பிரீமியம் ஸ்டோரி

‘‘என்னை மாத்திடுங்க!’’

ஜூனியர் வாக்கி டாக்கி

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தனிப்படைப் பிரிவில், செல்வமான சாமி பெயர்கொண்ட பெண் அதிகாரி ஒருவர் நீண்டகாலமாகப் பணியாற்றிவந்தார். தனது கட்டுப்பாட்டில் வரும் காவலர்கள் மூலம் வசூலில் செம கல்லாகட்டிவந்த அவர், தொடர் புகார்களால் சமீபத்தில் இடமாறுதல் செய்யப்பட்டு, வேறோர் அதிகாரி பணியில் சேர்ந்திருக்கிறார். பணிக்குச் சேர்ந்த முதல் நாளே தனிப்பிரிவு காக்கிகளுடன் கூட்டம் போட்ட அந்த அதிகாரி, ``நாம மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கோம். நாம நேர்மையா இருக்குறது ரொம்ப முக்கியம்’’ என்றெல்லாம் வகுப்பெடுத்திருக்கிறார். அதைக் கேட்ட தனிப்பிரிவு காவலர்களோ, ‘இவர் நமக்கு சரிப்பட்டு வர மாட்டார்’ என்று கணக்கு போட்டு வழக்கம்போலவே வசூல் மழையில் திளைக்கிறார்கள். பொறுத்துப் பார்த்து பொறுத்துப் பார்த்து வெறுத்துபோன அதிகாரி, “என்னால இவங்களை மாத்த முடியாது... என்னை வேற இடத்துக்கு மாத்திடுங்க’’ என்று மேலதிகாரியிடம் புலம்பியிருக்கிறாராம்.

நடுத்தெருவில் மூதாட்டி... சிக்கலில் அதிகாரிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மூதாட்டி ஒருவர், கண்ணீர்மல்கவைக்கும் புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் தன் மகன்கள், தன்னை ஏமாற்றி வீட்டை அபகரித்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்தப் புகாரின்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அந்த மூதாட்டி, காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார். ஆனால் ‘குழந்தை’யான இன்ஸ்பெக்டர், ‘இது சிவில் கேஸ்’ என்று சொல்லி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தங்குவதற்கு இடமில்லாமல் மூதாட்டி நடுத்தெருவுக்கு வந்துவிட்டார். இதை வழக்கறிஞர் ஒருவர், மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகாராக அளித்திருக்கிறார். மூதாட்டியின் புகாரைக் கண்டு கொள்ளாத காவல்துறையின் இனிப்பான உயரதிகாரிக்கும், ‘குழந்தை’ இன்ஸ்பெக்டருக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம்.

வாக்கி டாக்கி சண்டை... பழைய பொருள்களும் அபேஸ்!

ஜூனியர் வாக்கி டாக்கி

டெல்டா மாவட்டத்தின் மைய நகரத்தின், கிழக்கு பகுதியிலிருக்கும் காவல் நிலையத்தில் ‘பூ’வான பெண் காவலர் ஒருவர் பணியாற்றிவருகிறார். காவலர் குடியிருப்புப் பகுதிக்கு அடிக்கடி டூட்டிக்குச் செல்லும் அந்தக் காவலர், சக காவலர்களுடன் வாக்கி டாக்கியிலேயே சண்டையிடுகிறாராம். மேலதிகாரிகள் யாராவது கண்டித்தால் அந்தப் பெண் காவலர், பெட்ரோல் கேனுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று, ‘தற்கொலை செய்துகொள்வேன்’ என மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். அவரது குணாதிசயத்தை அறிந்த மேலதிகாரிகளில் சிலர், ‘நமக்கேன் வம்பு’ என்று எதையும் கண்டுகொள்வதில்லையாம். இதற்கிடையே குடியிருப்பு வளாகத்திலிருக்கும் பழைய பொருள்கள் சில மாயமாகியிருக்கின்றன; மரங்கள் சிலவும் இரவோடு இரவாக மாயமாகியிருக்கின்றன. விசாரிக்க வேண்டிய அதிகாரிகள் கப்சிப்பென்று இருக்கிறார்கள்.

ஒரு லட்ச ரூபாய் அபேஸ்! - இன்ஸ்பெக்டரை ஏமாற்றிய டிரைவர்

ஜூனியர் வாக்கி டாக்கி

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலிருக்கும் காவல் நிலையத்தில் அன்பான பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ஸ்மார்ட்போன் குறித்த தொழில்நுட்ப அறிவு பெரிய அளவில் கிடையாதாம். மேலும், அந்த இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை சார்பில் டிரைவர் நியமிக்கப்படாததால், தனிப்பட்ட முறையில் சிவனின் பெயரைக் கொண்ட இளைஞரை நியமித்திருக்கிறாராம். இன்ஸ்பெக்டர் கூறும்போதெல்லாம் ‘கூகுள் பே’ மூலம் அந்த நபர் சிலருக்குப் பணத்தை அனுப்பிவந்திருக்கிறார். இந்தநிலையில், இன்ஸ்பெக்டரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் குறைந்திருப்பது, நீண்டநாள் கழித்தே அவருக்குத் தெரியவந்திருக்கிறது. அதிர்ச்சியுடன் இன்ஸ்பெக்டர் விசாரிக்க... டிரைவரின் தில்லாலங்கடி வேலை தெரியவந்திருக்கிறது. எப்படியோ விஷயம் மேலதிகாரிகள் வரை போய்விட, பணத்தை இழந்த இன்ஸ்பெக்டருக்கு இன்னொரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ‘‘டிபார்ட்மென்ட் அனுமதியில்லாம எப்படி தனிப்பட்ட முறையில டிரைவரை வெச்சீங்க?’’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் உயரதிகாரிகள். ‘தேள்’ கொட்டியதுபோலத் தவிக்கிறாராம் இன்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு