஐ-யாகப் பணிபுரிபவரின் கணவர் புகார் கொடுத்திருக்கிறார். உயிரானவரோ, வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லையாம். புகார் கொடுத்தவர் பொறுமையிழந்து கேட்க, “பேப்பர்ல எழுதிக் கொடுத்துட்டா போதுமா, கரன்சியைக் கையில கொடுங்க... நடவடிக்கை எடுக்குறேன்” என்று ஓப்பனாகவே கேட்டிருக்கிறார் எஸ்.ஐ. “சார், என் மனைவியும் போலீஸாகத்தான் இருக்காங்க...” என்று பாதிக்கப்பட்டவர் சொன்னதற்கு, “விலைவாசி கூடிப் போச்சு. என் பைக் என்ன தண்ணிலயா ஓடுது...” என்று பண விஷயத்தில் கறாராக இருக்கிறாராம் எஸ்.ஐ.

ஜூனியர் வாக்கி டாக்கி

“தலைவர் திமிங்கலம் தானுங்கோ...”

இனிப்பு மாவட்ட தெற்கு எல்லை ஊரில் கஞ்சாவுக்கென தனி மவுசு இருப்பதால், வியாபாரம் களைகட்டுகிறது. கடவுள் தேசத்து இளைஞர்கள்கூட எல்லை தாண்டி வந்து கஞ்சா வாங்கிச் செல்கிறார்கள். அந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் 171 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவதாக போலீஸ் டைரி தெரிவிக்கிறது. ஆனால், அது தடுப்பதற்கான டைரி இல்லையாம். வசூல் செய்வதற்கான டைரியாம். கஞ்சா வியாபாரிகளைவைத்து பள்ளத்தாக்கின் வடக்கு போலீஸார், “போதும் போதும்!” என்கிற அளவுக்கு கல்லாகட்டுகிறார்களாம். கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் ‘திமிங்கலம்’ தலைமையில்தான், சமீபத்தில் ஆபரேஷன் கஞ்சா 2.0 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம். “ஆபரேஷன் எப்படி நடந்திருக்கும்னு புரிஞ்சுக்கங்க!” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

“என்ன ஒரு புத்திசாலித்தனம்?!”

‘புரம்’ மாவட்டத்திலுள்ள ஒரு செல்போன் கடையில், 28 செல்போன்கள் திருட்டுபோயின. கடைக்காரர், ‘வனம்’ காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றார். ஆனால், அதற்குள் அவரைத் தொடர்புகொண்ட ‘பிரிக்ஸ்’ ரயில்வே போலீஸார், ரயிலில் செல்போன்கள் கிடைத்ததாகவும், உரிய ஆதாரங்களுடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்திருக்கின்றனர். உடனே, ‘செல்போன்கள் கிடைத்துவிட்டன. அதனால் வழக்கு எதுவும் வேண்டாம்’ என்று உள்ளூர் போலீஸில் தெரிவித்துவிட்டு ரயில்வே போலீஸாரிடம் 28 செல்போன்களையும் வாங்கியிருக்கிறார் கடைக்காரர். ‘அப்பாடா...’ என நிம்மதிப் பெருமூச்சுவிட்ட மறுகணமே, அவரைப் பின்தொடர்ந்து வந்த ‘வனம்’ போலீஸார், ‘‘ஸ்டேஷனுக்கு வாங்க... எஃப்.ஐ.ஆர் போட்டுட்டு செல்போன்களை கோர்ட்டில் ஒப்படைக்கணும்” என்று கூறியிருக்கின்றனர். ‘‘செல்போன்கள்தான் கிடைத்துவிட்டதே... நான் ஏன் உங்ககிட்ட கொடுக்கணும்?” என்று பதறியிருக்கிறார் கடை உரிமையாளர். “இந்த வருஷம் எந்த கேஸும் நாங்க பிடிக்கலை. உயரதிகாரிகள் சொல்லித்தான் வந்திருக்கோம். ரெக்கவரி காட்டணும்” என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, எஃப்.ஐ.ஆர் போட்டு செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டார்களாம் அவர்கள். “என்ன ஒரு புத்திசாலித்தனம்?!” என்று புலம்புகிறார் கடைக்காரர்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘எல்லாம் அவன் செயல்!’

‘வெற்றி’கொண்ட நகரில் கஞ்சா வியாபாரி ஒருவரை வளைத்திருக்கிறது எஸ்.பி-யின் ஸ்பெஷல் டீம். அந்த வியாபாரி இன்ஸ்பெக்டருக்கு வேண்டப்பட்டவராம். ‘சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான தான் கைதுசெய்யாமல், ஸ்பெஷல் டீம் கைதுசெய்தால், தனக்கு நெருக்கடி வந்துவிடும்’ என நினைத்த இன்ஸ்பெக்டர், குற்றவாளியின் உறவினர்களுக்கு ஓர் ஐடியா கொடுத்திருக்கிறார். அதன்படி அவர்கள், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு நடு ரோட்டில் உட்கார்ந்துவிட்டார்கள். கடைசியில் ஸ்பெஷல் டீமுக்கு நெருக்கடி அதிகமாகி, வழக்கே போடாமல் கஞ்சா வியாபாரியை விடுவித்துவிட்டார்களாம். ‘எல்லாம் அவன் செயல்’ என்று இன்ஸ்பெக்டரைப் புகழ்கிறது கஞ்சா குடும்பம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism