அரசியல்
அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

‘மேடத்துக்கு மேலிடத்துல செல்வாக்கு இருக்கு!’

மலைக்கோட்டை மாவட்டத்தில் கவிதையைப் பெயராகக்கொண்ட பெண் போலீஸுடன் நெருக்கமாக இருந்த போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியாக, பரலோகக் கடவுள் பெயர்கொண்ட போலீஸ் உயரதிகாரி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் மீது எந்த நடவடிக்கையுமே இல்லை. பரலோகக் கடவுள் பெயர்கொண்ட அதிகாரியுடன் மட்டுமல்லாமல், ஸ்கூல் அமைச்சரின் தொகுதியில் பதவியிலிருந்த தமிழ்க்கடவுள் பெயர்கொண்ட அதிகாரியுடனும் மேடத்துக்கு நல்ல பழக்கமாம். உயரதிகாரிகளுடன் நெருக்கமாக வலம்வந்த மேடம் ‘எனக்கு மேலிடத்துல செல்வாக்கு இருக்கு’ என சக போலீஸாரிடம் எப்போதும் கெத்துகாட்டுவாராம். இப்போது மேடத்தின் நெருக்கமான போட்டோக்கள் வெளியாகி டி.ஜி.பி வரை பெரும் பஞ்சாயத்து ஆகியும், ‘ஏன் மேடம் மேல மட்டும் எந்த நடவடிக்கையையும் எடுக்காம விட்டுட்டாங்க?’ என சக போலீஸாரே தலையைச் சொறிந்துவருகின்றனர்.

ஜூனியர் வாக்கி டாக்கி

உதவி ஆய்வாளரின் தீபாவளி வசூல் மேளா!

கடலோர மாவட்டம் ஒன்றின் போக்குவரத்துக் காவல் பிரிவில், பிரம்மச்சாரி கடவுள் பெயரைக்கொண்ட ஒருவர் எஸ்.ஐ-யாக இருக்கிறார். இவர் ஏற்கெனவே மதுவிலக்கு காவல் பிரிவில் பணிபுரிந்தபோது, கள்ளச்சாராய விற்பனைக்குத் தலைமை தாங்கி, பெரும் பணம் ஈட்டி புகாரானதால் ‘சஸ்பெண்ட்’ ஆனவர். தற்போது போக்குவரத்து காவல் பணிக்குத் திரும்பியவர், பேருந்து உரிமையாளர்கள் முதல் தரைக்கடை வியாபாரிகள் வரை வசூல் மேளாவைத் தொடர்கிறாராம். தீபாவளிப் பண்டிகை நேரத்தில் இவரது வசூல் ஆட்டத்தைக் கண்டு சக காக்கிகளே மிரண்டுபோயிருக்கிறார்களாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘நானே வருவேன்..!’

கொங்கு மண்டலத்திலுள்ள மூன்றெழுத்து மாவட்டத்தில், தலையான பகுதியில் உயரதிகாரியாகப் பணியாற்றும் மறைந்த கிளாசிக் இயக்குநரின் பெயர்கொண்ட அதிகாரி, வசூல் வேட்டையில் கில்லியாம். தனது ஆளுகைக்குக் கீழுள்ள ஸ்டேஷன்களில் மாதா மாதம் வசூல் நடத்தித் தர ‘ஸ்பை’ வைத்திருந்தாராம். ஆனால், ‘தேன் எடுத்தவன் நக்காமல் இருக்க மாட்டான்’ என்பதுபோல், உயரதிகாரிக்கான வசூல் தொகையில் கணிசமான தொகையை ‘ஸ்பை’கள் லவட்டிக்கொண்டார்களாம். இதைத் தனது துப்பறியும் திறனை வைத்துக்(?!) கண்டறிந்த அதிகாரி, ‘இனி நானே வருவேன்...’ என்று ஸ்டேஷன்களுக்கு நேரடி விசிட் அடிக்கிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

கைநீட்டும் க.பா.அ அதிகாரி!

உப்பு மாவட்டத்திலுள்ள மீன்வளத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், கடலோரப் பாதுகாப்பு அமலாக்கப்பிரிவிலுள்ள ஒரு அதிகாரிக்குப் பெரிய அளவில் ‘வரும்படி’ கிடையாதாம். அதனால், கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திலுள்ள அதிகாரி ஒருவரின் பெயரைச் சொல்லி, படகு உரிமையாளர் முதல் ஏலமிடுபவர் வரை வசூல் வேட்டையாடிவருகிறாராம். சமீபத்தில், ஒரு விசைப்படகின் உரிமையாளரிடம் வழக்கம்போல் வசூலில் இறங்கியிருக்கிறார். ஆனால், அந்த நபரோ கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளரின் உறவினராம். “மாப்ளை நீங்க அனுப்பின ஆள் வந்தாங்க. கேட்ட பணத்தைக் கொடுத்துட்டேன்” எனப் போட்டுக்கொடுத்துவிட்டாராம். கடுப்பான க.பா.கு அதிகாரி, மாவட்ட உயரதிகாரியிடம் புகாரளித்திருக்கிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

கரன்சி கொடு அல்லது கையெழுத்து போடு!

பக்கத்து மாநிலத்தின் மலர்க்கட்சி நிர்வாகி ஒருவருக்கும், கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்திருக்கிறது. கட்டுமான நிறுவனம் பணம் தராமல் காலம் தாழ்த்தியதால், ‘நஷ்ட’ காவல் நிலையத்தை லட்டுகளுடன் அணுகியிருக்கிறார் மலர்க்கட்சி நிர்வாகி. லட்டுகளைப் பெற்றுக்கொண்ட வெடிக்கும் அதிகாரியும், அவருக்குக் கீழுள்ள குன்றுக் கடவுள் அதிகாரியும் வாங்கிய லட்டுக்கு விசுவாசமாகக் கட்டுமான நிறுவன உரிமையாளரை அழைத்துப் பணம் தரும்படி மிரட்டியிருக்கிறார்கள். ‘இப்போது என்னிடம் பணம் இல்லை’ என்று உரிமையாளர் கதற, கையோடு பதிவுத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, அவர் பெயரில் இருந்த இடத்தை எழுதி வாங்கியிருக்கிறார்கள். விஷயம் வெளியில் கசிய, முதற்கட்டமாக அவர்கள் இருவரையும் பணியிட மாற்றம் மட்டும் செய்திருக்கிறது காவல்துறைத் தலைமை!