Published:Updated:

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 3 - “எல்லோரிடமும் கேட்டுவிட்டு 370-ஐ நீக்கியிருக்க முடியாது!”

இரும்புத்திரை காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
இரும்புத்திரை காஷ்மீர்

நிலைமையை விவரிக்கிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்

டாக்ஸி, காஷ்மீர் சிவில் தலைமைச் செயலகத்தில் நுழைந்தது. ஐந்து மாடிகளைக்கொண்ட பிரமாண்டமான கட்டடம் அது. நாம் செல்ல வேண்டிய இடம் நான்காவது மாடி. அங்குதான் நாம் பார்க்க வேண்டிய உயரதிகாரி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... விஜயகுமார் ஐ.பி.எஸ் (ஓய்வு) தான். காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த அவரின் பணிக்காலம், அக்டோபர் 30-ம் தேதியுடன் நிறைவடைந்திருக்கிறது. விரைவில் அவர் மத்திய அரசு உள்துறையின் சீனியர் செக்யூரிட்டி ஆலோசகர் (பாகிஸ்தான் தீவிரவாத ஒழிப்புப் பிரிவு) என்ற புதிய பதவியில் நியமிக்கப்படுவார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். வாசகர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும்படி சொல்ல வேண்டுமெனில், வீரப்பன் கும்பலை வேட்டையாடிய அதே விஜயகுமார்தான் அவர்.

அவரைப் பார்க்கும் முன், அவரைப் பற்றிய நினைவுகள் நிழலாடின. 1975-ம் ஆண்டு பட்டுக் கோட்டையில் ஏ.எஸ்.பி-யாக பணியில் சேர்ந்தவர் விஜயகுமார். இரும்பு லத்தியைக் சுழற்றியபடி ரோந்து போவார். ரௌடிகளை விரட்டி விரட்டி லத்தியால் விளாசுவார். அலறல் சத்தம், சென்னை காவல் தலைமையகம் வரை கேட்டது. ரெளடிகளுக்கு விஜயகுமார் பெயரைக் கேட்டாலே உடல் நடுங்கியது. அவரது அதிரடிகளை, என் அப்பா சொல்லி ஆர்வத்துடன் கேட்டிருக்கிறேன். அப்பா, அப்போது மன்னார்குடியில் இன்ஸ்பெக்டர். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

விஜயகுமார்
விஜயகுமார்

1984-ம் ஆண்டு விகடன் மாணவ நிருபராகச் சேர்ந்த பிறகு, விஜயகுமாரை நேரில் பார்க்க ஆவலுடன் இருந்தேன். சில வருடங்கள் கழித்தே அது சாத்தியமானது. பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட எஸ்.பி.ஜி பிரிவில் ஐந்து வருடங்களும், காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐ.ஜி-யாக மூன்று வருடங்களும் பணியாற்றினார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக எஸ்.எஸ்.ஜி என்ற பிரிவை உருவாக்கியவரும் இவரே. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் என மூன்று மாநிலங்களின் அதிரடிப் படையினரும் பிடிக்க முடியாமல் திணறிய வீரப்பனை, இவரது டீம்தான் 2004-ம் ஆண்டு வேட்டையாடியது. அதுவே அவருக்குச் சிக்கலையும் ஏற்படுத்தியது. இதில் நடந்த உள் அரசியலால் மனம் நொந்தவர், டெல்லிக்குச் சென்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அங்கு, மூன்று லட்சத்துக்கும் அதிகமான வீரர்களைக்கொண்ட மத்திய ரிசர்வ் படையின் தலைவராக நியமிக்கப்பட்டார். உள்துறை அமைச்சகத் துக்கான தேசிய செக்யூரிட்டி ஆலோசகராகச் (மாவோயிஸ்ட் பிரிவு) செயல்பட்டார். மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜியின் என்கவுன்டர், இவருடைய காலத்தில்தான் நடந்தது. 2018-ஜூன் மாதம், காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக நியமிக்கப் பட்டார்.

“சார், கூப்பிடுறாங்க” என்ற குரல் நம் நினைவுகளைக் கலைக்க, விஜயகுமாரின் அறைக்குள் நுழைந்தோம். போர்க்களத்தில் வியூகம் வகுப்பதுபோல் இருந்தது அந்தக் காட்சி. ஒளித்திரையில் காஷ்மீர் வரைபடம் பளிச்சிட, சக அதிகாரிகளுடன் ஆலோசித்துக்கொண்டிருந்தார். நம்மைப் பார்த்ததும் புன்னகைத்து வரவேற்றார். அவருக்கு வயது 67. ஆனால், நம்ப முடியவில்லை. உடற்கட்டு அப்படி. ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுடச்சுட தேநீர் வந்தது.

என்னைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து காலண்டரைப் பார்த்தவர், “அக்டோபர் 18. இந்தத் தேதி நினைவிருக் கிறதா? 2004-ம் ஆண்டு இதே நாளில்தான், நான் வீரப்பனை என்கவுன்டர் செய்தேன். எதிர்பாராத ஒற்றுமை பாருங்கள்!’’ என்று சிரித்தார்.

‘‘எப்போதும் துப்பாக்கியும் கையுமாக இருப்பதையே விரும்புவீர்கள். காவல்துறையில்கூட நிர்வாகப் பிரிவைத் தவிர்த்து அதிரடிப்படையில் பணிபுரிய ஆர்வம் காட்டுவீர்கள். இங்கே எப்படி ஆலோசகர் என்ற பதவியில் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுகிறீர்கள்?’’ என்று கேட்டேன்.

‘‘படைத்தலைவனாகச் செயல்பட்டது வேறு; பல்வேறு படைகளுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவது வேறு. ராணுவ கோர் கமாண்டர், மத்திய ரிசர்வ் படை கூடுதல் டி.ஜி.பி., ஜம்மு - காஷ்மீர் மாநில டி.ஜி.பி ஆகிய மூவர்தான் எனது கோர் கமிட்டியின் உறுப்பினர்கள். அவர்களுடன் அன்றாடம் பேசுகிறேன், ஆலோசனைகள் தருகிறேன். அவற்றை அவர்கள் செயல்படுத்துகிறார்கள்” என்றவர், காஷ்மீர் விவகாரங்களைச் சொல்லத் தொடங்கினார்.

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 3 - “எல்லோரிடமும் கேட்டுவிட்டு 370-ஐ நீக்கியிருக்க முடியாது!”

“தனிப்பட்டமுறையில் பார்த்தால், காஷ்மீர் மக்கள் மிகவும் ஃப்ரெண்ட்லியானவர்கள்; கடும் உழைப்பாளிகள்; கலைநயம்மிக்கவர்கள். இந்த மண்ணும் சிறப்பு வாய்ந்தது. உலகத்திலேயே மிகவும் அழகான பள்ளத்தாக்கு இதுதான். மிகவும் சிறியதும்கூட. ஆனால், துரதிர்ஷ்டம் பாருங்கள்... எப்போதும் ஏதேனும் ஒரு வதந்தி பரவியபடியே இருக்கும். அதனால்தான் கடந்த காலங்களில் கலவரங்கள், துப்பாக்கிச்சூடு என்று ஏகப்பட்ட பிரச்னைகள். இங்கு உள்ள அரசியல் சக்திகள், பயங்கரவாத அமைப்பினர் அவற்றை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இப்படி ஏகப்பட்ட இழப்புகளை நாங்கள் சந்தித்திருந்ததால், 2019 - ஆகஸ்ட் 5-ம் தேதி ஆர்ட்டிக்கிள் 370-ஐ நீக்கியபோது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று. காஷ்மீர், இந்தியாவின் ஓர் அங்கம். நாங்களும் நீங்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும்வகையில், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக இதைச் செய்தோம்” என்றவரிடம், “எல்லாம் சரி... ஏன் இவ்வளவு பதற்றத்தை உருவாக்கினீர்கள், இதைச் செய்வதற்கு முன்பு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி யிருக்கலாமே, மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டிருக்கலாமே... ஏன் செய்யவில்லை?’’ என்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இதைப் பற்றி விரிவாகப் பேசினால்தான் உங்களுக்குப் புரியும்” என்று ஆரம்பித்தார். ‘‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் இங்கு உள்ள சில அமைப்புகளின் தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்தோம். இன்னும் சிலரிடம் ‘சட்டத்தை மீற மாட்டேன்’ என்று பத்திரத்தில் எழுதி வாங்கினோம். எழுதித் தராத சிலர், சட்டப்படியான கஸ்டடியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பயங்கரவாத அமைப்பினரை ஒடுக்கும் வகையில் படைகள் குவிக்கப்பட்டன. அதேசமயம், எங்கும் சட்ட விரோதமான அடக்குமுறையைக் கையாளவில்லை. இதற்கெல்லாம் கண்முன் பலன் கிடைத்துள்ளது. வன்முறைச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந் துள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு முன்பு நடந்த வன்முறைச் சம்பவங்களையும் அதன் பிறகு இன்று வரை நடந்த வன்முறைச் சம்பவங்களையும் பட்டியலிட்டுப் பாருங்கள். சிறு கல்லெறிச் சம்பவங்கள், கையெறிக் குண்டுவீச்சு சம்பவங்கள், ஒரு சில பயங்கரவாதத் தாக்குதல்கள் என, சில சம்பவங்கள் நடந்தனதான். ஆனால், காஷ்மீரில் நடக்கும் வழக்கமான வன்முறைச் சம்பவங்களை ஒப்பிடும்போது இது பல மடங்கு குறைவு. எல்லாவற்றுக்கும்மேலாக, முன்பு பலமுறை போலீஸ் துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால், ஆகஸ்ட் 5-க்குப் பிறகு பொதுமக்கள்மீது எங்கேயும் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. கிராஸ் ஃபையரிங் என்று சொல்வார்கள்... பயங்கரவாதிகள் - போலீஸ் மோதலில் அப்பாவி மக்கள் குண்டடிபடுவார்கள். அதுவும் நடக்கவில்லை. பொதுவாகவே, செக்யூரிட்டி ஃபோர்ஸைச் சேர்ந்தவர்கள்மீது இல்லாததையும் பொல்லாததையும் அள்ளிவீசுவார்கள். அப்படியான புகார்களுக்கு இடம்கொடுக்காமல் மிகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் இன்றுவரை நடந்துகொள்கிறார்கள் எங்கள் படையினர்’’ என்றவர், “உங்கள் கேள்விக்கான பதிலை நேரடியாகச் சொல்கிறேன்...” என்றவர், தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘ஆர்ட்டிக்கிள் 370-ஐ நீக்கியதில் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். கோபம் புரிகிறது. `எங்களிடம் கேட்டுவிட்டுச் செய்திருக்கலாமே!’ என்கிறார்கள். காஷ்மீரின் சூழலிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும், இதை எல்லோரிடமும் கேட்டுவிட்டுச் செய்திருக்க முடியாது என்பது. சொல்லப்போனால், மிகவும் ரகசியமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்து, இப்படி திடீரென அமல்படுத்திய தால்தான் கலவரங்களைத் தவிர்த்திருக்கிறோம்; ஏராளமான உயிரிழப்புகளைத் தடுத்திருக்கிறோம். சும்மா சமாளிப்புக்காக இதைச் சொல்லவில்லை. உதாரணங்களைச் சொல்கிறேன்... கேளுங்கள்.

2008-ம் ஆண்டில் அமர்நாத் பிரச்னை நினைவிருக்கிறதா? ‘கோயில் நிலத்தைக் கையகப்படுத்துகிறார்கள்’ என வதந்தி பரவியது; கலவரம் வெடித்தது. ஜம்முவிலிருந்து காஷ்மீருக்குள் எவராலும் வர முடியவில்லை. காஷ்மீரிலிருந்து ஜம்முவுக்குள் எவராலும் செல்ல முடியவில்லை. போலீஸ், துப்பாக்கிச்சூடு நடத்தியது. பலர் இறந்தனர். 2016-ம் ஆண்டு புர்ஹான் வானி என்கிற இளைஞர், சமூக ஊடகங்களில் பிரபலமானார். அவர் துப்பாக்கியைப் பிடித்துச் சுட்டதுகூட இல்லை. ஆனால், துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தார். அவரைப் பற்றி ஒரு தகவல் கிடைத்தது. அதுவிஷயமாக விசாரிக்கச் சென்றார்கள். சாதாரண சட்ட நடவடிக்கை அது. ஆனால், அவருடன் இருந்தவர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டார்கள். பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதில், புர்ஹான் வானி பலியானார். பெரிய கலவரம் மூண்டது. அப்பாவிகள் 41 பேர் இறந்தார்கள்.

இதையெல்லாம் மனதில்கொண்டுதான் மிகவும் கவனமாகச் செயல்பட்டோம். அதேசமயம், நாங்கள் சட்டத்தை எங்கும் மீறவில்லை. இதை நான் உரக்கச் சொல்வேன்... உறுதியுடன் சொல்வேன். எல்லாம் சட்டப்படித்தான் நடந்திருக்கின்றன. மக்களாட்சித் தத்துவத்தின்படி நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றித்தான் இதைச் செய்திருக்கிறார்கள்” என்றபோது, மீண்டும் தேநீர் வந்தது. பருகியபடி தொடர்ந்தார் விஜயகுமார்.

“காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு பல முகங்கள் இருக்கின்றன. ஜம்மு மக்களின் எண்ணம் வேறு; லே, லடாக் மக்களின் எண்ணம் வேறு. இந்த மூன்று தரப்புகளிலும் ஆலோசனைகளைக் கேட்டு இதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. ஆனால், இதுவும் தற்காலிகம்தான். கூடியவிரைவில் நிலைமை மாறும். யூனியன் பிரதேசமாக்குவது தற்காலிக நடவடிக்கைதான்; படிப்படியாக மாநில அந்தஸ்து கொண்டுவருவோம். இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்லியிருக்கிறார்” என்றபோது, அலுவலக போன் அலறியது. எடுத்துப் பேசியவர், மாலையில் அவரது வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினார்.

(திரை விலகும்)