Published:Updated:

என்கவுன்ட்டர் என்னும் திடீர் பாயசம்!

என்கவுன்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
என்கவுன்ட்டர்

ஒரு நிரபராதி தன்னைக் காத்துக்கொள்ளும்விதமாக மூன்று உரிமைகளை வழங்கியுள்ளது

என்கவுன்ட்டர் என்னும் திடீர் பாயசம்!

ஒரு நிரபராதி தன்னைக் காத்துக்கொள்ளும்விதமாக மூன்று உரிமைகளை வழங்கியுள்ளது

Published:Updated:
என்கவுன்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
என்கவுன்ட்டர்

ஹைதராபாத்தில் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டருக்குப் பிறகு சமூக வலைதளத்தில் வந்த பதிவுகளைப் பார்க்கும்போது சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை. ஒரு வழக்கறிஞர் நண்பர், ‘இனி எவனாவது மனித உரிமை என்று வாங்கடா பார்க்கலாம்!’ எனப் பதிந்திருந்தார். அதைப் படித்தவுடன் அவரைத் தொடர்புகொண்டு, ‘‘சட்டம் படித்து வக்கீல் தொழில் செய்யும் நீங்களா இவ்வாறு பதிவிட்டீர்?’’ என்று கேட்டேன். நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவர் வருத்தம் தெரிவித்தார்.

படித்தவர்களின் பதிவுகளே இப்படியெனில், அரைகுறையாகப் படித்தவர்களுடைய பதிவுகள் எப்படி இருக்கும் என யூகித்துக் கொள்ளலாம். என்கவுன்ட்டர் நடந்த தினம் டிசம்பர் 6-ம் தேதி. அன்றைய தினம்தான் அண்ணல் அம்பேத்கர் மறைந்த தினம். அதேபோன்ற ஒரு தினத்தில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடிப்பைக் கண்டித்து உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியதை மறந்துவிட முடியாது. அம்பேத்கர் தலைமையில் அரசமைப்பு நிர்ணய சபை இயற்றிய அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளையும் மறந்துவிட முடியாது.

என்கவுன்ட்டர்
என்கவுன்ட்டர்

அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் சுதந்திர உரிமை அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளதுடன், அந்த உரிமையைப் பறிப்பதற்கு முறையாக எழுதப்பட்ட சட்டத்தால் மட்டுமே முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் வருவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டன. 1860-ல் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப்படி, வன்புணர்ச்சி மற்றும் கொலை செய்பவர்களுக்கு ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை மட்டுமல்ல, மரண தண்டனையும் விதிப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றத்தைத் துப்புத்துலக்குவதற்கு காவல்துறைக்கும், விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றங்களுக்கும்தான் 1898-ல் அதிகாரம் வழங்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீதிமன்றங்கள் முன்னால் சாட்சியம் எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்கான இந்தியச் சான்றியல் சட்டம் 1872-ல் இயற்றப்பட்டது. வெள்ளைக்காரர்கள் எழுதிய அந்தச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, ‘குற்றவாளியிடம் காவல்துறையினரால் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் சட்டப்படி செல்லத்தக்கதல்ல’ எனக் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிலேயேகூட, அவர்கள் நமது இந்திய காவல்துறையை நம்பவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், காவல்துறையினர் குற்றத்தை நிரூபிக்க, குற்றவாளியை சித்ரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிடுவர் என்பதுதான் காரணம்.

என்கவுன்ட்டர்
என்கவுன்ட்டர்

பிறகு இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், ஒரு நிரபராதி தன்னைக் காத்துக்கொள்ளும்விதமாக மூன்று உரிமைகளை வழங்கியுள்ளது. ஒன்று, குற்றம்சாட்டப்பட்டவர் தன் குற்றத்தைத் தானே நிரூபிக்கும்விதமாக எந்தவிதமான தன்னிலை விளக்கமும் அளிக்கத் தேவையில்லை. இரண்டாவது, கைதுசெய்யப் பட்டவுடனேயே 24 மணி நேரத்தில் நீதித்துறை நடுவர்முன் நிறுத்தப்பட வேண்டும். மூன்றாவது, தன்மீது நடைபெறும் குற்ற விசாரணையில் தான் விரும்பும் வக்கீலை வாதாடுவதற்கு வைத்துக்கொள்ளலாம். அதற்கு வசதியில்லையென்றால், அரசு செலவில் நீதிமன்றமே அவரைப் பாதுகாப்பதற்கு வக்கீலை அமர்த்தும்.

மக்கள் கோபத்துக்கு அடிபணியும் அரசு!

என்கவுன்ட்டர் என்னும் திடீர் பாயசம்!

தவிர, பாலினச் சமத்துவமற்ற தன்மையால் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் இழைக்கப்படுவதைத் தடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக, நாடாளுமன்றமே குற்றவியல் சட்டங்களைப் பலமுறை திருத்தி சிறப்பு விசாரணை நடைமுறைக்கும், கடும் தண்டனைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிர்பயா மரணத்துக்குப் பிறகு நாட்டில் நடைபெற்ற கொந்தளிப்புகளைச் சமாளிக்கும்விதமாக, ‘16 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் குற்றம் செய்தாலும், அவர்களை சாதாரண நீதிமன்றத்தில் விசாரித்து மரண தண்டனையும் அளிக்கலாம்’ என்று சட்டம் திருத்தப்பட்டது. இது சிறார்கள் பற்றிய சர்வதேசக் குற்றவியல் விதிகளுக்கு முரணானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பணிந்தது. ஆனால், சட்டங்கள் கடுமையாக்கப் படுவதாலேயே இப்படிப்பட்ட குற்றங்கள் குறைந்துவிடும் என நம்புவது சரியல்ல. தொடர்ந்து அதிகரித்துவரும் வன்புணர்ச்சிக் குற்றங்களே இதைச் சுட்டிக்காட்டுகின்றன. தேசிய குற்றங்களுக்கான ஆவணக்காப்பகத் தகவலின்படி, கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் பெருகிவருகின்றன. நாடு முழுவதும் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சங்களைத் தாண்டிவிட்டது.

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; குற்றங்களைத் துப்புத்துலக்குவதற்கு காவல்துறையினர் அறிவியல்ரீதியான வழிமுறைகளை அதிகரிக்கவில்லை; சாதி மற்றும் வர்க்க பேதமுள்ள சமுதாயத்தில் காவல்துறையினர் சமனற்ற நிலையில் செயல்படுகின்றனர்; நீதிமன்றங்களில் குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளால் தப்பித்துவிடுகின்றனர்; வக்கீல்களின் உதவியுடன் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படும் வழக்குகளால், குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். இவற்றையெல்லாம் கண்டுவரும் மக்கள், பொறுமையை இழந்துவிட்டனர். எனவேதான், கடுமையான குற்றங்கள் இழைக்கப்படும்போதெல்லாம் மக்களின் கோபம் பொங்குகிறது. இது தரும் அழுத்தத்தால், என்கவுன்ட்டர் நிபுணர்களாக காவல்துறையினர் உருவாகிவருகின்றனர். மக்களும் இப்படிப்பட்ட திடீர் தண்டனையை மனதளவில் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டனர்.

சமநிலை தவறும் நீதிமன்றங்கள்!

நீதிமன்றங்களும் சில நேரங்களில் இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு வடிகால் அமைத்துத் தந்துவிடுகின்றன. 1980-களில் அதிகரித்துவந்த வரதட்சணைக் கொடுமை கொலைகளைக் கட்டுப்படுத்த, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி குமன்மன் லோதா, ஜெய்ப்பூரில் உள்ள மைதானம் ஒன்றில் குற்றவாளியைப் தூக்கிலிட உத்தரவிட்டார். அதிர்ச்சியடைந்த அன்றைய அட்டர்னி ஜெனரல், உச்ச நீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதினார். அதை வழக்காக எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், பொதுமக்கள் முன்னிலையிலான தூக்குத் தண்டனையை ரத்துசெய்தது. சட்டத்தின்படியே நீதிபதிகள் செயல்பட வேண்டும் என அறிவித்தது. மேலும், கடுமையான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தீர்ப்பளித்தது.

நீதிமன்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட அதிகாரத்தை என்கவுன்ட்டர் என்ற பெயரில் காவல்துறை சர்வசாதாரணமாகக் கடைப்பிடிக்கிறது.
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

நீதிமன்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட அதிகாரத்தை என்கவுன்ட்டர் என்ற பெயரில் காவல்துறை சர்வசாதாரணமாகக் கடைப்பிடிக்கிறது. சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்து தமிழக மக்கள் ஆத்திரமடைந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய மக்களில் 14 பேரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்திய கொடுமை, மனதைவிட்டு அகலவில்லை.

என்கவுன்ட்டர் என்னும் திடீர் பாயசம்!

ஆனாலும், மக்கள் உணர்வுகளை மூலதனமாக்கி, விசாரணை தொடங்கும் முன்பே ‘இவர்கள்தான் குற்றவாளிகள்’ என்ற பிம்பத்தைக் கட்டமைத்து தங்கள் துப்பாக்கிகளின் பசியைத் தீர்த்துவைத்ததுடன், மக்களிடையே வீரப் புருஷர்களாக வலம்வருகிறார்கள் காவல்துறையினர். ஹைதராபாத் என்கவுன்ட்டர் காவல் அதிகாரியை மக்கள் தோளில் சுமந்து, பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாகச் சென்றதுடன், வழியில் உள்ளவர்கள் வாயில் லட்டுகளைத் திணித்துச் சென்றனர். அதைப் பார்க்கும்போது இன்னும் நம் அரசமைப்புச் சட்டத்தையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையான, ‘நூறு குற்றவாளிகளைத் தப்பவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கூற்றையும் புரிந்துகொள்ளவில்லை என்ற வருத்தம் ஏற்படுகிறது.

என்ன நடந்தது என்கவுன்ட்டரில்?

ஹைதராபாத்தில் நான்கு இளைஞர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுகளைப் பார்ப்போம்.

குற்றவியல் நடைமுறைப்படி நான்கு பேரை கைதுசெய்த காவல்துறையினர், குற்றவியல் நடுவரிடம் மனுசெய்து ஒரு வாரத்துக்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத்தரவு பெற்றனர். பிறகு, வழக்கமான நடைமுறைப்படி சம்பவம் நடந்த இடத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களில் இருவர் காவல்துறையினரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க எண்ணி, தப்பித்து ஓட முயன்றதால் காவல்துறை அவர்களைச் சுட்டு வீழ்த்த நேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்தக் கதையை எவரும் நம்பவில்லையென்றாலும் என்கவுன்ட்டரை மக்கள் வரவேற்கின்றனர்.

தற்போது இந்த என்கவுன்ட்டரை ஆராய்வதற்கு, தேசிய மனித உரிமை கமிஷன் முன்வந்துள்ளது. இதற்கிடையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்களை அடக்கம் செய்யக் கூடாது; பிரேதங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும்’ என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை கொல்லப்பட்ட இளைஞர்களின் உடலை மறுபிரேதப்பரிசோதனை செய்து, அந்த உடலில் உள்ள காயங்கள் மற்றும் குண்டு துளைத்தப் பகுதிகளை ஆராய்வதன்மூலம், அவர்கள் தப்பி ஓடியபோது சுடப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்ட பிறகு இறந்த உடல்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம்.

எப்படி இருப்பினும், இறந்துபோன நான்கு இளைஞர்கள்தான் குற்றவாளிகள் என்று, எந்த சாட்சியங்களின் அடிப்படையில் காவல் துறையினர் முடிவுக்கு வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. இதற்கு பதில் அளிக்கும்விதமாக இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கும் சி.சி.டி.வி கேமராக் காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வன்புணர்ச்சி மற்றும் கொலைக்குற்றத்தில் நான்கு இளைஞர்களுக்கும் தனித்தனி பங்கு என்ன என்பதையும், இதற்குப் பின்னணியில் யாரெல்லாம் செயல்பட்டார்கள் என்பதையும் விளக்கக் கடமைப்பட்டுள்ள காவல்துறை, என்கவுன்ட்டர் என்ற குறுக்குவழியைப் பின்பற்றியுள்ளது.

ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு, சட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு மட்டுமே வழிவகுக்க வேண்டும் என்ற ஆதார உரிமையை மக்கள் மறந்துவிட்டால், அந்த நாடு பேயாட்சி செய்யும் நாடாக மாறிவிடும்.
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

நான்கு பேர்தான் குற்றவாளி என எடுத்துக்கொண்டாலும், அதில் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து குற்றத்தை நிரூபிப்பதில் உதவி செய்தால், அவருக்கு நீதிமன்றம் குறைந்த தண்டனை வழங்கும் வாய்ப்பும் இருந்திருக்கும். அதேபோல் நான்கு பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பதற்கான வாய்ப்புகளும் நீதிமன்ற விசாரணையில் கிடைத்திருக்கலாம். மேலும், அவர்கள் செய்த குற்றத்துக்கு மரண தண்டனை தவிர வேறு தண்டனை எதுவும் அளிக்க முடியாது என்ற முடிவுக்கான காரணத்தை செஷன்ஸ் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மேல்முறையீடு செய்யவில்லை என்றாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி கட்டாயமாக அவர்களின் வழக்குகள் உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டாலொழிய, அரசு அவர்களைத் தூக்கிலிட முடியாது.

நிர்பயா வழக்கில் இந்த நடைமுறைகளெல்லாம் முடிந்த பிறகும், அந்தக் குற்றவாளியைத் தூக்கிலிடுவதற்கான உரிய நபரும் தூக்குக்கயிறும் தயாராக இல்லை என்பதால், அவர் இன்னும் மரணக்கொட்டடியில் காத்திருக்கிறார். இதற்கெல்லாம் காத்திருக்காமல் புலனாய்வு, குற்ற விசாரணை மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த நிறுவனமாக, ஹைதராபாத் காவல்துறை தன்னை மாற்றிக்கொண்டுள்ளது.

என்கவுன்ட்டர் என்னும் திடீர் பாயசம்!

ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு, சட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு மட்டுமே வழிவகுக்க வேண்டும் என்ற ஆதார உரிமையை மக்கள் மறந்துவிட்டால், அந்த நாடு பேயாட்சி செய்யும் நாடாக மாறிவிடும். அப்படிப்பட்ட நாட்டில் பிணங்களைத் தின்னும் சாத்திரங்கள்தான் மிஞ்சும் என்ற கூற்று சொல்லித் தெரியத் தேவையில்லை. நீதித்துறை நடைமுறைகளால் நீதி கிடைக்க காலதாமதமாகிறது என்ற ஆதங்கம் புரிகிறது. அதை முடுக்குவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஹைதராபாத் என்கவுன்ட்டர், ஒரு கொலைக்குப் பழிவாங்கும்விதமாக காவல்துறை செய்த மறுகொலை. இதைத்தான் அண்ணல் காந்தியடிகள், `கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும்’ என எச்சரித்தார். மாறு கை, மாறு கால் என்ற குற்றவியல் அடிப்படையை புத்தர் பிறந்த இந்த மண் என்றைக்கும் ஏற்றுக்கொண்டதில்லை என்பதை நாம் உணர வேண்டும். இந்தியத் தலைமை நீதிபதி பாப்டே, ‘திடீர் நீதி என்பது சட்ட நடைமுறையன்று’ என எச்சரித்துள்ளதை நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.