பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

ஓசி சரக்கில் காக்கி பார்ட்டி!

நீலகிரி மாவட்டத்தில், பக்கத்து மாநில எல்லையோர காவல் நிலையத்தில் பணிபுரியும் ‘மகிழ்ச்சி’யான இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கண்டாலே, அப்பகுதி டாஸ்மாக் ஊழியர்கள் பதறுகிறார்கள். அடிக்கடி பிறந்தநாள், திருமணநாள், வரவேற்பு விழா, பிரிவு உபசார விழா என்றெல்லாம் சொல்லி டாஸ்மாக் கடைகளிலிருந்து பெட்டி பெட்டியாக ஓசியில் மதுபானங்களை அள்ளிச் சென்று, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறாராம். இது போதாதென்று, மாத மாமூலையும் கறாராக வசூல் செய்துவிடுகிறாராம். பிரச்னைக்குத் தீர்வு காண முடியாமல் தவித்த டாஸ்மாக் பணியாளர்கள், அடுத்து கையாண்ட யுக்திதான் ஹைலைட். பர்ச்சேஸ் ஷீட்டில் தங்கள் கடைகளுக்கு மட்டரகச் சரக்குகளை மட்டுமே கேட்டு இறக்கியிருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பார்ட்டி என்று வந்த இன்ஸ்பெக்டர் தரப்பினர், தாங்கள் கேட்ட எந்தச் சரக்கும் கடைகளில் இல்லாததால், வெறுப்படைந்து வெறும் கையுடன் திரும்பிவிட்டனராம்!

வில்லங்க அதிகாரி... விவகாரமான கேள்விகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

திருச்சி மாநகரில் அமைந்திருக்கும் தங்கமான காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர், புகார் கொடுக்க வரும் பெண்களிடம் ரொம்பவே உரிமை எடுத்துக் கொண்டு ‘அன்பு’டன் நடந்துகொள்கிறாராம். சில தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், விசாரணை என்ற பெயரில் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருக்கிறாராம். அந்தப் பெண், ‘புகாரே வேண்டாம்’ என அலறியடித்துக்கொண்டு ஓடிவிட்டாராம். ஏற்கெனவே, முன்னாள் முதல்வர் ஒருவரின் பெயரிலான காவல் நிலையத்திலும் இதே விவகாரத்தில் சிக்கியதால்தான், அவர் இடமாற்றம் செய்யப்பட்டாராம். தவிர, பக்கத்து மாவட்டம் ஒன்றில் பணியாற்றியபோது உயரதிகாரிக்கு ‘சகாயம்’ செய்வதற்காக, இவர் வந்த கார் விபத்தில் சிக்க... அதை மூடி மறைப்பதற்குள் பெரும்பாடாகிப் போனதாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

தங்கமுலாம் பூசப்போகும் சி.பி.ஐ?

சென்னை சுரானா ஜுவல்லரி நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளில் 103 கிலோ மாயமான விவகாரத்தில், ஓய்வுபெற்ற மூவரிடமும், தற்போது பணியிலிருக்கும் ஒருவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி சிவபெருமான் அதிகாரியிடம் விசாரணையின்போது கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்க... அவரோ, ‘நான் பண்ணாத விசாரணையா... நான் யூஸ் பண்ணாத டெக்னிக்கா? எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்’ என்ற ரேஞ்சில் திரும்பத் திரும்ப பதில் அளித்ததில், நொந்து போயிருக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். இவரைத் தொடர்ந்து டி.ஜி.பி அந்தஸ்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. பிறகு தென் மாநிலம் ஒன்றில் அரசியல் ஆலோசகராக இருக்கும் அதிகாரியிடமும், தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குத் தகவல்களைச் சொல்லும் முக்கிய பதவியிலிருக்கும் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. இவரே இப்படியென்றால்... அவர்கள் என்னவெல்லாம் சொல்லப்போகிறார்களோ என்று கலக்கத்திலிருக்கிறது சி.பி.ஐ தரப்பு. இந்த டார்ச்சரால் விரைவில் சி.பி.ஐ தரப்பே இந்த விவகாரத்தில் தங்கமுலாம் ‘பூசி’ மெழுகிவிடுவார்கள் என்கிறார்கள் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ஓடி ஒளியும் உளவு அதிகாரி!

நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு காவல்துறையினர் சிலர், அரசுத் தரப்புக்கு முன்கூட்டியே தகவல்களைத் தெரிவிக்கிறார்களோ இல்லையோ, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்குத் தக்க நேரத்துக்குத் தகவல் அனுப்பிவிடுகிறார்கள். தேர்தல் நெருங்கிவரும் சூழலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முக்கியப் பிரமுகர்களைச் சந்திப்பவர்கள், துப்பு தகவல்களைத் துண்டுச்சீட்டில் கொடுத்து, அதற்குப் பரிசாக நோட்டுகளை அள்ளிவருகிறார்கள். இப்படித்தான் ஒரே தொகுதியில் எதிரும் புதிருமாக அரசியல் செய்துவரும் கழகப் புள்ளிகள் இருவரிடம் ‘மகா மட்டமான’ ஒரே தகவலை போட்டுக்கொடுத்து பரிசுத்தொகையைப் பெற்றிருக்கிறார் உளவுத்துறை அதிகாரி ஒருவர். ஒருகட்டத்தில் அதிகாரியின் தில்லாலங்கடி வேலை இரு புள்ளிகளுக்கும் தெரியவர... இருவரின் கண்களிலும் படாமல் ஓடி ஒளிந்துவருகிறாராம் உளவாளி!

ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘துரைக்கு ரொம்பதான் செல்லம்!’

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களைப் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்துவிடாதபடி, நீதிமன்றப் பணியிலுள்ள காவலர்கள் பயங்கர கெடுபிடி காட்டுகிறார்கள். குறிப்பாக, உளவுத்துறை காவலர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவது, அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பது மட்டுமல்லாமல், பத்திரிகையாளர்களை அசிங்கமாகத் திட்டும்படி அவர்களின் குடும்பத்தினரைத் தூண்டிவிடுகிறாராம். இதைப் பற்றி காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ‘துரைக்கு ரொம்பதான் செல்லம் கொடுக்குறாங்க’ என்று புலம்புகிறார்கள் பத்திரிகையாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு