Published:Updated:

புதிய மினி தொடர்: இரும்புத்திரை காஷ்மீர்! - “உயிருக்கு உத்தரவாதமில்லை... உடனே கிளம்புங்கள்”

இரும்புத்திரை காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
இரும்புத்திரை காஷ்மீர்

திக் திக் நிமிடங்கள் - ஜூவி லைவ் ரிப்போர்ட்

உலக நாடுகளில் சீனாவை ‘இரும்புத்திரை தேசம்’ என்பார்கள். இப்போது காஷ்மீர் மாநிலமும் அப்படித்தான் ஆகிவிட்டது. இந்த மாநிலம் நம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று 80 நாள்களுக்குமேல் ஆகிவிட்டது. நாட்டின் பெரும் தலைவர்கள்கூட இயல்பாக அங்கு செல்ல முடியவில்லை. அப்படியே சென்றாலும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலரும், வீட்டுக்குள் ‘பத்திரமாக’ வைக்கப்பட்டிருக்கிறார்கள். செய்தி சேனல்கள், பத்திரிகைகள் அத்தனையும் கிட்டத்தட்ட முடக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில்தான் தொலைதொடர்பு வசதிகளைக் கொடுத்திருக் கிறார்கள். இணையம் இன்னும் வரவில்லை. பள்ளிகள் திறக்கப்படவில்லை. ரயில்நிலையங்கள், பேருந்துநிலையங்கள் மூடிக்கிடக்கின்றன. பெரும்பாலான கடைகளும் சந்தைகளும் மூடி இருக்கின்றன. தங்கும் இடங்கள், உணவகங்கள் கிடைப்பது அரிது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில், கடந்த பத்து நாள்களாகத்தான் மக்கள் ஓரளவு நடமாடத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அத்தனையும் கடும் கண்காணிப்பு களுக்கு உட்பட்டவை; கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. அங்கு வசிக்கும் இந்தியத் திருநாட்டுக் குடிகளின் ஒவ்வோர் அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பத்தடிக்கு ஒரு ராணுவ வீரர் நிற்கிறார். அவரின் கையில் நவீனரக ரைஃபிள் மின்னுகிறது; முகம் இயல்பாக இல்லை, இறுக்கம் அப்பியிருக்கிறது. ‘கட்டளையே சாசனம்’ என்றரீதியில் வந்துவிழுகின்றன அவர்களின் வார்த்தைகள். இந்தப் பூவுலகில் ஆகச்சிறந்த ஆப்பிள் தேசம், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி, இயற்கை அழகின் உச்ச தேசம்... இன்று சிறைக்குள் அடைப்பட்டிருக் கிறது.

இப்படியான சூழலில்தான் விகடன் செய்தி ஆசிரியர் பாலகிஷன், புகைப்படம் மற்றும் வீடியோ டீம் ஹெட் கே.கார்த்திகேயனுடன் காஷ்மீரின் கள நிலவரத்தை அறிய நேரில் சென்றார். அதன் லைவ் ரிப்போர்ட்தான் இந்தக் குறுந்தொடர். இனி, காஷ்மீர் காட்சிகள் அப்படியே உங்கள் பார்வைக்கு...

வெறிச்சோடி கிடக்கும் ஸ்ரீநகர்
வெறிச்சோடி கிடக்கும் ஸ்ரீநகர்

பயணம் தொடங்கியது. நானும் புகைப்படக்காரர் கார்த்திகேயனும் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திலிருந்து டெல்லி சென்றோம். ஒன்றாகச் சென்றாலும் இருவருக்கும் தனித்தனி டிக்கெட். ‘இருவருமே டூரிஸ்ட். காஷ்மீரைப் பொறுத்தவரை நான் யாரோ, நீங்கள் யாரோ’ என்பதையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லியின் ஜந்தர்மந்தர் ஏரியா, வழக்கம்போல் பிஸியாக இருந்தது. புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடந்துகொண்டிருந்தது. போராட்டக் களத்தில் தெரிந்த முகம். அட, சமூகச் செயற்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன். சமீபத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவில் இவரும் ஒருவராக காஷ்மீர் சென்றுவிட்டு வந்து, ஜூ.வி-க்கு காஷ்மீர் நிலவரம்குறித்து பேட்டி கொடுத்திருந்தார். காஷ்மீர் நிலவரங்களை தொடர்ந்து கவனித்துவருபவரும்கூட. நாம் காஷ்மீர் கிளம்பும் நேரம், அவரைச் சந்திக்க நேர்ந்தது நல்லதாகப்போயிற்று.

நம்மைப் பார்த்ததும், ‘‘ஹாய்... என்ன இவ்வளவு தூரம்?’’ என்று இயல்பாக கைகொடுத்துச் சிரித்தார். விஷயத்தைச் சொன்னோம். ‘‘ஓ... குட்’’ என்றவரிடம், ஏற்கெனவே அவர் சென்று வந்த குழுவின் ரிப்போர்ட் குறித்துக் கேட்டோம்.

‘‘தயாராகிக்கொண்டிருக்கிறது. பாதுகாப்புப் படையினர், வீடுகளுக்குள் புகுந்து பொருள்கள் மற்றும் டி.வி-யை உடைத்துப் போட்டிருக்கிறார்கள். அதற்கான போட்டோக்கள் எங்களிடம் இருக்கின்றன. சிறுவர்கள் நிறைய பேரைக் காணவில்லை. மூவாயிரத்துக்கும் அதிகமான, 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் வீடு திரும்பவில்லை. விசாரணை என்ற பெயரில் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. வெளிமாநிலச் சிறைகளுக்கும் அனுப்பியிருக்கிறார்கள் என நினைக்கிறோம். தங்கள் குழந்தைகளைக் காணாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஆல் தி பெஸ்ட். கேர்ஃபுல்’’ என்றபடி நம்மை வழியனுப்பிவைத்தார்.

நாள்: 17.10.19 - நேரம்: காலை 8.31 - இடம்: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம்

விரைவாக நடக்க ஆரம்பித்தோம். காலை 9.40 மணிக்கு, டெல்லி டு ஸ்ரீநகர் செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும். கார்த்திகேயன் ஒரு கையில் சூட்கேஸும் தோளில் கேமரா பேக்கையும் மாட்டிக்கொண்டு சொல்லிவைத்தது போல் பத்தடி தள்ளியே நடந்து வந்தார். எனக்கு சிம்பிளாக ஒரு தோள் பை.

செக்யூரிட்டி செக்கிங் பாயின்ட். பவ்யமாக முகத்தை வைத்துக்கொண்டோம். டூரிஸ்ட் அல்லவா! அப்படியும் மத்திய தொழில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தொப்பியை சரிசெய்துகொண்டு என்னை உற்றுப்பார்த்து எடைபோட்டார். ஒருவித சந்தேகத்துடன், ‘‘நீங்கள் யார், மீடியாவா... எதற்காக இப்போது காஷ்மீர் போகிறீர்கள்?’’ என்றார் கண்டிப்பான குரலில்.

களையிழந்து காணப்படும் தால் ஏரி
களையிழந்து காணப்படும் தால் ஏரி

நமக்கு முகத்திலேயே ‘பிரஸ்’ என எழுதி ஒட்டியிருக்கிறதோ என்னவோ... சுழி அப்படி! சமாளித்துக் கொண்டு, ‘‘இல்லை, டூரிஸ்ட். காஷ்மீரைச் சுற்றிப்பார்க்கப் போகிறேன்” என்று கொஞ்சம் குரல் உயர்த்தியே பேசினேன். அவர் நம்ப வேண்டுமல்லவா! ஆனாலும் மனுஷன் விடவில்லை. ‘‘இப்ப நிலவரம் தெரியாதா... டூர் போகிற நேரமா இது?’’ என்றார் எரிச்சலுடன். நானும் விடுவதாகயில்லை. ‘‘அதான் `காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது’னு கவர்மென்டே சொல்லிடுச்சே. ஏன், நிலைமை சரியாகலையா?’’ என்றேன் அப்பாவியாக. வார்த்தைகள் வேலை செய்தன. போட்டுவாங்குவதைப் புரிந்துகொண்டவர், ‘‘சரி சரி... போகலாம். அப்படி ஓரமாகப் போய் நில்லுங்கள்’’ என்றார்.

ஸ்கேனிங் மெஷின் கண்காணிப்பாளரிடம் அவர் ஏதோ சொல்ல, அவர் என்னை ஓரங்கட்டி என் பையை ஸ்கேன் செய்தார். அது போதாதென, பையின் ஜிப்பைப் பிரித்து ஒவ்வொரு பொருளாக எடுத்து வெளியே போட்டு ஆராய்ந்தார். உள்ளாடைகளைக்கூட விடவில்லை. உதறிப்பார்த்தார். சட்டைப்பையில் வைத்திருந்த பேனாவையும் எடுக்க முனைந்தார். ‘‘சட்டைப்பையில் கை வைக்கக் கூடாது. கேளுங்கள், தருகிறேன்’’ என்றபடி பேனாவை எடுத்துக் கொடுத்தேன். ஐந்து ரூபாய் பால்பாயின்ட் பேனா அது. அடிப்பக்க மூடியில் இருந்து பேனா முனை வரை தனித்தனியாகப் பிரித்து கவனமாக ஆராய்ந்தனர். பிறகு மோதிரம், பெல்ட், மணிபர்ஸ் என ஒவ்வொன்றாக ஆராய்ந்தார்கள். முன்னெச்சரிக்கையாக மீடியா சம்பந்தமான எந்த அடையாளத் தையும் நான் எடுத்துச் செல்லவில்லை.

கொஞ்சம் தள்ளி இருந்த கார்த்திகேயனை யதேச்சையாகப் பார்ப்பதுபோல் நோட்டமிட்டேன். என் நிலைமையாவது பரவாயில்லை. கார்த்தியை உரித்து மேய்ந்து கொண்டிருந்தனர். கேமரா பை, டேபிளில் தலைகீழாகக் கவிழ்த்துப் போடப் பட்டிருந்தது. ஃப்ளாஷ் லைட், பேட்டரி, லென்ஸ்கள், கேமரா ஸ்டாண்டு, கேபிள் எல்லாவற்றையும் தனித்தனியாகப் பிரித்துப் போட்டு மும்முரமாகச் சோதித்துக்கொண்டிருந்தனர். இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில் எத்தனையோ சோதனைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், இம்முறை ஏனோ சந்தேகமாக இருந்தது. விமானம் புறப்படும் நேரம் நெருங்கியது. ஒருவேளை தாமதப்படுத்தி, ஃப்ளைட்டைத் தவறவிடச் செய்கிறார்களோ என்று சந்தேகம் வந்தது.

‘விமானம் கிளம்ப இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன. ஆனால், இத்தனை கெடுபிடி காட்டி இழுத்தடிக்கி றார்களே!’ எனப் பதறிப்போன நான், விமானநிலைய அதிகாரி ஒருவரைச் சந்தித்து, ‘`மத்திய அரசே, `சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குச் செல்லலாம்’ எனக் கூறியிருக்கிறது. ஆனால், ஏன் இத்தனை கெடுபிடி காட்டுகிறீர்கள்?’’ என்று கேட்டேன். உடனே அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பறக்கவிட்டார். பிறகு, பாதுகாப்புப் பரிசோதனை ஏரியாவுக்குத் திரும்பியபோது, ‘`உங்கள் டைரியில் பொறிக்கப்பட்டிருந்த ஆர்னமென்ட் மெட்டல், துப்பாக்கி தயாரிப்புக்குத் தொடர்புடையது. அதனால்தான் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் போகலாம்’’ என்று உள்ளே அனுமதித்தார் ஒரு பாதுகாவலர். அந்தப் பக்கம், ‘வைல்டு லைஃப் போட்டோகிராபர்’ என்று சொல்லியிருந்த கார்த்தியையும் ‘‘ஓகே, நீங்கள் போகலாம்” என்று அனுப்பி வைத்தார்கள்.

மணி 9.27. - செல்போனில் அவசர மெசேஜ்.

‘காஷ்மீர் பாராமுல்லா மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் துப்பாக்கிச்சூடு தொடங்கிவிட்டது’ என்றது அந்த மெசேஜ். விமானத்தில் இருந்தவர்கள், ‘நல்லபடியாகச் சென்று சேர வேண்டும்’ என்று பிரார்த்தனையில் மூழ்க ஆரம்பித்தனர்.

விமானம் ஸ்ரீநகருக்கு டேக் ஆஃப் ஆனது. இப்படி டேக் ஆஃப் ஆகும்போதெல்லாம் வழக்கமாக என் வயிற்றில் சின்னதாக ஒரு பய உருண்டை உருளத் தொடங்கும். இப்போதும் அப்படியோர் உருண்டை உருண்டதுதான். ஆனால், இந்தமுறை அது வேறு ஏதோ ஓர் உணர்வாக இருந்தது.

இரும்புத்திரை காஷ்மீர்
இரும்புத்திரை காஷ்மீர்

அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் காஷ்மீர்காரராம். ‘‘ரோடெல்லாம் ராணுவ வீரர்கள் நிற்பார்கள். பத்தடிக்கு ஒரு வீரர் இருப்பார். ஒவ்வொருவருமே விசாரிப்பார்கள். ஒவ்வொருவருக்குமே பதில் சொல்ல வேண்டியிருக்கும். குறிப்பாக, பாதைகள் ஆங்காங்கே மறித்து அடைக்கப்பட்டிருக்கும். ‘டேக் டைவர்ஷன்’ என மாற்றுப்பாதையைச் சுட்டிக்காட்டுவார்கள். தெரியாத்தனமாகவோ, பாஷை புரியாமல் குழப்பத்திலோ, அவர்கள் காட்டிய பாதையில் செல்லாமல் வேறு பக்கம் திரும்பிச் சென்றுவிடாதீர்கள். பேச்சுக்கே இடமில்லை... துப்பாக்கி குண்டுகள்தான் உடலில் பாயும். ஜாக்கிரதை!’’ என்று அவர் பேசிக் கொண்டிருந்தபோது...

‘யுவர் அட்டேன்ஷன் ப்ளீஸ்... ஏர் கிராஃப்ட் இன்னும் சில நிமிடங்களில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறங்கப்போகிறது. சீட் பெல்ட்டை அணிந்துகொள்ளவும்’ என்றது அறிவிப்பு.

ஸ்ரீநகர் விமானநிலையம்

நேரம் காலை 10.57. ராணுவத் தளத்துக்கு நடுவே நிற்பதுபோல் இருந்தது அந்த இடம். ஏராளமான ராணுவ அதிகாரிகள். இந்தியைத் தவிர வேறு பாஷையையே கேட்க முடியவில்லை. அதில் தமிழ் ஜாடைகொண்ட ஒரு முகம் தட்டுப்பட்டது. ‘தமிழரோ’ என்ற ஆர்வத்துடன் அவரும் நம்மைப் பார்க்க, மையமாகச் சிரித்துவைத்தேன். நல்லவேளையாக அவரும் தமிழர்தான். அவரிடமும், ‘‘சுற்றிப்பார்க்க வந்தேன்’’ என்றேன். அதிர்ச்சியுடன் ஏறிட்டுப் பார்த்தவர், ‘‘ஏன் சார் இப்படி பொறுப்பு இல்லாம இருக்கீங்க. இங்க நிலைமை தெரியாதா உங்களுக்கு... கவர்மென்ட் சொன்னா வந்திடுவீங்களா? கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் சுடச்சொல்லி உத்தரவு. உயிருக்கு உத்தரவாதமில்லை... உடனே கிளம்புங்க!’’ என்றார்.

தூக்கிவாரிப்போட்டது!

(திரை விலகும்)