Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

பாட்டில் கதகதப்பில், குளுகுளு காக்கிகள்!

குளுகுளு மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை நாள்களிலும் சட்டவிரோத மது விற்பனை களைகட்டுகிறதாம். அண்மையில் சுதந்திர தினத்தன்றும் மாவட்டத்தின் மைய நகரில் சட்டவிரோத மது விற்பனை கல்லாகட்ட, பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். பாய்ந்து சென்ற நகர காக்கிகள் சிலர் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை அள்ளியிருக்கிறார்கள். ரெய்டில் பிடிபட்ட பாட்டில்களில் சிலவற்றை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, கணிசமான பாட்டில்களைத் தங்களுக்குள் பங்கு பிரித்து குளிருக்கு இதமாக்கிக்கொண்டார்களாம். திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக, சட்டவிரோத மது விற்பனை கும்பல்களும் இந்த மோசடி குறித்து வாய் திறக்க முடியவில்லை. எனவே, பாட்டில் பதுக்கல் பற்றி இப்போது உளவுத்துறை காதில் படும்படி புலம்பிவருகிறார்களாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

லேடி காக்கியிடம் ஏமாந்த கேடி இன்ஸ்!

வெயில் மாவட்டத்தின் ‘பட்டு’ காவல் நிலைய இன்ஸ்பெக்டர்மீது லஞ்சப் புகார்கள் நீளவே... அவரை இடமாற்றம் செய்ய, உயர் காக்கிகள் முடிவுசெய்தனர். லேடி உயரதிகாரியிடம் சரண்டரான இன்ஸ்பெக்டர், எட்டு லட்டுகளைக் கொடுத்து சரிக்கட்டிவிட்டு டூட்டிக்குத் திரும்பினார். இந்த நிலையில், அண்மையில் திவாலான மூன்றெழுத்து நிதி நிறுவன மோசடியில் உயரதிகாரியான லேடி காக்கியின் பெயரும் சம்பந்தப்பட, சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலுக்குத் தூக்கியடிக்கப்பட்டார். பணம் கொடுத்த கேடி இன்ஸ்பெக்டரோ... அடுத்து வரும் அதிகாரியை எப்படிச் சரிக்கட்டுவது என்று ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்கிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

கீழே மிரட்டல்... மேலே ஸ்வீட் பாக்ஸ்!

அரிதான மாவட்டத்தில், வெற்றிகரமான நகரின் காவல்துறை உயரதிகாரி வசூல்வேட்டையில் கில்லியாம். அவரது லிமிட்டுக்குள் செம்மண் குவாரி இரவு பகலாகச் செயல்படுகிறது. அதற்காக மாதம் தவறாமல் கில்லி அதிகாரியின் பைகளுக்கு மாமூல் சென்றுவிடுகிறதாம். சம்பந்தப்பட்ட ஏரியா இன்ஸ்பெக்டரைக்கூட ‘குவாரியின் பக்கம் செல்லக் கூடாது’ என மறைமுக உத்தரவும் போட்டிருக்கிறாராம். இவர் செய்யும் ‘இல்லீகல்’ வேலைகள் குறித்து மய்ய மாவட்ட உச்சபட்ச அதிகாரிக்குப் புகார் சென்றும் நடவடிக்கை நஹி. காரணம்... கீழ்மட்ட அதிகாரிகளை மிரட்டி உருட்டுபவர், உயரதிகாரிகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் முறை செய்து தப்பித்துக்கொள்வதிலும் பலே கில்லாடியாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ரௌடி, கரன்சி, விசுவாசம்!

மாம்பழ மாநகரில் கிச்சுகிச்சு மூட்டும் ஏரியா, ரெளடியிசத்துக்குப் பெயர் போனது. குற்றச் செயல்களை முன்னரே மோப்பம் பிடித்து, அதிகாரிகளிடம் எச்சரிக்கவேண்டிய தமிழ்க் கடவுள் பெயர்கொண்ட அதிகாரியோ, சம்பந்தப்பட்ட ரெளடிகளிடமே கரன்சி பெற்றுக்கொண்டு கூட்டு சேர்ந்து கொட்டமடிக்கிறாராம். வாங்கிய கரன்சிக்கு விசுவாசமாகக் குற்றச்செயல்கள் குறித்த எந்தவொரு தகவலையும் மேலிடத்துக்குக் கொடுப்பதில்லையாம். சமீபத்தில் இவருடைய லிமிட்டுக்குள் வந்த பெங்களூரைச் சேர்ந்த தனிப்படை போலீஸார், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று இரண்டு பேரைக் கொத்தாகத் தூக்கிச் சென்றனர். உயரதிகாரிகளே இந்தத் தகவலை மீடியாவில்தான் பார்த்துத் தெரிந்துகொண்டார்களாம். இந்த நிலையில், ‘அவரை வேவு பார்க்கவே இன்னொரு அதிகாரியைப் போடணும்போல...’ எனக் கிண்டல் செய்கின்றனர் சக காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

அமைச்சரைப் பாதுகாக்கும் ‘ருசிகண்ட பூனை’!

பூட்டு மாவட்ட அமைச்சருக்குப் பாதுகாப்புப் பணியில் இருப்பவர் அவர். கடந்த முறை கட்சி ஆட்சியிலிருந்தபோதும் இதே அமைச்சருக்குத்தான் எஸ்கார்டாக இருந்திருக்கிறார். அப்போது மணல் தொடர்பான அனைத்து விவகாரங்களும் இவருக்குத் தெரியாமல் நடக்காதாம். அமைச்சருக்கானது அவருக்குப் போகும் முன்பே, தனக்கான பங்கைச் சரியாகக் கேட்டு வாங்கிக்கொள்வாராம். இப்படி ‘ருசிகண்ட பூனை’யாக இருந்ததால், இந்த முறை பெரியவர் அமைச்சரானதும் பாதுகாப்புப் பணியில் ஓடிவந்து ஒட்டிக்கொண்டாராம். ஆனால், கடந்த முறைபோலப் போதிய வருமானம் இல்லாததால் ஏமாந்துபோனவர், அமைச்சரைச் சந்திக்க வருவோரிடம் வலுவாகக் கறந்து அனுப்புகிறாராம். தன்னை கவனிக்காத வர்களை அமைச்சரைப் பார்க்க அனுமதிக்காமல் தடை போட்டுவிடுகிறாராம்!