அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

வெறுப்பு அரசியலுக்கு என்னதான் தீர்வு?வெறுப்பு அரசியலுக்கு என்னதான் தீர்வு?
News
வெறுப்பு அரசியலுக்கு என்னதான் தீர்வு?

எவருடைய வழிபாட்டுத்தலத்தை அசிங்கப்படுத்துவதையும் (அ) இதர மதத்தினரை அவமானப்படுத்துவதையும் தடுக்கும் விதமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 295-வது பிரிவு கொண்டுவரப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்பு, ‘ஆர்டிகிள் 15’ (அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு) என்ற தலைப்பில் ஓர் இந்திப் படம் வெளியானது. “அரசமைப்புச் சட்டத்தில் 395 பிரிவுகள் இருப்பினும், ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று அதன் இயக்குநரைக் கேட்டபோது அவர், “அரசமைப்புச் சட்டத்தின் இதயம் போன்றது 15-வது பிரிவுதான்” என்று கூறினார்.

பாகுபாடும் நல்லிணக்கமும்!

மேலும், “2,000 ஆண்டுகளாக சமயம், சாதி, மொழி, இனம், பகுதி, பாலினம் என்று பிரிந்திருந்த ஒரு சமுதாயத்தை ஒன்றிணைக்கும் வகையில் முதன்முறையாகப் பேசியது இந்தப் பிரிவுதான். மேற்கண்ட காரணங்களுக்காக அரசு எவ்வித வேறுபாடும் காட்டாது என்பதை அடிப்படை உரிமையாக வரையறுத்திருக்கிறார்கள். எனவேதான் அந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார். ‘அரசு மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பாகுபாடு காட்டாது’ என்று கூறியிருப்பினும், தனிநபர்களும் குழுக்களும் அப்படிப்பட்ட வேறுபாடுகளைப் பிரதிபலிக்க முடியுமா என்ற கேள்வி எழலாம்.

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

அரசமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவில், `தீண்டாமையை எந்த வடிவிலும் வெளிக்காட்ட முடியாது’ என்று கூறப்பட்டிருப்பினும், சமயம், சாதி பற்றிய கருத்துகளை வெளியிடுவதோடு, அதன் மூலம் அமைப்புரீதியாகவும் கருத்துரீதியாகவும் வெறுப்பு அரசியலை உருவாக்குவது சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் அதைப் போன்றதே. மத நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதும், அதைக் கடைப்பிடிப்பதும், அதற்கு ஆதரவு பிரசாரங்கள் செய்வதும் அடிப்படை உரிமையாக்கப்பட்டிருக்கும் போதும், இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பதை அரசமைப்புச் சட்டத்தின் ஆரம்ப வரிகளிலேயே கூறியிருக்கின்றனர்.

மேலும் 1976-ம் வருடம் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் 51A என்ற பிரிவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படைக் கடமைகள் என்னென்ன என்பது வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய உட்பிரிவான (e) பிரிவில் மதம், மொழி, பகுதி இவற்றையெல்லாம் கடந்து ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் பேணவேண்டியது அடிப்படைக் கடமையாக்கப்பட்டிருக்கிறது.

வெறுப்பு அரசியலுக்கு என்னதான் தீர்வு?

கடவுள் மறுப்பு குற்றமில்லை... மத துவேஷமே குற்றம்!

ஆங்கிலேயர்கள் இந்தியாவை முழுமையாகத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, குற்றவியல் பற்றிய சட்டம் இல்லாமையைக் கருத்தில்கொண்டு, 1860-ல் இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதை நிறைவேற்றியபோதே இங்கிலாந்தில் கடவுள் மறுப்பும், மத துவேஷமும் கடுமையான குற்றங்களாக்கப்பட்டிருந்தன. ஆனால், அதே சமயத்தில் இந்தியாவில் அப்படிப்பட்ட ஒரு பிரிவை தண்டனைச் சட்டம் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், இங்கிலாந்தைப் பொறுத்தவரை கிறித்தவம் அரச மதமாக இருந்தது. எனவே, அதைப் பாதுகாக்கவேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், அவர்கள் ஆட்சியைப் பிடித்த இந்தியாவிலோ பல்வேறுவிதமான மதங்களும், நம்பிக்கைகளும், நடவடிக்கைகளும் நடைமுறையில் இருந்தன.

எவருடைய வழிபாட்டுத்தலத்தை அசிங்கப்படுத்துவதையும் (அ) இதர மதத்தினரை அவமானப்படுத்துவதையும் தடுக்கும் விதமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 295-வது பிரிவு கொண்டுவரப்பட்டது. பின்னர், 1927-ம் வருடம் 295A என்ற பிரிவின் மூலம் மற்றவர்களுடைய மத உணர்ச்சிகளையும், நம்பிக்கையையும் தகர்க்கும்விதமாகத் திட்டமிட்டுச் செயல்படுவது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. இது போதாதென்று 153A என்ற பிரிவின் கீழ் இரு தரப்பினரிடையே மதம், இனம், பிறப்பிடம், தங்குமிடம், மொழி இவற்றின் காரணமாக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், பகைமை உண்டாக்குவது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. இதே பிரிவின் கீழ் 1972-ம் வருடம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அது போன்ற மதவாத அமைப்புகள் ஆயுதப் பயிற்சி, தேகப் பயிற்சி போன்ற நடவடிக்கையால் வன்முறையைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது.

வெறுப்பு அரசியலுக்கு என்னதான் தீர்வு?

வெறுப்பு அரசியலும் அரசும்!

சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான செய்திகளை அனுப்புவதும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (2000) மூலம் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தில் 2009-ம் வருடம் கொண்டுவரப்பட்ட பிரிவு 66A உச்ச நீதிமன்றத்தால் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான பிரிவு என்று அறிவிக்கப்பட்டது. ஏனெனில், அந்தப் பிரிவு தகவல் பரிமாற்றத்தின் மூலம் எத்தகைய செய்திகளையெல்லாம் அனுப்பக் கூடாது என்பதைத் தெளிவாக வரையறுக்காததால், அது அரசால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது (ஷ்ரேயா சிங்கால், 2015). தீர்ப்பு அளிக்கப்பட்டு ஏழு வருடங்கள் ஆன பிறகும் காவல்துறைக்கு இது பற்றிய பட்டறிவு இல்லாமையால் இந்தியா முழுதும் இன்னும் 1,300 வழக்குகள் விசாரணையில் இருப்பதை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்தச் சட்ட வரலாற்றைப் பார்க்கும்போது, வெறுப்பு அரசியலைத் தடுப்பதற்கு போதுமான சட்டப் பிரிவுகள் இருப்பினும், அதையும் மீறி இத்தகைய செயல்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு, செயல்படுத்தப்படுவதுதான் காரணம். ஒன்றிய அரசும், அதை நடத்திச்செல்லும் அரசியல் கட்சியும் இதற்கான விதைகளைத் தூவி வளரவிடுவதுதான் சமீபத்திய வரலாறு. மேலும் அரசியல் கட்சிகள் ஊடகங்களைக் கைப்பற்றுவதும் அல்லது அவற்றை மிரட்டி பல்வேறு வழிகளில் தங்களுக்கு ஆதரவு பிரசாரம் செய்யவைப்பதும், அது போதாதென்று சமூக வலைதளங்களைத் தங்களுடைய பிரசாரத்துக்காக அமைப்புரீதியாக (ஐடி விங் என்ற பெயரில்) செயல்படுத்திவருவதுமே காரணம்.

வாக்குரிமையே ஆயுதம்!

கருத்துரிமையும் பேச்சுரிமையும் அரசமைப்புச் சட்டத்தின் 19(1)-வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகளாக அறிவிக்கப்பட்டிருப்பினும், அவையெல்லாம் 19(2) பிரிவின் கீழ் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவையே. குற்றங்களைத் தூண்டிவிடும்விதமாகப் பேசுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. ஆனால், வெறுப்பு அரசியலைத் தூண்டுபவர்கள் அரசின் ஆதரவுடன், காவல்துறை பாதுகாப்புடன் பவனிவருவதும், தங்களை யாரும் அசைக்க முடியாது என்று சவால்விடுவதும் ஜனநாயக விரோதச் செயல்களின் உச்சகட்டமாகும்.

இப்படி நேரடியாக அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்படுபவர்களையும், வெறுப்பு அரசியலின் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுவதையும் தடுப்பதற்கு, அப்படிப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவிடாமல் செய்வதே ஒரே வழியாகும். எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அவற்றை நிறைவேற்றுவதற்கு மனமில்லாத அரசுகள் இருக்கும் வரை, வாக்குரிமையைச் சாதுரியமாகப் பயன்படுத்துவதன் மூலம்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!