Published:Updated:

கழிப்பறைக்கு அருகே மலர் வணிகம்... தொடரும் அதிகாரிகளின் அடாவடி! - கோயம்பேடு பகீர் - 6

வெறிச்சோடியுள்ள மாதவரம் 
மொட்டைமாடிக் கடைகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
வெறிச்சோடியுள்ள மாதவரம் மொட்டைமாடிக் கடைகள்...

ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

ஜி.கௌதம்

மாதவரம் தற்காலிகப் பழ அங்காடிகளில் பாதிக் கடைகளை பேருந்து நிலையத்தின் மொட்டைமாடி டென்ட் கொட்டாய்களுக்கு மாற்றுவதற்கு நடந்த ‘அச்சுறுத்தல்’ குலுக்கல் பற்றி ஏற்கெனவே எழுதி யிருந்தேன். `அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத மொட்டைமாடிக் கூடாரங்களால் பலன் எதுவும் கிடைக்காது’ என்றும் குறிப்பிட்டிருந்தேன். இறுதியில் அதுதான் நடந்திருக்கிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பேருந்துகளை நிறுத்தும் பிளாட்ஃபார்மான கீழ்த்தளத்தில் வியாபாரத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டவர்கள் ஓரளவு தப்பித்துக் கொண்டார்கள். மொட்டைமாடிக்கு அனுப்பப்பட்டவர்களின் நிலை அந்தோ பரிதாபம். சரக்குகளைக் கொண்டுவரும் கனரக வாகனங்களை மேல்தளத்துக்கு அனுமதிக்க வில்லை. நியாயமான காரணம்தான்... அவ்வளவு எடைகொண்ட வாகனங்களை மொட்டை மாடிக்கு அனுப்புவது கட்டடத்தையே ஆட்டம் காணச் செய்யலாம். அதனால்தான் முன்கூட்டியே வியாபாரிகள் தரப்பில் கீழ்த்தளத்திலேயே சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஒரு கடைவிட்டு ஒரு கடை நடத்துவதாக மன்றாடிக் கேட்டார்கள். எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை அதிகாரிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மும்மடங்கு செலவு... மூடப்பட்ட பழக்கடைகள்!

இதனால், பெரிய வாகனங்களில் வரும் பழங்களைச் சிறிய வாகனங்களுக்கு மாற்றியும், கூலி ஆட்களைவைத்து தலைச்சுமையாகவும் மாடிக் கடைகளுக்கு எடுத்துச் சென்றார்கள். மூன்று மடங்கு கூடுதல் செலவு. எப்படி விலை கட்டுபடியாகும்? கீழ்த்தளத்தில் மாம்பழத்துக்குக் குறைந்த விலையும், மேல்தளத்தில் கூடுதல் விலையும்வைத்து விற்றால் வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? பழ வியாபாரிகள் பலரும் குலுங்கி அழாத குறையாகக் கடைகளை மூடிவிட்டுப் போய்விட்டனர். காலியாக இருக்கின்றன மொட்டைமாடிக் கடைகள்.

வெறிச்சோடியுள்ள மாதவரம் 
மொட்டைமாடிக் கடைகள்...
வெறிச்சோடியுள்ள மாதவரம் மொட்டைமாடிக் கடைகள்...

ஏற்கெனவே, உணவு தானிய வணிகர்கள் முன்னெடுத்த வழக்கில், ‘வணிகர்கள் தங்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அணுகலாம்’ என்று சொல்லியிருந்தது சென்னை உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து வணிகர் சங்க நிர்வாகிகள் பலமுறை அங்காடி நிர்வாகக் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் - செயலர், மாநகராட்சி ஆணையர், அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையர், அரசு முதன்மைச் செயலாளர், துணை முதல்வர் என அத்தனை பேரையும் சந்திக்க நேரம் கேட்டுக் கடிதம் எழுதி ஓய்ந்துவிட்டார்கள். அவர்களைச் சந்திக்கத் தயாராக இல்லை அரசு.

அங்காடி நிர்வாகக்குழுவின் முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் மட்டும் வணிகர்களைப் பேச அழைத்தார். ஆனால், காணச் சென்று காத்திருந்த வணிகர்களிடம், ‘வேறு முக்கிய வேலை இருப்பதால் சி.எம்.டி.ஏ அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்’ என்று போனில் தெரிவித்தார். ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டனர் வணிகர்கள். அத்தியாவசிப் பொருள்களை விநியோகிப்பதில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களைச் சரிசெய்வதைவிட வேறேன்ன முக்கிய வேலையோ?

வாடிப்போன மலர் வியாபாரிகள்!

பழ வியாபாரிகளின் நிலை இதுவெனில், மலர் அங்காடி வணிகர்கள் எப்படி இருக்கிறார்கள்? அரசின் கொடுங்கண் பார்வையிலிருந்து அவர்கள் மட்டும் தப்ப முடியுமா என்ன?

470 கடைகளைக்கொண்ட மலர் அங்காடி வணிகர்களுக்கு இன்னும் தற்காலிக வியாபாரம் செய்ய இடமே ஒதுக்கப்படவில்லை.

மாதவரம் பேருந்து நிறுத்தத்தில் பழ அங்காடிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, கழிப்பறைக்குச் செல்லும் வழியில் இருபுறமும் பிளாட்ஃபாரத்தில் உட்கார்ந்து மலர் விற்றுக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, ‘கமகம’க்கும் கழிப்பறைக்கு அருகே மணமணக்கும் மலர் வியாபாரம்! அதுவும், 30 கடைகளுக்கு மட்டுமே அனுமதி. 470 வியாபாரிகளில் 30 பேரை மட்டும் எப்படித் தேர்ந்தெடுப்பது... மூட்டை மூட்டையாக வரும் உதிரிப்பூக்களை எங்கே குவித்துவைப்பது?

இந்தப் பிரச்னையை அணுகுவதற்கு முன்பாக பூ வியாபாரம் எப்படி நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உதிரிப்பூக்கள் கோயம்பேடு மலர் அங்காடிகளி லுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு வந்து சேரும். அவர்களிடமிருந்து அவற்றை வாங்கும் சிறு மொத்த விற்பனையாளர்களின் கடைகளும் மார்க்கெட்டுக்கு உள்ளேயே இருக்கும். அவர்கள் `செமி ஹோல்சேல் விற்பனையாளர்கள்’ என்றழைக்கப்படுகிறார்கள். இவர்களிடமிருந்து தான் சில்லறை விற்பனையாளர்கள் மலர்களை வாங்குகிறார்கள்.

சில்லறை விற்பனையாளர்களில் கணிசமானோர் வயதான பெண்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள். சிறு முதலீட்டில் தங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுபவர்கள். விளிம்புநிலை மனிதர்களான இவர்கள் கோயில்களிலும் தெருமுனைகளிலும் உட்கார்ந்து பூ வியாபாரம் செய்பவர்கள். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துசெல்வது அவர்களுக்கு அன்றாடம் பழகிப்போன ஒன்று. ஆனால், ஊருக்கு வெளியே பல கிலோமீட்டர் தொலைவில் மலர் அங்காடிகள் அமைக்கப் பட்டால், இவர்களால் சுலபமாக வந்து போக இயலாது. போக்குவரத்துச் செலவும் அலைச்சலும் கட்டுப்படியாகாது. சிறிய அளவு லாபத்தில் இயங்குவதே மலர் வியாபாரம். செலவுகள் அதிகரித்தால் சில்லறை வியாபாரிகளின் கடன் சுமைதான் அதிகரிக்கும்.

நெரிசலில் மாதவரம் தரைத்தளக் கடைகள்...
நெரிசலில் மாதவரம் தரைத்தளக் கடைகள்...

இந்தச் சிரமங்களையெல்லாம் கூறி, கையெடுத்துக் கும்பிட்டு, நகருக்குள் நல்ல இடமாக ஒதுக்கித்தரச் சொன்னார்கள் மலர் வியாபாரிகள். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் கொத்தவால் சாவடி நெருக்கடியைக் குறைப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் கட்டப்பட்டதும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கோயம்பேட்டில் முதலில் குடிபுகுந்தது மலர் வணிகர்கள்தான். பிறகுதான் இதர தரப்பினர் வந்தார்கள். ஆக... முதலில் வந்தவர்களுக்கு சேதாரத்தில் முன்னுரிமை!

தெருவுக்கு வந்த வணிகர்கள்...கைது செய்த காவல்துறை

கோயம்பேடு மார்க்கெட்டில் கடைவைத்திருத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்கறிக் கடைக்காரர் களில் வெறும் 200 பேருக்கு மட்டுமே திருமழிசையில் தகரக் கொட்டாய்க் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 850 பழ வணிகர்களில் 200 பேருக்கு மட்டுமே மாதவரத்தில் பந்தல் கடைகள் கொடுக்கப் பட்டுள்ளன. மிச்சமிருக்கும் வணிகர்கள் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்?

சின்மயா நகர் தெருக்களிலும், மதுரவாயல் பகுதிகளிலும் காய்கறி மற்றும் பழங்களை தெருவோரமாக விற்றுக்கொண்டிருந்தார்கள். நள்ளிரவுகளிலும் அதிகாலை நேரங்களிலும் சில நாள்கள் இது நடந்தது. இந்தப் பகுதிகளிலெல்லாம் இரவு வலம்வந்தபோது கண்ட காட்சிகள் பார்க்கப் பரிதாபமாக இருந்தன. அரைகுறை விளக்கு வெளிச்சத்திலும், இருளிலும் நின்று பதைபதைப்புடன் வியாபாரம் செய்தார்கள். போலீஸ்காரர்களும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் அவர்களின் நிமிடங்கள் கழிந்தன. இந்தப் பாவப்பட்ட வணிகர்களிடம் ‘மாமூல்’ வசூல் வேட்டையும் நடந்திருக்கிறது!

சில நாள்களுக்கு முன்னர் அதற்கும் முடிவு கட்டப்பட்டு விட்டது. ‘பேரம்’ படியவில்லையோ என்னவோ... அத்தனை வியாபாரிகளையும் ரவுண்டுகட்டி அடித்து, ஒரு சிலரை கைது செய்து அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள் போலீஸ்காரர்கள்.

`போதிய சமூக இடைவெளியைப் பின்பற்று கிறோம்; பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உடன்படுகிறோம்; கோயம்பேடு மார்க்கெட்டிலேயே ஒற்றப்படை இலக்கத்திலும், இரட்டைப்படை இலக்கத்திலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறி மாறிக் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்துகொள்கிறோம்’ என்று வீண் செலவுகளுக்கும் விரயங்களுக்கும் வழிவகுக்காத யோசனைகளை வியாபாரிகள் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் அரசு அதிகாரிகள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூணே முக்கால் கால் என்று பிடிவாதத்துடன் அழிச்சாட்டியம் செய்கிறார்கள். இதுவரை தாங்கள் எடுத்திருக்கும் துக்ளக் தர்பார் நடவடிக்கைகளால் பலனில்லை; அது படுதோல்வியில் முடிகிறது என்று தெரிந்த பிறகும் ஆக்கபூர்வமாகச் செயல்படாமல் பலரது வாழ்வாதாரத்தை அடியோடு அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒன்றா... இரண்டா? அரசு அதிகாரி களின் பிடிவாத அடாவடிகளை அடுத்த அத்தியாயத்தில் பட்டியலிடுகிறேன்.

தொடர்புக்கு: editorGGowtham@gmail.com

(தொடரும்)