Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

ஹிட்லரைவிட மோசமா இருக்காரே!?

காக்கிகள், சாமானியர்களிடம் கறார் காட்டுவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தொழில்நகரில் பணியாற்றிவரும் உதவி அதிகாரியோ, சக காக்கிகளிடமே மிருகத்தனமாக நடந்துகொள்கிறாராம். வசூலில் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பங்குகூட சக ஊழியர்கள் மீது காட்டுவதில்லையாம். சமீபத்தில் ஒரு காவலர் பணியின்போது மயக்கம் போட்டிருக்கிறார். உடனிருந்தவர்களெல்லாம் பதறிப்போக, அந்த அதிகாரி அப்படியொரு சம்பவமே நடக்காததுபோல இருந்தாராம். “என்னய்யா... இந்த மனுஷன் ஹிட்லரைவிட மோசமா இருக்காரே...” என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் தொழில்நகரக் காக்கிகள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

``பெயின்ட் அடிச்சு வித்துக்கோ!’’

கோட்டை மாவட்டத்தின் ‘காடு’ காவல் நிலையத்தில், மணல் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகள் நிறைய நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாட்டுவண்டிகள் காவல் நிலையத்திலிருந்து அடிக்கடி திருட்டுப்போகின்றன. காவல்துறையினர் துணையுடனேயே இந்தத் திருட்டு நடப்பதாகவும், பிறகு பெயின்ட் அடித்து புது வண்டிபோல விற்பனை செய்யப்படுவதாகவும் சொல்கிறார்கள். சமீபத்தில் நள்ளிரவில் ஒருவர், காவல் நிலையத்தில் நின்ற மாட்டுவண்டியைத் தனது டூ வீலரில் கட்டி இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள், தகவல் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். மணல் கடத்தல் மாட்டுவண்டிகளைப் பிடிப்பதில் கறார் காட்டும் ‘பஞ்சாமிர்த’ பெயரைக்கொண்ட ஆய்வாளர், திருட்டுப்போகும் மாட்டுவண்டிகளைக் கண்டுகொள்வதே இல்லையாம். திருட்டுப்போன மாட்டுவண்டி தற்போது இன்னொருவரிடம் இருக்கும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பரப்ப... டி.எஸ்.பி-யே களத்தில் இறங்கி வண்டியை மீட்டுக்கொண்டுவந்திருக்கிறார்!

ஜூனியர் வாக்கி டாக்கி

அதிகரிக்கும் கள்ளத் துப்பாக்கி... கண்டுகொள்ளாத க்யூ பிரிவு!

குளுகுளு மாவட்டத்தில், கள்ளத் துப்பாக்கிப் புழக்கம் சமீபகாலமாக ரொம்பவே அதிகரித்திருக்கிறது. அண்மையில் மேலும் ஒரு நாட்டுத் துப்பாக்கியையும், 90 தோட்டாக்களையும் ஒரே இடத்தில் பறிமுதல் செய்திருக்கிறார்கள் வனத்துறையினர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தில் தீவிரவாதச் செயல்கள், ஆயுதக் கடத்தல் குறித்துக் கண்காணிக்கவேண்டியது க்யூ பிராஞ்ச் போலீஸாரின் கடமை. ஆனால், கேரளா, கர்நாடகா போன்ற பக்கத்து மாநிலங்களிலிருந்து கள்ளத் துப்பாக்கிகளை காரில் கடத்திவரும் கும்பல் குறித்து க்யூ பிரிவு காக்கிகளுக்கு ரகசியத் தகவல் கொடுத்தாலும், பிடிப்பதில்லையாம். துப்பாக்கி வைத்திருப்பவர்களைச் சரியாக விசாரிப்பதில்லையாம். க்யூ பிரிவு காக்கிகளின் இத்தகைய மோசமான செயல்பாடு, மாவட்டத்தின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என அந்த மாவட்டத்தின் உயரதிகாரி கடுமையாகக் கண்டித்திருக்கிறார்!

ஜூனியர் வாக்கி டாக்கி

``நானே பெரிய கேடி... என்கிட்டயேவா..?’’

‘நெல்மணி’ அதிகம் விளையும் மாவட்டக் காவல்துறைத் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ‘பெண்மணி’ அவர். குற்ற வழக்கின் ரெக்கார்டுகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்துவரும் அவருக்கு, கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பதே முக்கியப் பணி. கரெக்டான தேதியில் வட்டிப் பணம் வரவில்லையென்றால், ‘நானே பெரிய கேடி போலீஸ்... என்கிட்டயேவா?’ எனக் கேட்டு அடாவடியாக நடந்துகொள்வாராம். அலுவலகத்தில் எஸ்.பி-யைத் தவிர வேறு யாரையும் அவர் மதிப்பதும் இல்லையாம். தி.மு.க சீனியரான முன்னாள் மத்திய அமைச்சரின் உறவுக்காரர் என்ற அடையாளமும், கையில் கந்துவட்டிப் பணம் கணக்கில்லாமல் புரள்வதுமே இந்தத் திமிருக்குக் காரணமாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

ஆண் காக்கிகளே வியக்கும் வசூல் ராணி!

கடலோர மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றில் பணிபுரியும் ‘மாதா’ பெயரைக்கொண்ட ஆய்வாளர் அவர். பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் நிலையத்தில் பணிபுரிந்தாலும், கருணையே அற்றவராக இருக்கிறாராம். புகார் மனுவை மட்டும் கொடுத்தால் போதாது, மனுவோடு சில ‘பூந்தி’களையும் தர வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். முதலிரவில் சைக்கோ கணவனால் கடித்துக் குதறி ரத்தச் சகதியாக்கப்பட்ட பெண் ஒருவர், இவரிடம் புகார் மனுவைக் கொடுத்தபோதும், ‘பூந்தி’ இல்லையென்று மனுவைக் கிடப்பில் போட்டுவிட்டாராம். அதன் பின்பு எஸ்.பி-யிடம் நேரில் புகார் கொடுக்க, அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு அதிர்ந்துபோய், தனிப்படை அமைத்து அந்த சைக்கோ கணவரை கைதுசெய்திருக்கிறது போலீஸ். ஆண் இன்ஸ்பெக்டர்களே வியக்கும் அளவுக்கு அள்ளிக்குவிக்கும் அந்த ஆய்வாளர் பற்றி, மேலிடத்துக்கு எல்லாம் தெரிந்தும் ஏன் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் சக காக்கிகளின் கேள்வி.