ஜி.கௌதம்
குளறுபடிகளைப் பட்டியலிடுகிறேன் என்று கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன். அதற்கு முன்பாக, துயரங்களைப் பட்டியலிட்டு விடுகிறேன். ஏனெனில், நேரலை போன்றதொரு இந்தத் தொடர் என்னை நியாயங்களைத் தேடவைத்து எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. தூங்கி எழுந்து பார்த்தால் ஓரிரவில் வியாபாரிகளின் வாழ்க்கையைத் தாறுமாறாகப் புரட்டிப்போட்டிருக்கின்றன அரசின் அலட்சிய / அடாவடி நடவடிக்கைகள். அன்றாடம் தொடரும் துயரங்களை அவ்வப்போதே பதிவுசெய்ய வேண்டிய கடமை பத்திரிகையாளனுக்கு இருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS`எது நடந்துவிடக் கூடாது’ என நான் பதைபதைப்புடன் கடந்த ஆறு அத்தியாயங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேனோ அந்த துன்பங் களெல்லாம் கண்முன்னால் நடந்துவருகின்றன. இதழில் வெளிவந்ததைப் படித்த பிறகும் நடவடிக்கை எடுக்காமலும், அழிவுகளைக் கண்டும் காணாமலும் கடந்துபோகிறார்கள் அதிகாரிகள்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார். உணவை வீணடித்தால் பதறிப்போனார் அன்னை தெரசா. இவர்களெல்லாம் ஜூன் 21-ம் தேதி இரவு திருமழிசையிலும், ஜூன் 22-ம் தேதி காலை மாதவரத்திலும் இருந்திருந்தால் அங்கு காணக் கிடைத்த காட்சிகளைக் கண்டு மனம் வெந்திருப்பார்கள். அதிகாரிகளின் அவலட்சண திட்டங்களால் மாதவரத்தில் வலுக்கட்டாயமாகக் குப்பையில் வீசப்பட்டன சுமார் 30 டன் பழங்கள். அரை மணி நேரம் பெய்த சிறு மழைக்கே அல்லுசில்லானது திருமழிசை. தகர டப்பா கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. காய்கறிகள் எல்லாம் பாழாகின.
வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள் வியாபாரிகள். ‘வேடிக்கை’ பார்க்க வந்த அங்காடி நிர்வாகக்குழு அதிகாரிகளிடம், “நீங்க சொல்லும் அத்தனை நிபந்தனைகளையும் கடைப்பிடிக்கிறோம்; கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி கொடுங்கய்யா... அது கான்கிரீட் கட்டடம். அநியாயமா இப்படிச் சரக்கெல்லாம் வீணாகாது...” எனக் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதற்கு அதிகாரிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா? “உங்களை யாரு இப்படி நஷ்டப்பட்டுக்கிட்டு கடை நடத்தச் சொன்னது... `முடியலை’னு சொல்லி எழுதிக் கொடுத்துட்டு கடையை விட்டுட்டுப் போயிட வேண்டியதுதானே...” என்று கூறி விரட்டியடித்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக அந்த நிமிடம் அங்கே நானும் இருந்ததால். இந்த அலட்சியத்தைக் காணும் துர்பாக்கியம் கிடைத்தது.
வணிக நடைமுறை எதையும் தெரிந்துகொள்ளாமல் அங்காடி நிர்வாகக்குழு அதிகாரிகளும், காவல் துறையினரும் செய்த அடாவடிகள்தான் மாதவரத்தில் டன் கணக்கில் பழங்கள் பாழானதற்குக் காரணம். இன்னொரு அடாவடியும் நடந்தது. சில்லறை வியாபாரிகள் வழக்கமாக ஆட்டோக்களிலும் இரு சக்கர வாகனங்களிலும்தான் பெரும்பாலும் மார்க்கெட்டுக்கு வருவார்கள். கொள்முதல் செய்த பொருள்களின் அளவுக்கேற்ப சரக்கு வாகனங் களை வாடகைக்குப் பிடிப்பார்கள்; ஏற்றிக்கொண்டு செல்வார்கள்.

அப்படித்தான் மாதவரத்துக்கும் வந்தார்கள் சிறு வியாபாரிகள். போலீஸ்காரர்களைப் பொறுத்தவரை ஆட்டோக்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் வருபவர்கள் வியாபாரிகள் அல்ல; வெட்டியாக ஊர் சுற்றுபவர்கள் அல்லது ரவுடிகள். அவர்கள் அனைவரையும் அடித்து விரட்டினார்கள். கொள்முதல் செய்ய வந்தவர்களில் பலரால் மாதவரம் (தற்காலிக) மார்க்கெட்டுக்குள் அடியெடுத்துவைக்கக்கூட முடியவில்லை. நான்கைந்து நாள்களாக மாதவரத்தில் இதுதான் நடந்தது.
சிறு வியாபாரிகள் வாங்காததால், பழங்களெல்லாம் கொள்வாரின்றி வீணாகின. அவற்றைப் பாதுகாத்துவைக்க இடமில்லை. ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி கூடுதல் செலவு. வேறு வழியே இல்லை... பேருந்து நிறுத்தத்தின் பிளாட்ஃபாரத் திலேயே வெயிலிலும் மழையிலும் கிடந்து அழுகின டன் கணக்கான பழங்கள். ரத்தக்கண்ணீர் சிந்தாத குறையாக அழுதார்கள் வணிகர்கள். அழுகிய பழங்கள் அனைத்தும் குப்பையில் கொட்டப்பட்டன. அதிகார வர்க்கத்துக்குப் பணம் பந்தி விரித்ததால், `குணம்’ என்ற பழங்கள் குப்பைக்குப் போயிருக்கின்றன!
********
கோயம்பேடு மார்க்கெட்டை ‘கொரோனா க்ளஸ்டர்’ என்று அறிவித்ததற்கு அடிப்படைக் காரணம், ஒரே ஒரு வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம்தான் என்பதை ஆதாரத்துடன் ஏற்கெனவே இந்தத் தொடரில் தெரிவித்திருந்தேன். தோண்டத் தோண்ட வரும் பூதம் என்பதுபோல ஆதாரங்களைத் தேடத் தேட கூடுதல் விவரங்கள் கொட்டுகின்றன. அவற்றை யெல்லாம் வைத்துப் பார்த்தால், எங்கிருந்தோ சில ‘அதிகாரக் கரங்கள்’ மார்க்கெட்டைத் துண்டுபோடத் துடிப்பது நன்றாகவே தெரிகிறது.
முதன்முதலாக அம்பத்தூரில் வசிக்கும் கோயம்பேடு வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாம். அவரின் அம்மாவையும் மனைவியையும் சோதனை செய்து, அவர்களுக்கும் கொரோனா என்று உறுதி செய்தார்களாம். சம்பந்தப்பட்ட வியாபாரி சுமார் 15 வியாபாரி களுடன் தொடர்பில் இருந்தார் என்பதாலும், அவரின் மனைவி அக்கம்பக்கத்து வீட்டினருடன் அடிக்கடி உரையாடினார் என்பதாலும் கோயம்பேடு மார்க்கெட்டைப் பூட்டினார்களாம். சுகாதாரத்துறை இணை ஆணையர் இதைத் தெரிவித்திருக்கிறார்.
ஏமாந்தவன் ஒருவன் கிடைத்தால் காவல் துறையினர் மொத்த வழக்குகளையும் அந்த அப்பாவிமீது போடுவார்கள் அல்லவா... அப்படித் தான் கோயம்பேடு கொரோனா விவகாரத்திலும் நடந்திருக்கிறது. வளசரவாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகளையும் கோயம்பேடு கணக்கில் சேர்த்தே ‘கொரோனோ’ கூறுகட்டி, பொய்யைச் ‘சமைத்திருக்கிறார்கள்’.
கோயம்பேட்டிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், திருவான்மியூருக்கு அருகே இருக்கும் கண்ணகி நகரில் ஒருவர் பாதிப்படைந்தார். அவர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் போய்வந்தார் என்பதால் அவரையும் மார்க்கெட் கணக்கில் சேர்த்திருக்கிறார்கள். மார்க்கெட்டுக்கு அருகே சலூன் கடை நடத்தியவருக்கு கொரோனா. அவரது கடைக்குச் சென்ற கோயம்பேடு மற்றும் சின்மயா நகர் பொதுமக்களையும் ‘மார்க்கெட் மண்டகப் படி’யில் சேர்த்துவிட்டார்கள்.
இப்படி, கூட்டிக் கூட்டிக் கணக்கு போட்டாலும் கூட `கோயம்பேடு க்ளஸ்டரில் பாதிக்கப்பட்டவர்கள்’ என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது 1,222 பேர் மட்டுமே. அவர்களுடன் தொடர்பில் இருந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் 3,260 பேர். இந்த 4,482 பேரில் இருவர் இறந்துவிட்டனர், மீதமுள்ள 4,480 பேரும் குணமடைந்துவிட்டனர். கடந்த 15 நாள்களில் புதிதாக நோய்த்தொற்று எதுவும் பதிவாகவில்லை. இதைத் தெரிவித்திருப்பது சுகாதாரத்துறை இணை ஆணையர்.

ஆக, அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி இப்போது கோயம்பேடு வியாபாரிகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. ஊருக்கே சோறுபோட்ட மார்க்கெட்டை மயானம்போல பார்க்கையில் மனதில் வெறுமை படர்கிறது. கூலித் தொழிலாளி தொடங்கி கோடிகளில் கடைவிரித்த வியாபாரிவரை தொடர் ஓட்டமாக ஓடி ஜீவனத்தின் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொண்ட பூமி அது. இன்றோ மனிதத் தலைகளே தென்படவில்லை. வெயிலை நக்கிக்கொண்டு திரிகின்றன பத்து பதினைந்து தெரு நாய்கள்.
தவறுகள் செய்யாத மனிதனும் இல்லை; மன்னனும் இல்லை. சொல்லப்போனால் தவறுகளே நமக்குப் பாடம் கற்பிக்கும் ஆசான்கள். திருத்திக்கொள்வது மனித இயல்பு. அதிகாரிகளும் அதிகார வர்க்கமும் இனியாவது தவறுகளைத் திருத்திக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுக்க முன்வர வேண்டும்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து, அனைத்து அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கம் என கடைகளை இரு கூறுகளாகப் பிரித்து, ஒரு நாள் விட்டு மறுநாள் மட்டும் திறக்க அனுமதித்தால்... குழப்பங்களெல்லாம் ஓரிரு நாள்களில் சரியாகும். மாதவரத்தில் சாத்தியமாகாத சமூக இடைவெளி யையும் இங்கு சாதிக்கலாம். கோயம்பேடு மார்க்கெட் மொத்தமும் கான்கிரீட் தளம். மழைக்குத் தாங்காமல் கிழிந்து தொங்கும் திருமழிசைத் துயரங்களும் தொலைந்துபோகும்.
தொடர்புக்கு: editorGGowtham@gmail.com
(தொடரும்)
சல்யூட் சர்ச்சை!
காவல்துறை உயரதிகாரிகள் மாதவரம் மார்க்கெட்டுக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும் நுழைவாயிலில் நிற்கும் காவலர்கள் சல்யூட் அடிப்பார்கள். வருவாய்த்துறை, சி.எம்.டி.ஏ மற்றும் அங்காடி நிர்வாகக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்த சல்யூட் கிடைக்காது. துறைரீதியாக அதுதான் சரியும்கூட. இன்னும் சொல்லப்போனால், காவல்துறை உயரதிகாரிகளுக்கே சல்யூட் வைக்க வேண்டிய விஷயத்தில் அது தேவையா, காலனியாதிக்க அடிமைத்தனத்தின் மிச்சம் நமக்கு எதற்கு என்றெல்லாம் காவல்துறைக்கு உள்ளேயே பல்வேறு மாற்றுக் கருத்துகள் நிலவுகின்றன.
இப்படியான சூழலில்தான் விவரம் புரியாமல் வெகுண்டெழுந்தார்கள் வருவாய்த்துறை அதிகாரிகள். ‘என்ன மேன்... எங்களைப் பார்த்தா அதிகாரியா தெரியலையா... நாங்க வர்றப்பயும் சல்யூட் அடிக்கணும் ஆங்...” என்று காவலர்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏராளமான காரணங்களால் ஏற்கெனவே கடுப்பிலிருப்பவர்கள் அந்தக் காவலர்கள். “முடியவே முடியாது” என்று மறுத்துவிட்டார்கள். ஆரம்பித்திருக்கிறது பனிப்போர். இன்னும் என்னென்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறதோ!