Published:Updated:

இரும்படிக்கும் இடத்தில் தானியத்துக்கு என்ன வேலை? - கோயம்பேடு பகீர் - 5

கோயம்பேடு பகீர்
பிரீமியம் ஸ்டோரி
News
கோயம்பேடு பகீர்

ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

ஜி.கௌதம்

கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் உள்ளூர் வணிகர்களின் வியாபாரத்தை முடக்கிவிட்டு, ஒரு சில வட இந்தியப் பெரு நிறுவனங்களுக்கு ஏகபோக உரிமையைத் தாரைவார்த்துக் கொடுக்கும் சதிச் செயலுக்கு வித்திடுகிறதோ என்ற சந்தேகத்தை கடந்த இதழில் முன்வைத்திருந்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதழ் வெளியானதும் தொடர்புகொண்ட பல வணிகர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். இடையிடையே கெடுபிடிகளால் மூடப் பட்டாலும் இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் கொத்தவால் சாவடி மார்க்கெட்டிலிருந்தும் உணவுப் பொருள் விநியோகம் அவ்வப்போது நடைபெறுவதாகவும், உள்ளூர் வணிகர்களின் விநியோக உரிமை இன்னும் முழுவதுமாகப் பறிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்தார்கள். ஆக, நிலைமை இப்போது கட்டுக்குள்தான் இருக்கிறது. சுதாரித்துக் கொண்டிருக்கிறார்கள் உள்ளூர் உணவு தானிய வணிகர்கள்.

ஒருவேளை அவர்களையும் மீறி பெரும்பாலான உணவு தானியங்களின் விநியோக உரிமை பெரு நிறுவனங்களுக்குப் போய்விட்டால் என்னவாகும் தெரியுமா? வாடிக்கையாளர்களைக் கவர அதிகப்படியான தள்ளுபடியில் பொருள்களை விற்பார்கள். `சல்லிசாகக் கிடைக்கிறதே...’ என்று மக்கள் உள்ளூர் ‘ஆட்டக்காரர்களை’ப் புறக்க ணிப்பார்கள். வியாபாரப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் உள்ளூர் வணிகர்கள் தொழிலைவிட்டே விலகுவார்கள். ஒரு கட்டத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சேர்ந்ததும், விலையேற்றம் தடாலடியாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதாரணமாக, வெறும் ஐம்பது-நூறு ரூபாய்க்குக் கிடைத்துக்கொண்டிருந்த கேபிள் டி.வி இணைப்புகள், பெரு நிறுவனங்கள் தொழிலில் நுழைந்த பிறகு இப்போது எவ்வளவு அதிகமாகி விட்டது என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். கேபிள் ஆபரேட்டர்கள் என்ற இனமே இப்போது அருகிவிட்டது! அப்படித்தான் உணவு தானிய வணிகத்திலும் நடக்கும்.

சரி, மே மாதம் 19-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன? கூட்டத்துக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். “கோயம்பேடு மார்க்கெட்டுகளைத் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார் அவர். வணிகர்கள் தரப்பிலோ, “கோயம்பேட்டில் இருந்துதான் கொரோனா நோய்த்தொற்று பரவியதாகப் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். இது எங்கள் மனதைப் புண்படுத்துவதாகவும், வேதனையளிப்பதாகவும் இருக்கிறது. வெளியிலிருந்து வந்தவர்களால்தான் கோயம்பேட்டில் தொற்று ஏற்பட்டது என்பது தான் உண்மை” என்று எடுத்துச் சொன்னார்கள்.

சாத்தாங்காடு - வெறிச்சோடி கிடக்கும் உணவு தானிய வளாகம்...
சாத்தாங்காடு - வெறிச்சோடி கிடக்கும் உணவு தானிய வளாகம்...

மேலும், “வெவ்வேறு இடங்களில் தற்காலிக அங்காடிகள் அமைப்பதால், கோடிக்கணக்கில் அரசுப் பணம் வீணாவதுடன் அதிகாரிகளின் நேரமும் விரயமாகிறது. எங்களுக்கும் கடன் சுமையும், கூடுதல் செலவும், சிரமங்களும் அதிகரிக்கின்றன. கோயம்பேடு மார்க் கெட்டிலேயே ஒரு கடையை அடைத்துவிட்டு மறுகடையைத் திறந்து, குறைந்தபட்சம் 15 அடி சமூக இடைவெளியுடன் வியாபாரத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். அரசு விதிக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக் கிறோம்’ என்றார்கள் வணிகர்கள்.

“வாய்ப்பு இல்லை. இருந்தாலும், உங்கள் கருத்தை அரசுக்குக் கொண்டு செல்கிறேன்” என்ற கார்த்திகேயன், “மாநகராட்சித் தரப்பிலிருந்து சில தற்காலிக இடங்களை ஒதுக்கத் திட்டம் உள்ளது. அந்த இடங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார். வணிகர் சங்க நிர்வாகிகளும் அதிகாரிகள் காட்டிய இடங்களைப் பார்வை யிட்டனர்.

கோயம்பேட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மஞ்சம்பாக்கத்திலுள்ள ஓர் இடத்தையும், 25 கிலோமீட்டர் தூரத்தில் மணலிக்கு அருகேயிருக்கும் சாத்தாங்காடு பகுதியில் ஓர் இடத்தையும் காட்டியிருக்கிறார்கள். இரண்டுமே போகாத ஊருக்கு வழிகாட்டும் ஆகாத இடங்கள்!

‘மஞ்சம்பாக்கம், சாத்தாங்காடு ஆகிய இடங்களையும் பார்வையிட்டோம். ஆனால், அந்த இடங்கள் வணிகத்துக்கு உகந்ததாக இல்லை. ஆபத்து நிறைந்தவையாகவும், உணவு தானியங்களைப் பாழ்படுத்தி அதன் தரத்தைச் சீர்கெடுக்கும்விதமாகத் தொழிற்சாலை மாசுகள் நிறைந்தவையாகவும் இருக்கின்றன’ என அரசுக்குக் கடிதம் எழுதினார்கள் வணிகர் சங்க நிர்வாகிகள்.

காய்கறி, பழங்கள்போல எளிதில் அழுகும் பொருள்கள் அல்ல உணவு தானியங்கள். அதேசமயம் அவற்றைப் பாதுகாத்து, பராமரிக்கவும் சில நிரந்தர கட்டமைப்பு வசதிகள் தேவை. `அழுகாத பொருள்தானே...’ என்று ஓர் அறையில் பருப்பு மூட்டைகளை அடுக்கிவிட முடியாது. டன் கணக்கில் வாங்கி வைத்து, மாதக்கணக்கில் வைத்து விற்பனை செய்யும் தானியங்களை அதற்கென இருக்கும் ஸ்டீல் ரேக்குகளிலும், அலமாரித் தட்டுகளிலும் வைத்துத் தான் கோயம்பேடு கடைகளில் பராமரித்தார்கள்.

புதிய இடங்களில் அமைக்கப்படும் தற்காலிகக் கூடாரங்களில் அவற்றை நிறுவுவதற்கு ஏகப்பட்ட செலவுகளைச் செய்ய வேண்டும். ஏற்கெனவே தொழிலை இழந்து, கடன் சுமைகளில் துவண்டு கிடக்கும் வணிகர்களுக்கு இது மேன்மேலும் கடன் சுமையைக் கூட்டும்!

இரும்படிக்கும் இடத்தில் தானியத்துக்கு என்ன வேலை? - கோயம்பேடு பகீர் - 5

தவிர, மூட்டை மூட்டையாக வரும் உணவு தானியங்களைச் சுத்தம் செய்து, பிரித்து, பாக்கெட்டு களில் அடைக்கும் வேலைகளைச் செய்வது பெரும்பாலும் பெண்கள்தான். அவர்களை, எந்தப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாத, சரியான கழிப்பறை வசதிகள்கூட செய்யப்படாத பொட்டல் வெளிகளுக்கு அழைத்துச் செல்வது ஆபத்தான செயலும்கூட.

சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி இறக்கும் லாரிகளை நிறுத்திவைப்பதற்காக, ஏற்கெனவே அரசால் ஒதுக்கப்பட்டிருக்கும் இடம்தான் (ட்ரக் யார்டு) அதிகாரிகள் காட்டிய மஞ்சம்பாக்கம். ஏற்கெனவே ஸ்டீல் வணிகர்களுக்காக ஒதுக்கப்பட்டு, அவர்களில் சிலர் தங்கள் வியாபாரத்தைச் செய்ய ஆரம்பித்திருக்கும் இரும்பு மற்றும் எஃகு மொத்த வியாபாரத்துக்கான மார்க்கெட்தான் சாத்தாங்காடு.

அரசின் ‘செயில்’ (Steel Authority of India Limited) தொழிற்சாலையை ஒட்டியபடி இருக்கும் இடமும்கூட. எந்நேரமும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் சிம்னிகளைக் கொண்டது அந்தத் தொழிற்சாலை.

பெரும்பாலான இரும்பு வணிகர்களே ‘அடிப்படை வசதிகள் இல்லை... ஆளை விடுங்க சாமி’ என்று ஓடிப்போய்விட்டார்கள். தொழிற்சாலைகளும், அவற்றின் கழிவுக் காற்றும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் பகுதியும்கூட. அங்கு இரும்புக்கடைகளுக்கு இடையிடையே இருக்கும் காலி இடங்களைக் காட்டி, “இந்த இடங்களில் உணவு தானியம் விற்பனை செய்துகொள்கிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.

மஞ்சம்பாக்கம் ட்ரக் யார்டு...
மஞ்சம்பாக்கம் ட்ரக் யார்டு...

‘இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?’ என்று ஒரு சொலவடை இருக்கிறதுதானே... அதுதான் தோணுகிறது.

பெருமளவு மாசடைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனமே சுட்டிக்காட்டியிருக்கும் இடங்களில் ஒன்று மணலி. அந்தச் சுற்றுச்சூழலில் உணவு தானியங்களை வைத்து விற்பனை செய்வது ஆரோக்கியமானதல்ல. இந்த அடிப்படை விஷயம்கூட தமிழக அரசுக்குத் தெரியாதா?

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் ஜி.எஸ்.டி இல்லை. உணவு தானியங்களுக்கு உண்டு. அதனால், கம்ப்யூட்டர்களையும், மென்பொருள் இணைக்கப்பட்ட பில்லிங் மெஷின்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். தங்கு தடையற்ற இணைய வசதியும் அவசியம். உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் FSSAI சான்றிதழைப் பெற்றிருந்தால் மட்டுமே உணவு தானிய வியாபாரத்தைச் செய்ய முடியும். கோயம்பேடு கடைகளில் வியாபாரம் செய்ய சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள் வணிகர்கள். புதிய இடங்களுக்கு அது பொருந்தாது. புதிதாக மனு செய்து சான்றிதழ் வாங்கலாம் என்றாலும், உணவுப் பாதுகாப்பு சட்ட திட்டங்கள் அந்த மாசு நிறைந்த மண்ணுக்குப் பொருந்தவே பொருந்தாது.

இத்தனை குழப்பங்களையும் தாண்டி புதிய இடங்களில் தற்காலிகக் கடைகளை விரித்தாலும், சிறு வியாபாரிகள் அவ்வளவு தூரம் சென்று வாங்க மாட்டார்கள். மேற்கண்ட பிரச்னைகள் அத்தனையையும் பட்டியலிட்டு அரசுக்குக் கடிதம் அனுப்பிவிட்டார்கள் வணிகர்கள். இப்போது தங்களது கடைசி நம்பிக்கையாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

470 கடைகளைக்கொண்டிருந்த கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தின் இப்போதைய நிலை என்ன?

தொடர்புக்கு: editorGGowtham@gmail.com

(தொடரும்)