பிரீமியம் ஸ்டோரி

‘‘விருப்பம் இருந்தால் என்னை கவனி!’’

ஜூனியர் வாக்கி டாக்கி

தேனி எஸ்.பி-யின் தனிப்பிரிவு எஸ்.ஐ ஒருவர், போடிப் பகுதியில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை செய்யும் நபரிடம், ‘கால் சென்டர் பெண்ணைவிடக் கனிவாக `டீல்’ பேசும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பாகியிருக்கிறது. ‘உழைப்பின் வண்ண’த்தைப் பெயரில்கொண்ட அந்த எஸ்.ஐ., ‘விருப்பம் இருந்தால் என்னை கவனி’ என வித்தியாசமாகப் பேசும் அந்த ஆடியோவால், எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி அதிர்ச்சியடைந்துபோனாராம். ‘‘எனக்குக் கீழ் இயங்கும் தனிப்பிரிவில் இப்படியான வசூல் வேட்டைகள் நடப்பது இத்தனை நாள்களாகத் தெரியாமல்போய்விட்டதே...’’ என்று சக அதிகாரிகளிடம் சொல்லி வருத்தப்பட்டவர், அந்த எஸ்.ஐ-யை உடனடியாக டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார். ``வசூலில் ஒரு பங்கு எஸ்.பி அலுவலகத்துக்கும் செல்கிறது’’ என்று எஸ்.ஐ அந்த ஆடியோவில் திகில் கிளப்பியிருப்பதால், அது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டவர், ‘‘தப்பு பண்ணினா, ரெக்கார்டில் கைவைத்துவிடுவேன்” என்று தனிப்பிரிவுக் காவலர்கள் மற்றும் அதிகாரிகளைக் கடுமையாக எச்சரித்திருக்கிறாராம்!

தனி ரூட்டு... எல்லாத்துக்கும் ரேட்டு!

திருச்சி மாநகரத்தில், கரையோர காவல் நிலையத்தில் பணியாற்றும் திடகாத்திரமான இன்ஸ்பெக்டர் ஒருவர், கல்லாகட்டுவதில் தனி ரூட் போடுவதோடு, நடவடிக்கையிலிருந்தும் அதே ரூட்டில் தப்பித்துவிடுகிறாராம். மற்ற காவல் நிலையங்களைவிட இவரின் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் நிலையத்தில் க்ரைம் ரேட் அதிகமிருந்தும், எஃப்.ஐ.ஆரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு, எல்லாவற்றுக்கும் ஒரு ரேட் ஃபிக்ஸ் செய்து கல்லா கட்டிவிடுகிறாராம். ஹோட்டல் மெனுகார்டையும் மிஞ்சும் வகையில் குற்றத்துக்குத் தகுந்தபடி அவர் வைத்திருக்கும் ரேட் கார்ட்டைப் பார்த்து, சக இன்ஸ்பெக்டர்களே அதிர்ந்துகிடக்கிறார்கள். இவர் குறித்து, ஆதாரங்களுடன் உயரதிகாரி ஒருவருக்குப் புகார் சென்றதும், அதற்கும் ஒரு ரேட் ஃபிக்ஸ் செய்து, நடவடிக்கையிலிருந்து தப்பித்திருக்கிறார் அந்த இன்ஸ்பெக்டர்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘இவரைத் தேடுறதே ஒரு வேலையா இருக்கே!’’

கரூரின் தென்கிழக்கு திசையிலிருக்கும் காவல் நிலையத்தில் பணியாற்றும் இனிப்பான எஸ்.எஸ்.ஐ ஒருவர், எப்போதும் உற்சாகத்திலேயே மிதக்கிறாராம். அதிலும் டிசம்பர் மாதக் குளிரோடு மழைச்சாரலையும் கண்டால், தோகை விரித்தாடும் மயிலைப்போல் உற்சாகமாகி பகலிலேயே ரவுண்டை ஆரம்பித்து, பரவசநிலையை அடைந்துவிடுகிறாராம். இப்படித் தன்னிலை மறந்து, கண்ட இடத்தில் விழுந்துகிடப்பதால், ‘‘இவரைத் தேடுறதே ஒரு வேலையா இருக்கே...’’ என்று சக காவலர்கள் சலிப்போடு புலம்புகிறார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

உழவர் சந்தையில்... உற்சாக மிகுதியில்...

‘உழவர் சந்தைப் பகுதியில ரெண்டு போலீஸ்காரங்க யூனிஃபார்மோட குடிபோதையில மயங்கிக்கிடக்குறாங்க’ - நீலகிரி மாவட்டம், குன்னூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இப்படியொரு தகவல் வரவும், பதறிப்போனார்கள் போலீஸார். ‘நம்ம ஸ்டேஷன் போலீஸ்காரங்க எல்லாரும் டூட்டியிலதான் இருக்காங்க. ஓவர்... ஓவர்...’ என்று சற்று நேரத்திலேயே தகவல் கிடைக்கவும், ஆசுவாசம் அடைந்திருக்கிறார்கள். ‘அப்ப அவங்க யாரு?’ என்ற குழப்பத்தோடு ஸ்பாட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது, மதுபோதையில் மயங்கிக்கிடப்பது வேறொரு ஸ்டேஷனைச் சேர்ந்த எஸ்.எஸ்.ஐ-யும், தலைமைக் காவலரும்தான் என்பது தெரியவந்திருக்கிறது. அவசர அவசரமாக அவர்களை மீட்டு, போதை தெளியவைத்து, யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று கமுக்கமாகவே அனுப்பிவைத்திருக்கிறார்கள். அப்படியும், விவகாரம் எஸ்.பி சசிமோகன் வரை செல்லவே, கடுப்பான அவர் உடனடியாக போதை போலீஸார் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்!

ஜூனியர் வாக்கி டாக்கி

காக்கிகளின் ‘பங்கு’ கூட்டணி!

‘அந்தக் காவல் நிலைய எல்லைக்குள் ‘தாரா’ளமாகக் குற்றச் சம்பவங்கள் நடந்தாலும், மாவட்டக் காவல்துறை தலைமையின் கவனத்துக்குச் செல்வதே இல்லை’ என்ற குரல்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் உரத்து ஒலிக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட ஸ்டேஷன் போலீஸாரோடு கூட்டணி போட்டுக்கொண்டு, தங்களுக்கான பங்கை கச்சிதமாக வசூல் செய்துகொள்ளும் தனிப்பிரிவு போலீஸார், தலைமைக்குச் செல்ல வேண்டிய தகவல்களையும் மூடிமறைத்துவிடுகிறார்களாம். சமீபத்தில் அந்தக் காவல் நிலையத்தில், காவல் தெய்வத்தின் பெயரைக்கொண்ட காவலருக்கு, தனிப்பிரிவு காவலர் தலைமையில் ஸ்டேஷனிலேயே கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய போட்டோக்கள், வாட்ஸ்அப்பில் வலம்வந்து விமர்சனங்கள் அனல் பறக்கின்றன. ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், டாஸ்மாக் பார் நடத்துவது, மணல் கடத்தல் எனப் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுவரும் ஆளுங்கட்சிப் புள்ளி ஒருவரும், அவருடன் நட்பிலிருக்கும் காவலர் ஒருவரும் அண்மையில் கொடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா சென்றதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது!

ஜூனியர் வாக்கி டாக்கி

அப்செட்டில் மெமோ மாஜிஸ்ட்ரேட்!

டெல்டாவில் புதிதாக உதயமான மாவட்டத்தில், ரஜினி படப் பெயர்கொண்ட பெண் இன்ஸ்பெக்டர் பணியாற்றிவருகிறார். கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களை ‘நட்சத்திர’ மாஜிஸ்ட்ரேட்டிடம் இன்ஸ்பெக்டர் ஆஜர்படுத்தியபோது, அவரை ‘வெளியே போ’ என மாஜிஸ்ட்ரேட் ஒருமையில் பேசியதாகவும், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு சட்டவிதிகளை மீறி நேரடியாக மெமோ அனுப்பியதாகவும் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. மெமோவுக்குத் தகுந்த பதிலளித்த இன்ஸ்பெக்டர், நகலை காவல் உயரதிகாரிகளுக்கும், உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு, ‘காவல்துறைக்கு நேரடியாக நீங்கள் எப்படி மெமோ தரலாம்?’ என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதனால், சட்டச் சிக்கலிலிருந்து தப்பிக்க மன்னிப்புக் கடிதம் தரும்படி மாஜிஸ்ட்ரேட் கேட்க, இன்ஸ்பெக்டர் மறுத்துவிட்டாராம். அதனால், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்த வெற்றியின் பெயரைக்கொண்ட காவல்துறை உயரதிகாரியைச் சந்திக்க முடிவு செய்து, அது நிறைவேறாததால் அப்செட்டில் இருக்கிறாராம் மாஜிஸ்ட்ரேட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு