Published:Updated:

திருமழிசை தில்லாலங்கடி... - கோயம்பேடு பகீர்! - 3

திருமழிசை
பிரீமியம் ஸ்டோரி
News
திருமழிசை

தகர டப்பா கூடாரங்களுக்கு கோடிகளில் கணக்கு! - ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

- ஜி.கௌதம்

திருமழிசையில் நடக்கும் தில்லாலங்கடிகள் குறித்துப் பார்க்கும் முன்பாக சமீபத்தில் கிடைத்த தகவல் ஒன்றையும் பார்த்துவிடுவோம்.

‘ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப் பட்டது’ என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது அல்லவா... அதையும் நான் இந்தத் தொடரில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், விசாரித்ததில் அதுவும் உண்மை இல்லை போலிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 15 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கும் உணவு தானிய அங்காடி வளாகம் 2016-ம் ஆண்டில்தான் திறக்கப்பட்டிருக்கிறது. வாகனம் நிறுத்துவதற்காக மட்டுமே ஐந்தரை ஏக்கர் காலி இடத்துடன் பிரமாண்டமாக இருக்கிறது அந்த வளாகம். இங்கேயும் கொடுக்கப்படாத தண்ணீருக்கு வரி வசூலிக்கப்படுகிறது. அதையும் இழுத்துப் பூட்டியிருக்கிறார்கள்.

‘எதன் அடிப்படையில் உணவு தானிய அங்காடி வளாகத்தைப் பூட்டினீர்கள்?’ என்று கேட்டு, மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து பெற்ற அதிகாரபூர்வமான தகவல் என்ன சொல்கிறது தெரியுமா?

‘கோயம்பேடு வளாகத்தில் காய்கறி அங்காடியில் கடை வைத்துள்ள திரு.சின்னசாமி (வயது 50) என்பவர் 4.5.2020 அன்று கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானார். இவரிடமிருந்து நோய்த் தொற்று மற்றவர்களுக்குப் பரவியிருக்க வாய்ப்புள்ளது. கோயம்பேடு காய்கறி அங்காடி வளாகம் மக்கள் அதிகமாகக் கூடும் இடம். அதன் மிக அருகில் உணவு தானிய அங்காடி வளாகம் உள்ளது. கொரோனோ நோய்த் தொற்று அனைவருக்கும் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக, உணவு தானிய அங்காடி வளாகத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.’

கவர்ன்மென்ட் கடுதாசி இதைத்தான் சொல்கிறது! இதைத் தொடர்ந்துதான் `ஏழு பேருக்கு கொரோனா...’, `நூறு பேருக்கு கொரோனா...’ என்றெல்லாம் வதந்தியைக் கிளப்பினார்கள். ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்பதால் ஒட்டுமொத்தமாக மார்க்கெட்டையே பூட்டியிருக்கிறார்கள். ‘இந்தியாவின் வூஹான்’ எனச் சித்திரித்து சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 220 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். ரிப்பன் மாளிகையை இழுத்துப் பூட்டிவிட்டார்களா என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுவும் அந்தக் கடிதத்தில் எங்குமே ‘முன்னறிவிப்பின்றி மூடவும்’ எனக் கூறப்படவில்லை. ஆனால், அதிகாரிகள் எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை; முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை; கடைகளுக்கு உள்ளே வைத்திருந்த உணவு தானியங்களை வெளியே எடுத்துச் செல்லவும் அவகாசம் கொடுக்கவில்லை. திடீரென்று வந்தார்கள்; அடாவடியாக அங்காடியை முடக்கிப் போட்டார்கள். யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கைகள்?

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். சின்னசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்குப் பல நாள்களுக்கு முன்பாகவே கோயம்பேடு அங்காடிகளுக்குள் பொதுமக்கள் நுழைய அரசு தடைவிதித்துவிட்டது. அப்படியானால் மே 4-ம் தேதிக்குப் பிறகு எப்படி பொதுமக்கள் மார்க்கெட்டுக்குள் திரள முடியும்? சின்னசாமியிடம் சிக்கியிருந்த கொரோனா எப்படி (வராத) பொதுமக்களுக்குப் பரவும்?

****

இப்போது திருமழிசைக்குத் திரும்புவோம். அங்கே தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருக்கும் காய்கறி அங்காடிகளால் வணிகர்களுக்கு ஏதேனும் பலன் இருக்கிறதா? அதற்கு ஒதுக்கப்பட்ட, தொடர்ந்து ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய்களால் ‘யாரோ’ சிலர் பலனடையலாம். வணிகர்களோ, பொதுமக்களோ பலனடைவார்கள் என எதிர்பார்ப்பது அப்பாவித்தனம்.

திருமழிசை தில்லாலங்கடி... - கோயம்பேடு பகீர்! - 3

இரண்டு ஏக்கர் அளவே இருக்கும் மாதவரம் பழ அங்காடி வளாகத்துடன் ஒப்பிட்டால், திருமழிசையில் ஒதுக்கப்பட்டிருப்பது பெரிய இடம்தான். சுமார் 20 ஏக்கர் இருக்கும். திறந்தவெளி மைதானம். காய்கறிகளை மட்டும் நள்ளிரவில் தொடங்கி, அதிகாலை வரை இங்கே விற்றுக்கொள்ள அனுமதிக்கிறார்கள். அதற்கென 250 தற்காலிக கூடாரங்கள் போடப்பட்டுள்ளன.

இந்த குபீர் கூடாரங்கள் ஒதுக்கப்பட்டதிலும் பலத்த சந்தேகங்கள் உள்ளன. கோயம்பேடு அங்காடிகளில் வருடக்கணக்கில் வணிகம் செய்துவந்த பல வணிகர்களுக்கு இன்னும் இங்கே கடைகள் ஒதுக்கப்படவில்லை. ஆனால், அத்தனை கடைகளையும் அவசர அவசரமாக யார் யாருக்கோ கொடுத்திருக்கிறார்கள். எந்த அளவுகோல்வைத்து ஒதுக்கீடு நடந்தது என்பது தெரியவில்லை.

சரி, கடைகளின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது? நாலாபுறமும் இரும்புக்குழாய்களைப் பதித்து, அவற்றைச் சுற்றி தகரத் தடுப்புகளைச் செருகி, பொருட்காட்சி அரங்குகள்போல உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு கடையை அமைக்க அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். 250 கடைகளை அமைக்க 75 லட்சம் ரூபாய் என மொத்தம் பிற செலவுகளையும் சேர்த்தால் ஓரிரு கோடிகள் செலவாகியிருக்கலாம். ஆனால், 21 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாகப் பேச்சு நிலவுகிறது. உண்மை என்ன என்பது செலவழித்தவர்களுக்கும், செலவுக் கணக்கு எழுதியவர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்!

சிறு மழைக்கே சகதியான திருமழிசை...
சிறு மழைக்கே சகதியான திருமழிசை...

அடிப்படை வசதிகள், பொருள்களைப் பாதுகாக்க போதுமான வசதிகள், பணி செய்யும் ஆட்களுக்குத் தேவையான வசதிகள் என அனைத்தும் அரைகுறையாகவே செய்யப்பட்டிருக் கின்றன. ஒவ்வொரு கடையும் 200 சதுர அடி மட்டுமே. லாரிகளில் வந்து குவியும் காய்கறிகளை வெளிச்சம் இல்லாத திறந்தவெளியில் கொட்டி, தரம் பிரித்து, பின்னர் தகர டப்பா கடைகளுக்குக் கொண்டு போகிறார்கள். ஒரு வேலைக்கு பதிலாகப் பல வேலைகள். ஒவ்வொன்றுக்கும் கூடுதல் செலவு!

இதனால், வியாபாரிகளுக்கு ஒவ்வொரு நாளும் நஷ்டத்துக்கு மேல் நஷ்டம். காய்கறி வியாபாரத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் அவர்களுக்குத் தெரியாது. புலிவாலைப் பிடித்த கதையாக புலம்பியபடியே தொடர்ந்து நஷ்டப்படுகிறார்கள் அவர்கள். ஆரம்ப ஜோரில் கடைகளை நடத்திய பலரும் அடுத்தடுத்த நாள்களில் காணாமல் போய்விட்டார்கள். இதனால், இப்போதே பல கடைகள் ஆள் அரவமில்லாமல் காணப்படுகின்றன.

நள்ளிரவில் வரும் காய்கறிகளை அதிகாலை 7 மணிக்குப் பிறகு விற்பனை செய்ய அனுமதியில்லை. அதனால், விற்பனை ஆகாதவற்றை அங்கேயே திறந்தவெளியில் கண்ணீருடன் கொட்டிவிட்டுப் போகிறார்கள். குவியல் குவியலாகக் கிடக்கின்றன காய்கறிகள். எங்கேயோ ஒரு மூலையில் விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு, அவர்களுக்கும் விலை கட்டுப்படியாகாமல், வியாபாரிகளுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும் பயன் தராமல் இப்படி வீணடிக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றன அத்தியாவசியக் காய்கறிகள்! நடப்பவை அனைத்தும் துக்ளக் தர்பார். நிர்வாகக் குளறுபடிகள். திறமையற்ற அதிகாரிகள் கையில் நிர்வாகம் இருந்தால் எதுவும் நடக்கும்.

இன்னோர் ஆபத்தும் திருமழிசையில் காத்திருக்கிறது. ஜூன் மாதம் முதல் பருவ மழை தொடங்குகிறது. மழை பெய்தால் சேறும் சகதியுமாகி, சின்னாபின்னமாகிவிடும் திருமழிசைக் கூடாரங்கள். கதவுகள் இல்லாத, முன்பக்கம் திறந்தே கிடக்கும், பக்கவாட்டுப் பக்கங்களில் முழுமையாக அடைக்கப்படாத தகரக் கொட்டகைகளுக்குள் வைக்கும் காய்கறிகளைப் பாதுகாக்க வழியில்லை. மழையுடன் பலமான காற்றும் சேர்ந்து கொண்டால்... தகரத் தடுப்புகள் பிய்த்துக்கொண்டு பறந்துவிடும்.

பூட்டப்பட்ட கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம்...
பூட்டப்பட்ட கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம்...

ஒருவேளை இது நடந்தால் அத்தனை வணிகர்களும் திருமழிசையைவிட்டே ஓடிப் போவார்கள். ஒட்டுமொத்தமாக சென்னைக்கும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் காய்கறிகளின் விலை கன்னாபின்னாவென எகிறும். ஏதோ யூகமாக எல்லாம் இதைச் சொல்லவில்லை. ஜூன் மாதம் 7-ம் தேதி பெய்த சிறு மழைக்கே தாங்கவில்லை திருமழிசை மார்க்கெட். அதை நேரில் பார்த்தேன். சரக்கேற்றி வந்த வாகனங்கள் சகதியில் சிக்கிக்கொன்டு நகர முடியாமல் தவித்தன. பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து, அவற்றை வெளியே இழுக்கப் போராடினார்கள் வியாபாரிகள். பொக்லைன் இயந்திரச் செலவுகள் யார் கொடுப்பார்கள்?

சரி, கோயம்பேட்டில் செயல்பட்ட உணவு தானிய அங்காடிகளுக்கு இப்போது எங்கே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது? அதைத்தான் கடந்த மே 5-ம் தேதியிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் வணிகர்கள். அரசுத் தரப்பிலிருந்து இன்னும் பதிலைக் காணோம்!

தொடர்புக்கு: editorGGowtham@gmail.com

(தொடரும்)

வணிகர்களுக்கு டி-ஷர்ட்... பொதுமக்களுக்கு கொரோனா!

அதிகாரிகள் தரப்பில் எப்படியெல்லாம் வணிகர்களிடமிருந்து பணத்தை பிடுங்கலாம் என்று உட்கார்ந்து யோசிப்பார்கள்போல! ஜூன் 7-ம் தேதியிலிருந்து மாதவரம் தற்காலிகப் பழ அங்காடி வளாகத்தில் திடீர் சட்டம் ஒன்றை அமல்படுத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள். வளாகத்துக்குள் வரும் வணிகர்கள் ஒவ்வொருவரும் அங்காடி நிர்வாகக்குழு வழங்கும் டி-ஷர்ட்டைத்தான் அணிந்து வர வேண்டுமாம். சும்மா கொடுக்கவில்லை... முதலாளிகள் அணிவதற்காக ஒரு ரகம்... விலை ரூ.230. தொழிலாளர்கள் அணிவதற்காக இன்னொரு ரகம்... விலை ரூ.130. கிழியக் கிழிய புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். ரசீது எல்லாம் கொடுக்கப்பட மாட்டாது!

திருமழிசை தில்லாலங்கடி... - கோயம்பேடு பகீர்! - 3

கொரோனா தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாம். ஏன், இதற்கென பிரத்யேகமாக வடிவமைத்த முகக்கவசங்களையோ, அடையாள அட்டைகளையோ, பேட்ஜ்களையோ, தொப்பிகளையோ சிக்கனச் செலவில் அமல்படுத்த முடியாதா என்ன? அப்படிச் செய்தால் டி-ஷர்ட் நிறுவனங்களிடமிருந்து கட்டிங் கிடைக்காதே! இன்னொரு விஷயம், இங்கே பொதுமக்களும் தாராளமாக உள்ளே வந்து செல்கிறார்கள். அப்படியானால் கொரோனா இங்கிருந்து மக்களுக்குப் பரவாதா?