Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

ஆயுதப்படை போலீஸாரின் ஆதங்கம்!

விவசாயத்துக்குப் பெயர்போன மாவட்ட ஆயுதப்படையில் ‘ஐஸ்க்ரீம்’ பெயர்கொண்டவர் டி.எஸ்.பி-யாகப் பணியாற்றினார். சமீபத்தில் கூடுதல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்ற அவருக்குப் பரிசுப் பொருள்கள் வழங்கி, பாராட்டுவிழா நடத்துவதாகக் கூறி ஆயுதப்படையைச் சேர்ந்த நான்கு பேர் வசூல்வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். ஆயுதப்படையின் வாகனப்பிரிவில் பணியாற்றும் 80 டிரைவர்கள் உள்ளிட்ட பலரிடம் நபர் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் கறாராக வசூல்வேட்டை செய்துவிட்டு, சில ஆயிரங்கள் மட்மே வசூல் ஆனதாகக் கூறி மீதியை அமுக்கியிருக்கிறது இந்த டீம். மூன்றெழுத்து தலைமைக் காவலர் தலைமையில் நடந்த இந்த முறைகேடு, அந்த டி.எஸ்.பி-க்குத் தெரியுமா என்று ஆதங்கப்படுகிறார்கள் ஆயுதப்படை போலீஸார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

காபி வித் கஞ்சா வியாபாரி!

வறண்ட மாவட்ட கடலோர ‘குடி’ காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளருக்கு அந்தப் பகுதியில் கஞ்சா, விபசாரம், சூதாட்டம் போன்ற சட்டவிரோதத் தொழில் செய்யும் நபர்களுடன் நெருக்கம் அதிகம். ஆய்வாளரின் அறைக்கே சென்று, அவர் இருக்கைக்கு எதிரே அமர்ந்து காபி, தேநீர் அருந்தும் அளவுக்கு உரிமையாகப் பழகுகிறார்களாம் அவர்கள். எல்லாவற்றுக்கும் அவர்கள் கட்டுகிற கப்பம்தான் காரணமாம். உறுதுணையாக இருக்கும் காவலர்களுக்குப் பங்கு தரும் அம்மணி, ஒத்துழைக்காத காவலர்களை வசைபாடியும், பணிச்சுமைக்கு ஆளாக்கியும் டார்ச்சர் செய்கிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

கைதிக்கு செல்போன் கொடுத்த பெண் அதிகாரி!

தெற்கிலிருக்கும் ‘கோட்டை’ மத்திய சிறையில் செல்போன் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு சிறைக் காவலர்களை எச்சரித்தனர் அதிகாரிகள். அந்த உத்தரவை சிரமேற்கொண்டு சோதனையில் ஈடுபட்ட ‘தங்கமான’ சிறைக்காவலர், சுதாகர் என்ற கைதியிடமிருந்து செல்போனைப் பறிமுதல்செய்தார். சிறைக்குள் செல்போன் வந்தது எப்படி என்று விசாரித்தபோது, ‘மனோ’திடம் மிகுந்த பெண் சிறை அலுவலரே தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, செல்போனை சிறைக்குள் எடுத்து வந்து கைதிகளுக்குக் கொடுப்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த சிறைக்காவலர் எழுத்துபூர்வமாக சிறைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறார். நடவடிக்கை எடுக்கவேண்டிய ‘சங்கம்’ வளர்த்த உயரதிகாரியோ, அந்த அம்மணியின் ‘சேவை’யைப் பாராட்டும் வகையில் அவரை சிறப்புப் பயிற்சிக்காக போபாலுக்கு அனுப்பிவைத்திருக்கிறாராம். செல்போன் பறிமுதல் செய்த சிறைக்காவலரோ தன்மீது நடவடிக்கை பாயுமோ என்கிற அச்சத்தில் நொந்துபோயிருக்கிறார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

தனிப்பிரிவு இன்ஸ்-ன் சிறப்புத் தகுதி!

தனிப்பிரிவு, உளவுப்பிரிவு போன்றவற்றில் பணியமர்த்தப்படும் காவலர்களும், அதிகாரிகளும் சர்ச்சைகளில் சிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது காவல்துறை நடைமுறை. ஆனால், ‘குயின்’ மாவட்டத்தில் தனிப்பிரிவு அதிகாரியாக இருப்பவர், 2008-ல் திருட்டு சி.டி விற்ற கடையில் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டவர். அந்த வழக்கில் சிக்கிச் சீரழிந்து, விடுவிக்கப்பட்டவருக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டதன் பின்னணியில், உள்ளூர் அமைச்சர் இருக்கிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

அச்சமில்லை... அச்சமென்பதில்லையே..!

மயில் ஆடும் சப் டிவிஷனில் திருட்டு மணல் பிஸினஸ் கொடிகட்டிப் பறக்கும் கொள்ளிடக்கரையோரம், ஒரு காவல் நிலையம் இருக்கிறது. அங்கே ‘மைக் நடிகர்’ பெயரைக்கொண்ட சிறப்பு எஸ்.ஐ ஒருவர் பணியில் இருக்கிறார். உயரதிகாரியே சொன்னாலும், வருமானம் வரும் டூட்டியை மட்டுமே இவர் ஏற்றுக்கொள்வாராம். மற்ற பணிகளெல்லாம் ஐயாவுக்கு அலர்ஜி. ரொம்ப அழுத்தம் கொடுத்தால், `சாதிப் பெயரைச் சொல்லித் திட்டினார்’ என்று அதிகாரிமீது பெட்டிஷன் போட்டுவிடுவாராம். “ஏற்கெனவே பணிபுரிந்த இடத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை, ஜெயிலுக்குக் கொண்டுபோகும் வழியில் தப்பவிட்டவர் இவர். `பணம் வாங்கிக்கொண்டுதான் விடுவித்தார்’ என்ற புகாரில் விசாரணைக்குள்ளானவர், சஸ்பெண்ட் ஆகி மீண்டும் பணிக்கு வந்தார். அந்த தைரியத்தில்தான் எந்தத் தவற்றுக்கும் இவர் அஞ்சுவதேயில்லை” என்கிறார்கள் சக காக்கிகள்.