Published:Updated:

பொம்மலாட்டம் நடக்குது... அது பித்தலாட்டமாக இருக்குது! - - கோயம்பேடு பகீர் - 9

கோயம்பேடு பகீர்
பிரீமியம் ஸ்டோரி
கோயம்பேடு பகீர்

ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

பொம்மலாட்டம் நடக்குது... அது பித்தலாட்டமாக இருக்குது! - - கோயம்பேடு பகீர் - 9

ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

Published:Updated:
கோயம்பேடு பகீர்
பிரீமியம் ஸ்டோரி
கோயம்பேடு பகீர்

ஜி.கௌதம்

இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோயம்பேடு வணிகர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக் கிறார்கள். கடந்த எட்டு அத்தியாயங்களாக அவர்கள் படும் துயரங்களைப் பதிவு செய்துகொண்டிருக்கிறேன்.

அரசு இயந்திரம் இன்னமும் காது கொடுத்துக் கேட்டபாடில்லை. அதற்கு பதிலாக புதுப்புது குளறுபடிகளுடன், ஏற்கெனவே இருக்கும் விநியோகச் சங்கிலியை சிதைப்பதைத்தான் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கான காரணம் என்னவாக இருக்கக்கூடும் என யூகிக்க முடிகிறதா?

செய்தித்தாள்களில் வெளியாகும் சிறு சிறு வணிகச் செய்திகளை கவனித்தது உண்டா? வெகுஜனம் அதைப் படித்துவிட்டு வெறுமனே கடந்துபோய்விடும். ஆனால், அதன் பின்னிருக்கும் நுண்ணரசியல் பிரமாண்டமானது. ஆக்டோபஸ்ஸின் கரங்கள் கணக்காக அத்தனையையும் வளைக்கக்கூடியது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமன்றி அரசியலையும், அதன் நீட்சியாக அதிகாரத்தையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது. உலகமயமாதலுக்குப் பிறகு இந்தியா உட்பட பல நாடுகளில் அதுதான் நடந்துவருகிறது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி சில நூறு கோடி மதிப்புள்ள கோயம்பேடு மார்க்கெட் வரை எதையும் வளைக்கும் கரங்கள் அவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கீழே நான்கு செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அத்தனையும் நாளிதழ்களின் பிரின்ட் மற்றும் ஆன்லைன் வணிகச்செய்திப் பக்கங்களில் சமீப நாள்களில் வெளியானவை. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாதவைபோலத் தோன்றும். உற்றுக் கவனியுங்கள்... ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பது புரியும்.

செய்தி 1

உணவு தானிய உற்பத்தியிலும் இறக்குமதியிலும் இயங்கிக்கொண்டிருக்கும் அதானி குழுமத்தின் அங்கமான அதானி வில்மர் நிறுவனத்துக்கு ‘ஃபுட் ஃபோர்டிஃபிகேஷன் சாம்பியன்’ (Food Fortification Champion) விருது வழங்கப்படுகிறது. தினசரி 16,800 டன் எண்ணெய்ச் சுத்திகரிப்பையும், 6,000 டன் உணவு தானியச் சுத்திகரிப்பையும் செய்யும் திறன் கொண்ட இந்த நிறுவனம், 12,900 டன் உணவு தானியங்களை தினமும் பேக்கிங் செய்யும் வசதியையும் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஆறு மாத காலத்துக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அதானி குழும நிறுவனங்களின் கிடங்குகளில் எப்போதும் இருப்பில் இருக்கும்.

பொம்மலாட்டம் நடக்குது... அது பித்தலாட்டமாக இருக்குது! - - கோயம்பேடு பகீர் - 9

செய்தி 2

காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு தானியங்களை விற்பனை செய்துவந்த பிரபல உள்ளூர் சிறு நிறுவனங்களைக் கையகப்படுத்தி, அவற்றை லாபகரமான சங்கிலித்தொடர் நிறுவனங்களாக மாற்றும் செயலில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டுவந்தது அதானி குழுமம். அப்படிக் கட்டமைக்கப்பட்ட அதானி ரீடெயில் நிறுவனம் நூற்றுக்கணக்கான சூப்பர் மார்க்கெட்டுகளையும் ஹைபர் மார்க்கெட்டு களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அதானி குழுமத்துக்குச் சொந்தமான இந்த சில்லறை விற்பனை சங்கிலித்தொடர் நிறுவனங்களை ரிலையன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்குவதாகத் தெரியவருகிறது. இதுவரை சில்லறை விற்பனையிலும் கவனம் செலுத்திவந்த அதானி குழுமம், சில்லறை விற்பனையை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விட்டுக்கொடுத் திருக்கிறது. அது மட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்களை தங்கு தடையின்றி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாகவும் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

செய்தி 3

ரிலையன்ஸ் நிறுவனம், தனது ஆன்லைன் வர்த்தகத்தின் அடுத்த கட்டமாக `ஜியோ மார்ட்’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதலால் தேசமே ஸ்தம்பித்துக் கிடக்கும் இந்தச் சூழலில், மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இதன் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது ஜியோ மார்ட்.

ஜியோ மார்ட்டின் டெலிவரி சேவை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மும்பையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோ மார்ட் சேவை தொடங்கப்பட்டிருப்ப தாகவும், நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாமோதர் மால். ஜியோ மார்ட் ஆன்லைன் சேவை இனி காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருள்கள் விநியோகச் சந்தையின் பெரும் பங்கைக் கைப்பற்றும்.

புதைகுழியான திருமழிசை...
புதைகுழியான திருமழிசை...

செய்தி 4

இந்தியப் பிரதமராக பதவியேற்ற முதல் நான்கு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 52 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். இதற்காக அரசு செலவிட்ட தொகை 355 கோடி ரூபாய். இந்தப் பயணங்களில் பிரதமருடன் கலந்துகொண்ட வணிகர்களில் கௌதம் அதானியும் அனில் அம்பானியும் இடம் பெற்றிருந்தனர். பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின்போது இவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கான 16 நாடுகளில், 18 வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றில் 13 ஒப்பந்தங்கள் அதானி குழும நிறுவனங்கள் சார்பாகவும், ஐந்து ஒப்பந்தங்கள் அனில் அம்பானி குழும நிறுவனங்களின் சார்பாகவும் கையெழுத்திடப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில்களில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

மீண்டும் ஒரு முறை மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் நான்கு செய்திக் குறிப்புகளையும் படியுங்கள். கோயம்பேடு மார்க்கெட்டை இழுத்துப் பூட்டியதற்குக் காரணம் கொரோனாவாக மட்டுமே இருக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.

*******

திருமழிசையில் இயங்கிவரும் தற்காலிக தகரக் கொட்டகைக் காய்கறி அங்காடி வளாகம், கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் மழையால் கிட்டத்தட்ட புதைகுழிகளாகிவிட்டது. அதனால், இந்தத் தற்காலிக இடத்தையும் மாற்றப்போகிறார் களாம். கடந்த வாரம் உயரதிகாரிகள் படை ஒன்று கூடுவாஞ்சேரியை அடுத்த காட்டாங்குளத்தூருக்குச் சென்று சில இடங்களைப் பார்வையிட்டிருக்கிறது. திருப்தி இல்லாததால், பழைய மகாபலிபுரம் சாலைப் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். கேளம்பாக்கம்-திருப்போரூர் இடையே வேறோர் இடம் தேடிக்கொண்டிருப்பதாகத் தகவல்.

மாதவரம் பேருந்து நிலைய பிளாட்ஃபாரத்தின் பழ அங்காடிகளில் டன் கணக்கில் பழங்கள் பாழாவதாக நமது செய்தி வெளியானதைத் தொடர்ந்து, குளிர்பதன வசதிகொண்ட கன்டெய்னர்களை அங்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆக மொத்தம், பத்து திருமழிசைகளையும், பத்துக்கும் மேற்பட்ட மாதவரங்களையும் தன்னுள்ளே அடக்கிக்கொள்ளும் அளவுள்ள கோயம்பேடு மார்க்கெட்டை மறுபடியும் திறப்பதற்கான சிந்தனை இந்த ஆட்சியாளர்களிடம் துளியும் இல்லை.

‘‘இங்கே நாம் பார்ப்பதெல்லாம் பொம்மலாட்டம். நூலைப் பிடித்திருக்கும் கைகளுக்குச் சொந்தக்காரர்களால் ஆட்டுவிக்கப்படும் பித்தலாட்டம். மேற்கண்ட வணிகத்தில் பெரு நிறுவனங்கள் சென்னையிலும் சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவிட்டன. சோதனைகளை முடித்து, அவர்கள் காலூன்ற வேண்டும். அதுவரை கோயம்பேட்டைத் திறக்க மாட்டார்கள். இதுவே கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதன் பின்னிருக்கும் சதியின் வலைப்பின்னல்’’ என்பதே கோயம்பேடு வியாபாரிகளின் குரலாக இருக்கிறது.

(தொடரும்)

தொடர்புக்கு: editorGGowtham@gmail.com