Published:Updated:

களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!

வேட்டை நடந்த களக்காடு வனச்சரகம்

விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்து அதில் வன விலங்குகளைச் சிக்க வைத்து நூதனமாகப் பிடித்துள்ளனர். இந்த வேட்டைக் கும்பலில் அரசியல் புள்ளிகளும் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!

விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்து அதில் வன விலங்குகளைச் சிக்க வைத்து நூதனமாகப் பிடித்துள்ளனர். இந்த வேட்டைக் கும்பலில் அரசியல் புள்ளிகளும் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

Published:Updated:
வேட்டை நடந்த களக்காடு வனச்சரகம்

நெல்லை மாவட்டம் களக்காடு காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தப் பகுதியில் மான், மிளா, முயல், காட்டுப்பன்றி, உடும்பு உள்ளிட்ட விலங்குகளை ஒரு கும்பல் வேட்டையாடுவதால் அந்தப் பகுதியில் வேட்டை தடுப்புக் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரடியின் எலும்புகள்
கரடியின் எலும்புகள்

இந்த நிலையில், களக்காடு மலையடிவாரத்தில், ஜெயராஜ் என்பவரின் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிக்கும் விலங்குகளை ஒரு கும்பல் வேட்டையாடி வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள மின் வேலியில் கரடி ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளது. அதை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே குழி தோண்டிப் புதைத்துள்ளனர்.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கரடியைத் தோட்டத்தில் புதைத்தது குறித்து வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாகக் களக்காடு துணை இயக்குநர் ராமேஸ்வரனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரது உத்தரவுப்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள்.

மருத்துவக் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள்
மருத்துவக் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள்

அதில் கரடியை அங்குள்ள குளத்துப் பகுதியில் ஆழமாகக் குழிதோண்டிப் புதைத்துள்ளனர். வனத்துறையினர் அந்தத் தோட்டத்தின் காவலாளியான கணேசன் என்பவரைக் கைது செய்து விசாரித்தனர். அப்போது தோட்டத்தில் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்ததையும் அதில் சிக்கும் விலங்குகளை மட்டும் அல்லாமல் தோட்டத்துக்கு அருகில் வரும் விலங்குகளையும் வேட்டையாடி வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து வனத்துறையினரிடம் பேசியபோது, ``களக்காடு வனப்பகுதியில் அரசியல்வாதிகள் அடங்கிய ஒரு கும்பல் வனவேட்டையில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காட்டுக்குள் சென்று விலங்கு வேட்டையில் ஈடுபட முடியாததால் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாடி வந்திருக்கிறார்கள்.

விசாரணை நடந்த வனத்துறை அலுவலகம்
விசாரணை நடந்த வனத்துறை அலுவலகம்

அந்தக் கும்பல் இதுவரை நூற்றுக்கும் அதிகமான விலங்குகளை வேட்டையாடி இருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம். வேட்டையாடும் விலங்குகளின் கறியை பங்கு வைத்துச் சமைத்துள்ளனர். ஏற்கெனவே கைதான தோட்டத்தின் காவலாளி கணேசன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கசாலி கண்ணன், ஜெயராஜ், பாலன் உள்ளிட்டோரைத் தேடி வருகிறோம். அவர்கள் பிடிபட்டால் வேட்டையாடும் ஒட்டுமொத்த கும்பலும் சிக்கும் என நம்புகிறோம்” என்றார்கள்.

மின்வேலியில் சிக்கிய கரடி புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி அங்கிருந்த எலும்புகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், அருகில் இருக்கும் தோட்டங்களிலும் வேட்டைக் கும்பல் புதைத்த விலங்குகளின் எலும்புகள் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுந்திருப்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.