Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத், ஓவியங்கள்: கண்ணா

ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத், ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

வசூல் ராணிக்குப் பதவி உயர்வு!

வெயில் மாநகரின் வடக்குக் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி, சி.எஸ்.ஆர் போடுவதற்கே கவர் கேட்கிறாராம். இந்த அம்மணி ஏற்கெனவே பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ‘வசூல் ராணி’ எனப் பெயரெடுத்தவராம். விழா ஒன்றில், டி.எஸ்.பி-யின் தங்க மோதிரம் கழன்று விழுந்து காணாமல்போக... விழாவுக்கு வந்த வி.ஐ.பி-க்களிடம் வசூல்வேட்டை நடத்தி, டி.எஸ்.பி-க்கு ஒரு மோதிரமும், தனக்கு ஒரு மோதிரமுமாக வாங்கிப் போட்டுக்கொண்டவராம் அம்மணி. தற்போது மாநகர காவல் நிலையத்திலும் தீவிர வசூல்வேட்டை ஆடிவரும் அம்மணிக்கு, மேலிடச் செல்வாக்கால் விரைவில் பணி உயர்வும் கிடைக்கப்போகிறதாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

`கட்டிங், கறிச்சோறு முக்கியம் தம்பி!’

தொழில் மாநகரத்தில் மேடான காவல் நிலையத்தில் பணிபுரியும் ரைட்டர் அவர். மற்ற காவலர்களுக்கு டூட்டி போடும் பொறுப்பு அவர் வசம்தான் இருக்கிறது. எழுத்தர் ஐயா, பெரும்பாலான நேரம் காவல் நிலையத்திலேயே இருப்பதால், அவருக்குத் தேவையான டீ, உணவு உள்ளிட்ட மற்ற சமாசாரங்களுக்கு உடன் பணியாற்றும் காக்கிகளை டார்ச்சர் செய்கிறாராம். லெக் பீஸ் பிரியாணி, நல்லி எலும்பு, மட்டன் சுக்கா உள்ளிட்ட அசைவ உணவுகளை மட்டும்தான் ஐயா விரும்பிச் சாப்பிடுவாராம். கட்டிங், கறிச்சோறு எனத் தன்னை பலமாக கவனிப்பவர்களுக்கு மட்டும் சிக்கல் இல்லாத டூட்டி போடுகிற ரைட்டர், மற்றவர்களுக்குத் தாறுமாறாக டூட்டி போடுவது, விடுப்பு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவது என ஆட்டமோ ஆட்டமாய் ஆடிவருகிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘நமக்கே கடுக்கா கொடுத்துட்டாங்களே..!’

புதுச்சேரியின் மையப்பகுதியிலுள்ள அந்தக் காவல் நிலையத்தின் லிமிட்டிலிருக்கும் ஸ்பாக்களில், பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறதாம். மாதம் ரு.35,000 என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், லட்சக்கணக்கில் கல்லா கட்டிவருகிறார்களாம் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காக்கிகள். இந்த நிலையில், தொடர்ச்சியான புகார்களின் அடிப்படையில், அந்தக் காவல் நிலைய அதிகாரிகளிடம் ஸ்பாக்களின் பட்டியலைக் கேட்டிருக்கிறார் உயரதிகாரி. உஷாரான காக்கிகள், தங்களுக்குக் கப்பம் செலுத்திவரும் வில்லங்க ஸ்பாக்களின் பெயர்களையெல்லாம் மறைத்துவிட்டு, முறைப்படி லைசென்ஸுடன் இயங்கிவரும் சில ஸ்பாக்களின் பட்டியலை மட்டும் பிரின்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மறுநாளே லிஸ்ட்டில் இல்லாத ஒரு ஸ்பாவில், பாலியல் கும்பல் ஒன்றைத் தனிப்படை போலீஸார் வளைத்துப் பிடிக்க, ‘நமக்கே கடுக்கா கொடுத்துட்டாங்களே...’ எனக் கடுப்பில் இருக்கிறாராம் அதிகாரி!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘பணமும் வேணும்... சரக்கும் வேணும்!’

அல்வா மாநகரிலுள்ள ஆண்டவன் பெயர்கொண்ட பக்தியான ஸ்டேஷனில், பெண் தெய்வத்தின் பெயர்கொண்ட தலைமைக் காவலர் பணியாற்றுகிறார். இவர்மீது அடிக்கடி புகார் வந்தாலும், உளவுக் காவலரில் ஆரம்பித்து, அதிகாரிகள் வரை அத்தனை பேரையும் சிறப்பாக கவனித்துவிடுவதால், எந்தச் சிக்கலும் இல்லாமல் தப்பிவிடுகிறார். ஸ்டேஷனில் யாருக்கும் சொல்லாமல், இரவு நேர ஸ்பாட் விசிட் அடிக்கும் தலைமைக் காவலரிடம் தவறான ஜோடிகள் யாரேனும் சிக்கிக்கொண்டால், செல்போன், பணம் என அனைத்தையும் கைப்பற்றிவிடுகிறாராம். சாலையோரம் அமர்ந்து சரக்கடிப்பவர்களிடமோ பணம் மட்டுமல்லாமல், சரக்கையும் சேர்த்தே பிடுங்கிக்கொள்கிறாராம். ‘இவரைப் பற்றி யாரிடம் புகார் சொல்வது’ எனத் தெரியாமல் தவிக்கிறார்கள் மாநகரவாசிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

குற்றவாளிக் காக்கிகள்... கொதிக்கும் மக்கள்!

தமிழ்நாட்டிலேயே குற்றச் சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையில் பதிவாகும் குளிர்மலை மாவட்டத்தில், காக்கிகளின் க்ரைம் ரேட் நாளுக்கு நாள் எகிறிவருகிறதாம். ஏற்கெனவே கொலை, திருட்டு, வன விலங்கு வேட்டை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட காக்கிகள் சிலர் கோர்ட்டுக்கும் ஜெயிலுக்குமாக அலைந்துவருகின்றனர். இந்த நிலையில், கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில் அண்மையில் காக்கி ஒருவர் கைதாகியிருக்கிறார்; இரண்டு காக்கிகள் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். இந்தச் சூடு தணிவதற்குள்ளாகவே டீசல் திருட்டில் ஈடுபட்டதாக ஆயுதப்படையைச் சேர்ந்த மூன்று காக்கிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி. ‘மற்ற மாவட்டங்களுக்குப் போட்டியாகக் குற்ற எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் காக்கிகளே இறங்கிவிட்டார்களே...’ என்று குளிரையும் தாண்டிக் கொதிக்கின்றனர் பொதுமக்கள்!