Published:Updated:

உள்ளூர் வணிகர்களை அழித்து ஜாம்பவான் நிறுவனங்களுக்கு வரவேற்பு! - கோயம்பேடு பகீர் - 4

கோயம்பேடு
பிரீமியம் ஸ்டோரி
News
கோயம்பேடு

ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

ஜி.கௌதம்

கோயம்பேட்டில் செயல்பட்ட உணவு தானிய அங்காடி வணிகர்களின் நிலை என்ன? அரிசி, பருப்பு, பூண்டு, இதர மளிகைச் சாமான்கள் உட்பட அத்தனை உணவு தானியங்களையும் பல்வேறு நாடுகளிலிருந்தும், வட மாநிலங்களிலிருந்தும் வாங்கி, அவற்றைத் தமிழகம் முழுவதும் சப்ளை செய்துவந்தவர்கள் அவர்கள். மக்களின் தேவையையும், அதற்கான தங்கு தடையற்ற விநியோகத்தையும் சமநிலையில் பராமரித்து, விலைவாசியைக் கட்டுக்குள்வைத்திருந்தவர்கள் அவர்கள். ஆனால், மே 5-ம் தேதியிலிருந்து கையறு நிலையில் இருக்கிறார்கள் அந்த வணிகர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொரோனா பிரச்னை ஏற்பட்டதுமே, ‘அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்துக்குத் தட்டுப்பாடு வந்துவிடும்; நீங்கள் அதிக அளவில் பொருள்களை வாங்கி வையுங்கள். விலைவாசியைக் கட்டுக்குள் வையுங்கள்’ என உணவு தானிய மொத்த விற்பனையாளர்களை அவ்வப்போது கேட்டுக்கொண்டார்கள் அதிகாரிகள். மக்கள் நலனில்கொண்ட அக்கறையாலும், அரசை மதிக்கும் நட்புணர்வாலும் அதைச் செய்தார்கள் வணிகர்கள்.

ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் திடுதிப்பென மே 5-ம் தேதி வளாகத்தை இழுத்துப் பூட்டினார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வைத்திருந்த மொத்த விற்பனையாளர்கள் அதிர்ந்துபோனார்கள். கடைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த சரக்குகளை வெளியே எடுக்க முடியாமல் தவித்தனர் வியாபாரிகள்.

உள்ளூர் வணிகர்களை அழித்து ஜாம்பவான் நிறுவனங்களுக்கு வரவேற்பு! - கோயம்பேடு பகீர் - 4

பலமுறை கெஞ்சிக் கேட்டும், பலனில்லாததால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்கள் வணிகர்கள் (WP7619/2020, மனுதாரர் சா.சந்திரேசன், தமிழ்நாடு உணவு தானிய வணிகர்கள் சங்கத் தலைவர்). கடந்த 13.5.2020 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

வணிகர்கள் தரப்பின் நியாயத்தை உணர்ந்து, மே மாதம் 29-ம் தேதி இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம். அதன்படி, கடைகளுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை வணிகர்கள் வெளியே எடுத்துப் போக அனுமதித்தது நீதிமன்றம். ஆனால், பல நாள்களாகப் பராமரிக்கப்படாமல் உள்ளே இருந்ததால் டன் கணக்கான மளிகைப் பொருள்கள் பாழாய்ப்போய்விட்டன! ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும் மீதிப் பொருள்களை வெளியே எடுத்தாலும் அவற்றை எங்கே வைத்து பராமரிப்பது, விற்பது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டைவிடவும் பரபரப்பாக வியாபாரம் நடைபெறும் டெல்லி ஆஸாத்பூர் மண்டியில் அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சிறப்பாகச் செயல்பட்டனர். அங்கு இன்றுவரை எந்தக் குளறுபடியும் இல்லாமல் வியாபாரம் நடைபெறுகிறது.

உணவு தானிய வணிகர்கள் தரப்பில் இதைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் வாதாடிய போது, அரசுத் தரப்பில் சொல்லப்பட்டதாக அறிய கிடைத்த பதில் இது: ‘அவர்களால் முடிகிறது. எங்களால் முடியவில்லை!’ இதைச் சொல்லி, கைவிரிப்பதெல்லாம் ஒரு நல்ல அரசுக்கு அழகா?

வழக்கு நீதிமன்றம் வரை சென்றதன் பொருட்டு, மே 19-ம் தேதி உணவு தானிய வணிகர்களை அழைத்துப் பேசினார்கள் அங்காடி நிர்வாகக்குழு அதிகாரிகள். `உணவு தானிய வளாகத்தைத் திறந்துவிட அனுமதித்துவிடுவார்கள்’ என்று பெரும் நம்பிக்கையுடன் சென்ற வணிகர்களுக்கு அந்தக் கூட்டத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. கூடவே பலத்த அடியும் அங்கே ‘பரிசாக’க் கிடைத்தது! என்ன நடந்தது எனப் பார்ப்பதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் இன்னோர் ஆழமான பார்வையையும் செலுத்தியாக வேண்டும்.

சென்னைக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் உணவு தானியங்களை விநியோகித்துவந்த கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடிகள் பல வாரங்களாக முடக்கப்பட்டும், உணவு தானியங்களைப் பொறுத்தவரையில் இன்றுவரை தமிழகத்தில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏதும் ஏற்படவில்லை. காய்கறிகளின் விலைகளும், பழங்களின் விலைகளும் மட்டுமே ஒவ்வொரு நாளும் நிலையில்லாமல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

உள்ளூர் வணிகர்களை அழித்து ஜாம்பவான் நிறுவனங்களுக்கு வரவேற்பு! - கோயம்பேடு பகீர் - 4

மாநிலம் முழுவதுமுள்ள சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் கடைகளுக்கும் உணவு தானிய வகையறாக்கள் தங்கு தடையில்லாமல் சப்ளையாகிக்கொண்டுதான் இருக்கின்றன. அதெப்படி நடக்கிறது? ரகசியம் இதுதான். கோயம்பேடு வணிகர்கள் முடக்கப்பட்டு, வட மாநிலங்களிலிருந்து நேரடியாக விநியோகம் செய்யும் ஜாம்பவான் நிறுவனங்கள் பல இப்போது விநியோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, புதிய உணவு தானிய விநியோக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கப் பெரும் சதி நடக்கிறது!

அம்பானி, அதானி போன்றவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறார்கள். இதன் பலன் யாருக்கெல்லாம் கிடைக்கலாம் என தோண்டித் துருவியபோது கோயம்பேடு உணவு தானிய வளாகத்தைப் பூட்டிச் சாய்க்க முயல்வதன் உள்நோக்கம் தெளிவாகப் புரிகிறது! அது அடுத்த அத்தியாயத்தில்.

தொடர்புக்கு: editorGGowtham@gmail.com

திடீர் நோட்டீஸ் வணிகர்களுக்கு மிரட்டல்!

செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு நிலைமையைச் சீராக்குவதற்கு பதிலாக, புதுப்புது குளறுபடிகளைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள் தடாலடி அதிகாரிகள். அப்பாவி வணிகர்களின் குரலை மக்கள் சபைக்கு ஜூ.வி கொண்டு சேர்த்ததன் பிறகு வணிகர்களின் குரல்வளையை நசுக்கும் வேலையைத் தீவிரமாக்கியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

12.6.2020 அன்று காலை 7 மணி அளவில் மாதவரம் கடைகளில் இருந்தவர்களுக்கு திடீர் நோட்டீஸ் ஒன்றை விநியோகித்திருக்கிறார்கள். 100 கடைகளை மொட்டை மாடியில் உருவாக்கப்பட்டிருக்கும் டென்ட் கொட்டாய்களுக்கு மாற்றுவதாகவும், அன்று காலை 11 மணிக்கே அதற்கான குலுக்கல் நடைபெறுவதாகவும் தெரிவித்தது நோட்டீஸ்.

நள்ளிரவில் தொடங்கி காலை 7 மணி வரை மட்டுமே அங்கே வணிகம் செய்ய அனுமதி. அதன்படி காலை 7 மணிக்கு வியாபாரத்தை முடித்துவிட்டு, பெரும்பாலான வணிகர்கள் வீடு திரும்பிய பிறகு மிச்சம் மீதி இருந்த சிலரின் கைகளில் நோட்டீஸைத் திணித்து, ‘இன்னும் நான்கு மணி நேரத்தில் குலுக்கல்... கலந்துகொள்ளாதவர் களுக்கு இப்போது ஒதுக்கப்பட்டிருக்கும் கடைகளும் கேன்சல் செய்யப்படும்’ என்று மிரட்டி அவசரம் காட்டியிருக்கிறார்கள்.

சமூக விலகலைக் காரணம் காட்டி இப்படிச் செய்கிறோம் என்றார்கள் அதிகாரிகள். வணிகர்கள் தரப்பிலோ மாற்று யோசனையை முன்வைத்தார்கள். ‘தரைத்தளத்திலேயே அடுத்தடுத்த 100 கடைகளை முதல் நாளிலும், அடுத்த 100 கடைகளை மறு நாளிலும் திறந்து வியாபாரம் செய்து கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த கடைகள் காலியாகவே விடப்படும். அதனால், சமூக இடைவெளி போதுமானதாக இருக்கும்’ என்று கூறினார்கள். ஆனால், காது கொடுக்கத் தயாராக இல்லை அதிகாரிகள்.

பழ வணிகர்கள் வெகுண்டெழுந்து, ஆட்சேபனைக் கடிதம் கொடுத்ததால் 11 மணிக்கு குலுக்கல் நடக்கவில்லை. ஆனால், விடாப்பிடியாக இரண்டு மணி நேரம் கழித்து, குலுக்கலை நடத்தி முடித்தார்கள் அதிகாரிகள். கோயம்பேட்டில் பக்கா கட்டுமானத்தில் இருக்கும் 850 கடைகளை இடையிடையே மூன்று கடைகள் இடைவெளி விட்டுச் செயல்பட அனுமதித்தாலே இதைவிடவும் சிறப்பான சமூக இடைவெளியைப் பேணியிருக்கலாம்.

உள்ளூர் வணிகர்களை அழித்து ஜாம்பவான் நிறுவனங்களுக்கு வரவேற்பு! - கோயம்பேடு பகீர் - 4

அதைச் செய்யாமல் 850 வணிகர்களில் 650 பேரின் வாழ்வாதாரத்தை ஏற்கெனவே காலி செய்துவிட்டு, மிச்சமிருக்கும் 200 வணிகர்களில் 100 பேரை எந்த வசதிகளும் செய்யப்படாத மொட்டை மாடிக்குப் பிரித்து அனுப்பி... அவர்களையும் அழித்தொழிக்கும் கொடுங்கோல்தனம் தொடர்கிறது!