சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

கலங்கி நிற்கும் ‘கறுப்பு ஆடு’ காக்கிகள்!

கொடநாடு வழக்கின் கூடுதல் விசாரணை நடைபெற்றுவந்த சமயத்தில், ரகசியத் தகவல்களை கொங்கு அமைச்சர் வழியாக எடப்பாடிக்குக் கசிய வைத்ததாகத் தனிப்படை காக்கிகள் சிலர்மீது வெளிப்படையான குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு சிலரை ரகசியமாக வேவு பார்த்தும் வந்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பழைய கறுப்பு ஆடுகளின் லிஸ்ட்டை முதலில் கையிலெடுத்திருக்கிறார்களாம். தனிப்படையில் விசாரணை காக்கிகளாக வலம்வந்த சில காக்கிகளையே சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவிருப்பதாக வெளியான தகவலைக் கேட்டு ‘கறுப்பு ஆடு காக்கிகள்’ கலக்கத்தில் புலம்பிவருகிறார்களாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

போட்டுக்கொடுத்தவரும் தூக்கியடித்தவரும்!

நடராஜ ஊரில் உயர் பொறுப்பில் இருந்த அந்தக் காவல் அதிகாரி, நடராஜ சேவகர்கள் அளிக்கும் வைட்டமின் ‘ப’வுக்கு விசுவாசமானவராம். அதனடிப்படையில் நடராஜ சேவகர்கள்மீது போடப்பட்ட எஸ்.சி., எஸ்.டி வழக்கை மொத்தமாக க்ளோஸ் செய்வதற்கான வேலைகளிலும் இறங்கியிருந்தாராம். ‘நெளியும்’ உதவி அதிகாரியும் தன் பங்குக்கு, நடராஜ சேவகர்களைக் குழந்தைத் திருமண வழக்கில் கைதுசெய்ய வரும்’ தகவலைப் போட்டுக்கொடுத்து, சேவகர்கள் தலைமறைவாவதற்கு உதவினாராம். இந்த இரண்டு விஷயங்களும் முதற்கடவுள் பெயர்கொண்ட உயரதிகாரிக்குச் செல்ல, இருவருக்கும் டோஸ்விட்டு வேறு இடங்களுக்குத் தூக்கியடித்துவிட்டாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘கமிஷன்’ எண்ணெயில் அருவா மீசை!

வெயில் மாவட்டத்தில் ‘அருவா மீசை’ உயரதிகாரி, காட்டன் சூதாட்டம் தொடங்கி கள்ளச்சாராயம் வரை கைநிறைய ‘கல்லா’கட்டுகிறாராம். இன்ஸ்பெக்டர்களே நேரடியாக வசூல் செய்து, அதிகாரிக்கு ஒரு பங்கைக் கொடுத்துவிடுகிறார்களாம். கமிஷன் இப்படி மேலிடம் வரை பாய்வதால், புகார் கொடுப்பவர்களைச் சட்டவிரோதக் கும்பலிடம் காக்கிகளே காட்டியும் கொடுத்துவிடுகிறார்களாம். சூதாட்டத்திலும் குடியிலும் பணத்தை இழக்கும் அன்றாடக் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் பல நடுத்தெருவுக்கு வந்துவிட்டன. ஆனாலும், கமிஷன் எண்ணெயில் மீசையை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறாராம் அதிகாரி!

ஜூனியர் வாக்கி டாக்கி

உன் குத்தமா... என் குத்தமா..?

பட்டாசு நகரக் காவல் நிலையத்தில் வேலை செய்துவரும் பெண் காவலர் ஒருவர், தொடர் விடுப்புக்குப் பிறகு பணியில் சேர்ந்திருக்கிறார். மீண்டும் அவருக்கு வீட்டுச் சூழ்நிலையால் விடுப்பு தேவைப்பட, தன் உயரதிகாரியிடம் சென்று தனக்கு விடுமுறை நீட்டிப்பு வழங்குமாறு அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் அதிகாரியோ, விடுமுறை வழங்க மறுத்ததோடு பெண் காவலரைத் திட்டியும் அனுப்பியிருக்கிறார். அதிகாரியின் எதிர்ப்பையும் மீறி அந்தப் பெண் காவலர் விடுப்பு எடுத்ததால், அவருக்கு மெமோ வழங்கப்பட்டிருக்கிறது. விரக்தியடைந்த பெண் காவலர், ‘எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு அதிகாரிதான் காரணம்’ எனக் கூறித் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலர், துறைரீதியான விசாரணைக்கும் உள்ளாகியிருக்கிறார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

புரொமோஷன் எங்களுக்கு... பேமென்ட் உங்களுக்கு!

மேற்கேயுள்ள முக்கிய நகரத்தின் காவல்துறை, அத்துமீறும் பிரபல யூடியூபர்கள்மீது நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனாலும், மறுபக்கம் புரொமோஷன்களுக்காக அதேபோல இயங்கிவரும் சமூக வலைதளப் பிரபலங்களுடன் கூட்டுவைத்துச் செயல்பட்டுவருகிறது. அதாவது, மாவட்டக் காவல்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அது சமூக வலைதளங்களில் வைரலானால்தான் மேலிடம் வரை ரீச் கிடைக்கிறது. அதனால் மாவட்டக் காவல்துறை, சமூக வலைதளப் பிரபலங்களை அழைத்து ஒரு ரகசியக் கூட்டம் நடத்தியிருக்கிறது. கூட்டத்தில் ‘எங்களது திட்டங்களை மேலிடத்தின் காதுகளுக்குப் போகுமளவுக்கு புரொமோஷன் பண்ணிக்கொடுக்கணும்’ என்று சொன்னதுடன், அதற்கான பேமன்ட்டையும் பேசி டீல் முடித்திருக்கிறது காவல்துறை!