Published:Updated:

வணிகர்கள் வயிற்றில் அடித்து பிடுங்குவதைத் தவிர வேறென்ன இது? - கோயம்பேடு பகீர் - 2

கோயம்பேடு
பிரீமியம் ஸ்டோரி
கோயம்பேடு

ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

வணிகர்கள் வயிற்றில் அடித்து பிடுங்குவதைத் தவிர வேறென்ன இது? - கோயம்பேடு பகீர் - 2

ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

Published:Updated:
கோயம்பேடு
பிரீமியம் ஸ்டோரி
கோயம்பேடு

- ஜி.கௌதம்

சரி, இப்படி வதந்தியைப் பரப்புவதால், கோயம்பேடு மார்க்கெட்டை காலி செய்யவைப்பதால், புதிய இடங்களில் மார்க்கெட்டை அமைப்பதால் வதந்தியைக் கிளப்புகிறவர்களுக்கு என்ன லாபம்? செய்த குளறுபடிகளை மூடிமறைக்கவும், செய்யப்போகும் காரியங்களால் கோடிகள் குவிக்கவும்தான் இந்த நாடகம் என்று எனக்குத் தோன்றுகிறது.

அரசுத் தரப்பில் நாட்டின் நலனுக்காக ஒரு திட்டத்தை வகுக்கும்போது தொலைநோக்குப் பார்வையுடனேயே அணுகுவார்கள். அப்படித்தான் கோயம்பேடு மார்க்கெட்டும் நன்கு திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டது. அடுத்த ஐம்பது ஆண்டுக்கால மக்கள்தொகைப் பெருக்கத்தையும், அதன் தேவையையும் கருத்தில்கொண்டுதான் இடம் ஒதுக்கப்பட்டு அங்காடிகள் அமைக்கப்பட்டன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகளுக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகவும் போதுமான காலி இடங்களை விட்டுத்தான் கோயம்பேடு மார்க்கெட் வடிவமைக்கப்பட்டது. ஆனால், திட்ட வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலி இடங்களையெல்லாம் கடைகளாக்கிக் காசு பார்த்தது யார்... அதில் எவ்வளவு பணம் அரசு கஜானாவுக்குப் போனது... எவ்வளவு பணம் திரைமறைவுக்குப் போனது?

20 வருடங்களிலேயே நெருக்கடி ஏன்?

‘ஐம்பது வருடங்கள் தாக்குப்பிடிக்கும்’ என்ற உத்தரவாதத்துடன் கட்டப்பட்ட கோயம்பேடு மார்க்கெட், இருபது வருடங்களிலேயே நெருக்கடியைச் சந்திப்பதாகச் சொல்லப்படுவதற்கு யாரெல்லாம் காரணம்?

திருமழிசை தற்காலிக மார்க்கெட்
திருமழிசை தற்காலிக மார்க்கெட்

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களைத் தேடினால் கபளீகரம் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் எட்டிப்பார்த்துப் பல்லிளிக்கும். யார் சுருட்டினார்கள், எப்படிச் சுருட்டி னார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டால் மக்கள் சபையின் முன்னர் பலர் தலைகுனிய வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக கோயம்பேடு மார்க்கெட்டை மூடிவிட்டால்... அத்தனை பிரச்னை களையும் ஒரேயடியாகக் குழிதோண்டிப் புதைத்துவிடலாம் அல்லவா... அதுதான் நடப்பதாகத் தெரிகிறது!

மற்றுமொரு பெரிய சதியும் இந்தப் பிரச்னையில் ஒளிந்திருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை பெரு நிறுவனங்களுக்குக் கொடுத்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். இது உண்மையாக இருக்குமானால் தேனை எடுப்பவர்கள் புறங்கையை நக்கினால்கூட ஆயிரக்கணக்கான கோடிகள் தேறும்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அருகே (வி.ஆர் மால் பின்புறம்) கட்டப்பட்ட ‘மெட்ரோ ஸோன்’ குடியிருப்புகளின் விலை விவரத்தை விசாரித்து ஒப்பிட்டாலே மார்க்கெட்டை காலி செய்யத் துடிக்கும் ‘அதீத அக்கறையின் பின்னணி பளிச்செனத் தெரியும். இதை முன் திட்டமிட்டுத்தான் கோயம்பேடு மார்க்கெட்டை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி ஒத்திகை பார்க்கிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது. அதாவது, ஒரே கல்லில் மூன்று மாங்காய். கோயம்பேடு மார்க்கெட்டைக் கூறுபோடுவதன் மூலம் அங்கு வியாபாரத்தை நீர்த்துப்போகச் செய்து, ஒருகட்டத்தில் நாசமாக்கி மொத்த கோயம்பேடு மார்க்கெட் இடத்தையும் கபளீகரம் செய்யலாம்; வியாபாரிகளைச் சிதறவிட்டு, மோதவிட்டு மாதவரம் மற்றும் திருமழிசை ஆகிய இடங்களில் புதிய மார்க்கெட்டை நிறுவலாம். அப்படி நிறுவுவதன் மூலம் அங்கெல்லாம் ரியல் எஸ்டேட் லாபிகளைக் கொழிக்கச் செய்து கோடிகளைக் குவிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விரிவாக்கமா, நாசமாக்கமா?

சிலர், “நகரம் விரிவாக்கம் செய்யப் பட்டுவரும் நிலையில் மாதவரம், திருமழிசை ஆகிய இடங்களில் மார்க்கெட்டையும் விரிவாக்குவதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்கிறார்கள். நகரத்தின் மையத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையில் கட்டப்பட்டு, செம்மையான வணிகச் சேவையில் ஈடுபட்டுவரும் கோயம்பேடு மார்க்கெட்டைக் குலைக்காமல் மாதவரம், திருமழிசை ஆகிய இடங்களில் புதிய மார்க்கெட்டுகளை உருவாக்கினால் அதுதான் விரிவாக்கமாக அமையும்; அங்கும் புதிய தொழில்முனைவோரை உருவாக்க இயலும். அங்கிருக்கும் மக்களுக்கு அது உபயோகமாக இருக்கும். நன்றாக இருக்கும் ஒன்றை அழித்துவிட்டு, மற்றவற்றை உருவாக்குவதன் பெயர் விரிவாக்கம் அல்ல; அதன் பெயர் நாசமாக்கல். அதாவது, வயிற்றில் அடித்துப் பிடுங்குதல்!

மாதவரம் பழ மார்க்கெட்
மாதவரம் பழ மார்க்கெட்

சரி, மாதவரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிகப் பழ அங்காடிகளால் என்ன பலன்? இருக்கும் பிரச்னைகள் தீர்க்கப்படாமல், புதுப்புது தலைவலிகளையும், திருகுவலிகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது மாதவரம் மார்க்கெட். உண்மையில் அது மார்க்கெட் அல்ல, சென்னைக்கு வடக்கே இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தின் பகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வந்து செல்வதற்கு புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையம் அது. அதைத்தான் மார்க்கெட் ஆக்கியுள்ளனர். உரிய சமூக இடைவெளி இல்லாமல், அடுத்தடுத்து கடைகளை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த இடம் பஸ் நிறுத்தம் என்பதால் அடுத்தடுத்து நிற்கும் பஸ்களுக்கு இடையிலான இடைவெளிகூட கடைகளுக்கு இடையே கிடைக்கவில்லை.

கோயம்பேட்டில் தனித்தனிக் கட்டடங்கள் இருக்கின்றன. மாதவரத்தில் பந்தல் அமைத்து பாத்தி கட்டியதுபோல, திரைச்சீலைத் தடுப்புகள் அமைத்து முக்காடு போட்டிருக்கிறார்கள். முகக்கவசம் அணியச் சொல்லிக் கட்டாயப் படுத்துவதைத் தவிர வேறெந்தப் பாதுகாப்பு நடவடிக்கையும் அங்கே கடைப்பிடிப்பதில்லை.

இரவுகளில் மட்டுமே விற்பனைக்கு அனுமதி. மிச்சமிருக்கும் பழங்களை அப்படியே விட்டுவிட்டு பகலில் வீடுகளுக்குப் போக வாய்ப்பில்லை. அத்தனையும் திறந்தவெளிக் கூடாரங்கள். வைத்துவிட்டுப்போகும் பொருள்களுக்கு பாதுகாப்பு இல்லை. தின்னக் கொடுக்கும் பழங்களைத் திருடு கொடுத்து ஏமாந்திருக்கும் வணிகர்கள் பலர்!

‘எடுத்தேன், கவிழ்த்தேன்...’ என்று அரசு அதிகாரிகள் செயல்பட்டதுதான் இப்படி ‘திடீர் திருடர்கள்’ முளைத்திருப்பதற்கும் காரணம். கோயம்பேட்டில் கடைவைத்திருக்கும் வணிகர்கள் பலரும் மாதவரத்தில் கடை கேட்டு மனுச் செய்து காத்திருக்க... புதிதாக உருவாகியிருக்கும் திடீர் வியாபாரிகளுக்கு தாராளமாகக் கடைகளைக் கொடுத்திருக்கிறார்கள். யார் யாருக்கு, எந்த அடிப்படையில் தற்காலிக அங்காடிகள் ஒதுக்கப்பட்டன?

கோயம்பேடு வளாகத்துக்கு எதிரே தமிழக அரசின் குளிர்பதனக் கிடங்கு இருக்கிறது. தவிர, வணிகர்கள் பலர் அவரவர் அங்காடிகளுக்குள் சிறிய அளவில் பொருள்களைப் பாதுகாக்கும் அறைகளைக் கட்டிவைத்துள்ளனர். அன்றன்று விற்பனை செய்தவை போக மீதமிருக்கும் பழங்களையும், காலவரையறைக்கு உட்பட்ட உணவுப் பொருள்களையும் வைத்துப் பாதுகாக்க வசதியுண்டு.

வணிகர்கள் வயிற்றில் அடித்து பிடுங்குவதைத் தவிர 
வேறென்ன இது? - கோயம்பேடு பகீர் - 2

ஆனால், மாதவரத்தில் அப்படி இல்லை. பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக சர்க்கஸ் கூடாரம் போன்றதுதான் அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் பழங்கள் விற்பனை வளாகம். வெளியூர்களிலிருந்து வந்து இறங்கும் பழங்களைவைத்துப் பாதுகாக்க இயலாமல் அத்தனையும் பாழாகின்றன. யாருக்கும் பயன்படாமல் கெட்டுப்போகின்றன. மாதவரம் சென்று, இப்படி வீணாகும் பழங்களை வெளியே கொட்டும் இடத்தைப் பார்த்தால் `ஐயோ...’ எனப் பதைபதைப்பாக இருக்கிறது. “இன்னிக்கு எனக்கு 5 லட்ச ரூபாய் நஷ்டம்...”, “நேத்து எனக்கு 8 லட்ச ரூபாய் நாசம்...”, “ஐயோ அத்தனையும் பொண்டாட்டி நகையை அடகுவெச்சு வாங்கின காசாச்சே... என்ன பண்ணுவேன்?” என்று திரும்பிய பக்கமெல்லாம் வணிகர்களின் கதறல் குரல் கலங்கவைக்கிறது.

அதிகாரிகளுக்கு என்ன... இதிலும் கமிஷன் கல்லா கட்டிவிடுவார்கள். மாதவரம் பேருந்து நிலையத்தைத் தற்காலிக பழ மார்க்கெட்டாக மாற்ற எவ்வளவு பணம் செலவிட்டார்கள்... அதாவது, கணக்கு எழுதினார்கள் என்ற தகவல் இல்லை. ஆனால், மறுபடியும் பேருந்துகள் இயக்கப்படும்போது செலவழித்த பணத்தில் தம்படிகூடத் திரும்பக் கிடைக்காது.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க போதிய இட வசதி இல்லை; பழங்களை வைத்துப் பாதுகாக்க உள்கட்டமைப்பு வசதி இல்லை; கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முன்னேற்பாடுகள் இல்லை; கடைகள் ஒதுக்குவதில் ஒழுங்குமுறை இல்லை; ஒதுக்கிய கடைகளுக்கும் அடிப்படை வசதிகள் அறவே இல்லை... இப்படி இத்தனை ‘இல்லை’களை வைத்துக்கொண்டு என்ன சாதித்துவிடப்போகிறது மாதவரம்? அங்கிருந்து கொரோனா தொற்றால் மாதவரத்தில் வசிக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் காத்திருக்கும் நிஜம். பீதியைக் கிளப்பவில்லை. ஊடகவிய லாளனாக உண்மை நிலவரத்தைச் சொல்லி எச்சரிக்கிறேன். வெறுமனே சொல்லவில்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் தொடங்கிவிட்டன.

சமீபத்தில் மாதவரத்தில் காவல் பணியிலிருக்கும் போலீஸ்காரர்களுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னரே விழுந்தடித்துக்கொண்டு ஓடிய அதிகாரிகள், மே 26-ம் தேதியன்று மாதவரத்தில் முகாமிட்டு யோசித்தனர். தரைத்தளத்தில் இருக்கும் கடைகளில் பாதியை மொட்டைமாடிக்கு மாற்றும் நோக்கத்தில், தற்போது பஸ் ஸ்டாண்டில் மொட்டைமாடியில் தற்காலிக படுதாக்களுடன் கடைகள் அமைக்கும் பணியில் இருக்கிறார்கள்.

மாதவரம் தற்காலிக மார்க்கெட்டின் லட்சணம் இதுவென்றால் திருமழிசையின் லட்சணம்?

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism