காபூல் தாக்குதல்; துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையே பிறந்த குழந்தை -பிரசவத்தை விவரிக்கும் பெண்

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் மருத்துவமனையில் இருந்த சில பெண்கள் ஒரு அறைக்குள் சென்று கதவுகளைத் தாழிட்டுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனையில் மே 12-ம் தேதி துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 15 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் மருத்துவமனையில் இருந்த சில பெண்கள் ஒரு அறைக்குள் சென்று கதவுகளைத் தாழிட்டுக்கொண்டனர்.

துப்பாக்கிக் குண்டுகளின் சத்தங்களுக்கு இடையே அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்த அறையில் இருந்தனர். அந்தச் சிறிய அறையில் இருந்த கர்ப்பிணிகளின் வேண்டுதல்கள் எல்லாம் கருவில் இருக்கும் குழந்தையைப் பத்திரமாகப் பெற்றெடுக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கும். அப்போது திடீரென ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் பயங்கரவாதிகளின் அச்சத்தால் பிரசவ வலி ஏற்பட்டும் அவர் சத்தம் போடவில்லை. தன் கருவில் இருக்கும் குழந்தைக்காக அந்தவலியைப் பொறுத்துக்கொண்டு பிரசவத்துள்ளார். பிறந்த குழந்தை அழுதுவிடக்கூடாது என்பதற்காக குழந்தையின் வாயில் விரலை வைத்துள்ளார்.

பிரசவம் பார்த்த பெண் பேசுகையில், ``பயங்கரவாதிகள் மருத்துவமனையின் ஒவ்வொரு அறைக்கும் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் சத்தம்போட்டது எங்களுக்குக் கேட்டது. அப்போது ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் ஒரு அறையில்தான் இருந்தோம். எங்களிடம் எந்தப் பொருள்களும் இல்லை. அந்த அறையில் சில டாய்லெட் பேப்பர்களும் நாங்கள் அணிந்திருந்த ஸ்கார்ப் மட்டுமே இருந்தன.
அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்ததும் வெறும் கைகளாலே தொப்புள் கொடியை அறுத்தோம். நாங்கள் தலையில் அணிந்திருந்த துணியைக் கொண்டு குழந்தையின் உடலைச் சுற்றினோம். பயங்கரவாதிகள் வெளியிலிருந்து கதவைத் திறங்கள் என்று கூறினர். நாங்கள் அனைவரும் அமைதியாகவே இருந்தோம். எங்களுக்கு தெரியும் அவர்கள் பாதுகாப்புப் படை வீரர்கள் இல்லை” எனச் சம்பவத்தை விவரித்தார்.

அந்த மருத்துவமனையில் 26 தாய்மார்கள் இருந்ததாக மகப்பேறு வார்டின் இன்சார்ஜ் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3 பெண்கள் பிறந்த குழந்தைகளுடன் பிரசவ வார்டில் இருந்தவர்கள் என்று கூறுகின்றனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்த 18 குழந்தைகள் பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளின் வேலையாக இருக்கும் என அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.