Published:Updated:

ஜூ.வி ஆக்‌ஷன்... ஏழைப் பெண்ணின் ஏழு வருடப் போராட்டம்! - அரவணைத்த கலெக்டர்... நடக்கவைத்த ஜூ.வி...

மகளுடன் செல்வி
பிரீமியம் ஸ்டோரி
மகளுடன் செல்வி

வாழ்க்கையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் தவிக்கும் விளிம்புநிலை மக்களைக் காக்கவேண்டியது அரசின் கடமை. அதைத்தான் செல்விக்குச் செய்திருக்கிறோம்.

ஜூ.வி ஆக்‌ஷன்... ஏழைப் பெண்ணின் ஏழு வருடப் போராட்டம்! - அரவணைத்த கலெக்டர்... நடக்கவைத்த ஜூ.வி...

வாழ்க்கையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் தவிக்கும் விளிம்புநிலை மக்களைக் காக்கவேண்டியது அரசின் கடமை. அதைத்தான் செல்விக்குச் செய்திருக்கிறோம்.

Published:Updated:
மகளுடன் செல்வி
பிரீமியம் ஸ்டோரி
மகளுடன் செல்வி

ஒரு சின்ன விபத்து... ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறிப்போனது செல்விக்கு! கால் உடைந்து, ஏழு ஆண்டுகளாகத் தவழ்ந்தபடியே வலி நிறைந்த வாழ்க்கையை நடத்திவந்த அந்த ஏழைப் பெண்ணை கணவரும் கைவிட்டுவிட, ஜூ.வி மூலம் அவருக்கு நல்லது நடந்திருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியிலிருந்து 2021 நவம்பர் மாத இறுதியில் நம்மைத் தொடர்புகொண்ட சமூக ஆர்வலர் பாக்கியலெட்சுமி, “செங்கமங்கலம் கிராமத்தில் செல்வி (35) என்ற பெண்ணுக்கு இடது கால் ரொம்பப் பெருசா வீங்கியிருக்கு. நடக்க முடியலை. எட்டு வயதாகும் அவருடைய மகள் தமிழ்ச்செல்வி பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போகாம, தாயைக் கவனித்துக்கொள்கிறார். பார்க்கவே பரிதாபமாக இருக்கு” என்றார்.

உடனே செங்கமங்கலம் கிராமத்துக்குச் சென்று செல்வியைச் சந்தித்தோம். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி ஒரு காலை நீட்டிக்கொண்டு மெல்ல நகர்ந்துகொண்டிருந்தார். “புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பக்கத்துல இருக்கிற அரசம்பட்டிதான் என்னோட சொந்த ஊரு. எனக்கு வலது கால் லேசா ஊனமா இருந்ததால, தாங்கித் தாங்கித்தான் நடப்பேன். ஆனாலும் எல்லா வேலையும் செய்ய முடியும். கல்யாணம் ஆன பிறகு கணவர் ரமேஷுடன் பேராவூரணி தென்னந்தோப்புல தங்கி கூலி வேலை பார்த்தோம். மகள் தமிழ்ச்செல்வி பிறந்தா. வருமானம் குறைவா இருந்தாலும், சந்தோஷத்துக்குக் குறைச்சல் இல்லை.

ஜூ.வி ஆக்‌ஷன்... ஏழைப் பெண்ணின் ஏழு வருடப் போராட்டம்! - அரவணைத்த கலெக்டர்... நடக்கவைத்த ஜூ.வி...

ஒருநாள் காலைல வீட்டு வாசல்ல தடுமாறி விழுந்ததுல, நல்லாயிருந்த வலது காலுக்கு என்னமோ ஆகிப்போச்சு. தடுமாறி விழுறது என் வாழ்க்கையில சகஜம்கிறதால, அதை நான் சீரியஸா எடுத்துக்கலை. கொஞ்ச நாள்ல உயிர் போற மாதிரி வலி. டாக்டர்கிட்ட போயும் சரியாகலை. நாளுக்கு நாள் வீக்கம் அதிகமாகி, ஒரு கட்டத்துல சுத்தமா நடக்க முடியாமப் போயிடுச்சு. மறுபடியும் டாக்டர்கிட்ட போனோம். ‘ஆபரேஷன் செஞ்சாத்தான் சரியாகும்’னு சொல்லிட்டார். வயித்துப் பாட்டுக்கே வழியில்லாத எங்ககிட்ட ஏது அவ்வளவு பணம்... அப்படியே விட்டுட்டோம். எந்த வேலையும் செய்ய முடியாததால, என்னை பாரமா நினைச்ச வீட்டுக்காரர் என்னையும் புள்ளையையும் விட்டுட்டு எங்கேயோ போயிட்டார்” என்று கண்கலங்கியவர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

“வீடு வாசல், சொந்த பந்தம், கட்டுன புருஷன் யாருமில்லாம மூணு வயசுப் பெண் குழந்தையோட பரிதவிச்சுக்கிட்டிருந்தேன். என்னோட நிலையைப் பார்த்து இரக்கப்பட்ட ஒருத்தர், தன்னோட மாட்டுக் கொட்டாயில தங்க இடம் குடுத்தார். சொந்தமா ரேஷன் கார்டுகூட கிடையாது. அக்கம் பக்கத்தில் இருக்கறவங்க அரிசி, பருப்பு குடுப்பாங்க. கிடைக்கறதைவெச்சு கால் வயித்து கஞ்சி குடிச்சுட்டு, நானும் என் பொண்ணும் உசுரைக் கையில பிடிச்சுக்கிட்டு இருக்கோம். என் இயலாமையால அவளாலயும் ஸ்கூலுக்குப் போக முடியலை” என்றபோது கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டே அழுதுவிட்டார்.

ஜூ.வி ஆக்‌ஷன்... ஏழைப் பெண்ணின் ஏழு வருடப் போராட்டம்! - அரவணைத்த கலெக்டர்... நடக்கவைத்த ஜூ.வி...

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரைத் தொடர்புகொண்டு, செல்வி பற்றிய விவரங்களை எடுத்துச் சொன்னோம். கவனமாகக் கேட்டவர், உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளை செல்வியின் வீட்டுக்கே அனுப்பிவைத்து ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்கச் செய்தார். கூடவே, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கி, மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை கிடைக்கவும் வழிவகை செய்தார் மாவட்ட ஆட்சியர். பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்விக்கு, கலெக்டரின் நேரடிக் கண்காணிப்பில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவிக்குமார், டாக்டர் குமரவேல் உள்ளிட்டோர் சிறப்பான சிகிச்சை அளித்தனர். அங்கே செல்விக்கு உதவிக்கு யாருமில்லாததால், இரு பெண்களை உதவிக்காக மாவட்ட நிர்வாகமே ஏற்பாடு செய்துகொடுத்தது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, மருத்துவமனைக்கே சென்று கேட்டறிந்தார் ஆட்சியர். சிகிச்சை முடிந்ததும் செல்வி தாமாகவே நடக்கும் வகையில், பயிற்சி கொடுக்கப்பட்டது. இரு கால்களின் உயரத்தையும் சமப்படுத்தும் வகையிலான செருப்புகள், மோட்டாரில் இயங்கும் வீல் சேர், வாக்கர் உள்ளிட்ட ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களும் வழங்கப்பட்டன. இரண்டரை மாத சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செல்வி, இப்போது மகளிர் இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.

ஜூ.வி ஆக்‌ஷன்... ஏழைப் பெண்ணின் ஏழு வருடப் போராட்டம்! - அரவணைத்த கலெக்டர்... நடக்கவைத்த ஜூ.வி...

திடீரென ஒருநாள் நம்மை அழைத்த செல்வி, “நான் நடக்குறதை என் மக பார்க்கணும் சார்...” என்றார். அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தோம். இத்தனை காலமாக ஊர்ந்து கொண்டிருந்த தாய், எழுந்து நடப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீரோடு ஓடிச் சென்று அவரைக் கட்டியணைத்துக்கொண்டார் தமிழ்ச்செல்வி. மருத்துவர்களோடு சேர்ந்து நமது கண்களும் கலங்கின.

நெகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசிய செல்வி, “நான் மறுபடியும் நடப்பேன்னு கனவுலகூட நினைக்கலை. கால்வலி, பட்டினிக் கொடுமையைவிட என் மகளோட எதிர்காலத்தை நினைச்சுத்தான் ரொம்பக் கவலைப்பட்டேன். அதுவும் ஆதார் அட்டை எடுக்கப் போனபோது, பெயர்கூட எழுதத் தெரியாம அந்தப் புள்ள கைநாட்டு வெச்சது மனசை அரிச்சுக்கிட்டே இருந்துச்சு. என்னோட ஏழு வருஷப் போராட்டத்தைச் சொல்ல வார்த்தையே கிடையாது. ஆனா, எல்லாத்துக்கும் ஜூ.வி மூலம் தீர்வு கிடைச்சுருக்கு. கொஞ்ச நாள்ல ஹோம்ல இருந்து, என் மகளோட போய் இருக்குற மாதிரி ஏற்பாடு செய்யறதா கலெக்டர் சார் சொல்லியிருக்காங்க. காலை வெட்டியெடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தப்ப கலெக்டர் சார்தான், ‘செல்வியை அதே காலோடு நடக்க வைக்க முயற்சி பண்ணிப் பார்க்கலாமே’னு நம்பிக்கையோடு சொன்னார். அது மாதிரியே நான் நடக்கத் தொடங்கிட்டேன்” என்று புதிதாகப் பிறந்த குழந்தைபோல மகிழ்ச்சியோடு சொன்னார் செல்வி.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

செல்வியின் ஏழு வருடப் போராட்டத்தை முடித்துவைத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு நன்றி தெரிவித்தோம். “வாழ்க்கையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் தவிக்கும் விளிம்புநிலை மக்களைக் காக்கவேண்டியது அரசின் கடமை. அதைத்தான் செல்விக்குச் செய்திருக்கிறோம். அவரது நிலையை என்னுடைய கவனத்துக்குச் சரியான நேரத்தில் கொண்டுவந்ததால்தான் இந்த உதவியைச் செய்ய முடிந்தது” என்றார் தன்னடக்கத்துடன்!

“நல்லாப் படிக்கணும் பாப்பா..!” என்று தமிழ்ச்செல்வியிடம் சொல்லி விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism