சினிமா
தொடர்கள்
Published:Updated:

“நாம பணிஞ்சிட்டா தலைமுறையே பாதிக்குமேன்னு பயம்!:”

காளியம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
காளியம்மாள்

அப்படியே கீழேயே இருந்து வாழப் பழகிட்டோம். எங்களைத் தேடி வர்ற ஒரே வாகனம்னா, போலீஸ் வாகனம்தான்.

‘‘இடையில நிறைய கஷ்டங்கள் வந்திருக்குண்ணா... முதன்முதலா முன்னடி எடுத்து வச்சிருக்கிறது நாமதான். நாம கஷ்டங்களுக்குப் பணிஞ்சிட்டா தலைமுறையே பாதிக்குமேன்னு பயம். அந்தப் பயம்தான் இன்னைக்கு என்னை வக்கீல் ஆக்கியிருக்கு...’’ பணிவும் கனிவுமாகப் பேசுகிறார் காளியம்மாள். ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி மிகவும் இருளடைந்து கிடக்கிற இருளர் சமூகத்திலிருந்து தடை கடந்து வந்திருக்கும் முதல் வழக்கறிஞர்.

கோவை மாவட்டம் கோபனாரியை அடுத்துள்ள தோளம்பாளையத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள். பணியம் பார்த்தே கூன்விழுந்து, நோயிலும் விழுந்துவிட்ட மருதனுக்கும் கூலிவேலைக்குப் போய் குடும்பம் காக்கிற ஆண்டிச்சிக்கும் பிறந்த ஒரே மகள். பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கவே அனுமதிக்கப்படாத ஒரு விளிம்பு சமூகத்திலிருந்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பும் உயரத்தை எட்டிப் பிடித்திருக்கும் காளியம்மாளுக்கு எதுவுமே எளிதில் வாய்த்துவிடவில்லை.

 “நாம பணிஞ்சிட்டா தலைமுறையே பாதிக்குமேன்னு பயம்!:”

‘‘உண்மைதாண்ணா! அப்படியே கீழேயே இருந்து வாழப் பழகிட்டோம். எங்களைத் தேடி வர்ற ஒரே வாகனம்னா, போலீஸ் வாகனம்தான். எங்கே திருட்டு நடந்தாலும் ‘எங்காவது ஒரு இருளனைப் பிடிச்சுக்கிட்டு வா'ன்னுதானே இன்னைக்கு வரைக்கும் சொல்லிக்கிட்டிருக்காங்க. எங்க தாத்தா, பாட்டன்லாம் பட்ட கஷ்டங்களை எங்க அப்பா, அண்ணனுங்க படக்கூடாதுங்கிறதுக் காகதான் சட்டம் படிக்க ஆசைப்பட்டேன்.

எங்கூர்ல 90 குடும்பங்கள் இருக்கு. ஆடு, மாடு மேய்க்கிறது அல்லது கல்லறுக்கப் போறது... அதுவும் கிடைக்கலேன்னா, வருஷத்துக்கு 3,000, 4,000 முன்பணம் வாங்கிக்கிட்டுப் பணியம் பண்ணி கடனைக் கழிக்கிறதுதான் எங்க மக்களோட தொழில். எங்களுக்குச் சொந்தமா ஏழு ஆடுங்க இருந்துச்சு. அம்மா காலையில ஆடுகளை ஓட்டிக்கிட்டுக் காட்டுக்குள்ள போனா ராத்திரிதான் திரும்பி வரும். ஒருநாள் திடீர்னு பணியம் பார்த்த இடத்துல அப்பா மயங்கி விழுந்துட்டார். கையும் காலும் விளங்காமப் போச்சு. அம்மா, அப்பாவுக்கு வைத்தியத்தையும் பாத்துக்கிட்டு என்னையும் வளர்த்தெடுத்துச்சு.

வழக்கமா எங்க பிள்ளைகள் அப்பா, அம்மாவோட சூளைக்குப் போவாங்க, இல்லேன்னா ஆடு ஓட்டிக்கிட்டுப் போவாங்க. எனக்கு மட்டும் ஸ்கூலுக்குப் போகணும்னு தோணுச்சு. கோபனாரி பள்ளியில 5-ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். ஆறுல இருந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் பீலியூர் போனேன். ‘இதோட போதும். அப்பா, அம்மா கஷ்டப்படுறாங்க, வேலைக்குப் போய் அவங்க கஷ்டத்தைக் குறை'ன்னு உறவுக்காரங்க சொன்னாங்க. நான் வேலைக்குப் போறதால குடும்பத்தோட கஷ்டம் பெரிசா குறையப்போறதில்லை. படிச்சு ஏதாவது அரசுப் பணிக்குப் போனா அப்பாவுக்கு நல்ல மருத்துவம் பண்ணலாம்னு தோணுச்சு.

ஒருநாள் வீட்ல உக்காந்து அழுதுக்கிட்டி ருந்தேன். ஜெயலட்சுமின்னு ஒரு நர்ஸ்... மத்தவங்களுக்கு அவங்க நர்ஸ். எனக்கு என் வாழ்க்கையை மாத்த வந்த தேவதை அவங்க. ‘புள்ள படிக்கிறேன்னு அழுகுது... எல்லாரும் தடுக்கிறீங்களே’ன்னு சொல்லிட்டு என்னைத் தனியா அழைச்சுக்கிட்டு வந்து ‘நான் ஸ்கூல்ல சேர்த்து விடுறேன், படிக்கிறியா’ன்னு கேட்டாங்க. அவங்க கால்ல விழுந்தேன். பீலியூர் ஸ்கூல்ல ‘என் பொண்ணு'ன்னு சொல்லி சேத்துவிட்டாங்க. எனக்குத் தைராய்டு பிரச்னை இருந்துச்சு. அதுக்கும் சிகிச்சை கொடுத்தாங்க. நோட்டு, புத்தகம், டிரஸ்னு எல்லாம் அவங்களே வாங்கிக்கொடுத்தாங்க.

பிளஸ் 2 பாஸ் பண்ணிட்டேன். ஆனா அதுக்குள்ள எங்குடும்பம் பட்ட கஷ்டம்... உறவுக்காரங்கதான் எங்க பசியாத்துனாங்க. காலையில எழுந்து வீட்டுக்கு வெளியே போனா யாராவது ஒருத்தர் ஒரு பாத்திரத்துல சாப்பாடு வச்சிருப்பாங்க. மாமாக்கள், அத்தைகள்னு நிறைய பேர் கூட நின்னாங்க.

பெற்றோருடன்
பெற்றோருடன்

சின்ன வயசுலேயே வழக்கறிஞராகுற கனவு வந்திடுச்சு. அது ஒண்ணுதான் நாங்க நிம்மதியா வாழ உதவும். நர்ஸ் அக்காவே பி.ஏ. எக்கனாமிக்ஸ் சேர்த்துவிட்டாங்க. டிகிரி முடிச்சதும் கவுன்சலிங்ல மதுரை சட்டக்கல்லூரியில இடம் கிடைச்சுச்சு. தங்க, சாப்பிடவே சிரமமாப் போச்சு. இடையில அப்பாவுக்கு சீரியஸாகிடுச்சு. எனக்கும் உடம்பு முடியலே. ஒரு கட்டத்துல இதெல்லாம் நம்ம தகுதிக்கு மேல போலன்னு படிப்பை விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அப்பாவை மருத்துவமனைக்குக் கூட்டிக்கிட்டுப் போயி வைத்தியம் பாத்தேன். ஓரளவுக்கு நடக்க ஆரம்பிச்சார். அதுக்குப்பிறகு விட்டுப்போன சட்டப்படிப்பை நிறைவு செஞ்சு பார் கவுன்சில்ல பதிவு செஞ்சேன். இன்னைக்கு உங்க முன்னாடி நிக்க பல பேர் எனக்கு ஏணியா இருந்திருக்காங்க.

இப்போதைக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்துல வேலை செய்றேன். சீக்கிரமே ஒரு சீனியர் லாயர்கிட்ட ஜூனியரா சேரணும். பெண்கள் வன்கொடுமை சார்ந்தும், பழங்குடிகள் மேல போடப்படுற பொய் வழக்குகள் சார்ந்தும் வேலை செய்யணும்...’’ கனவுகளை விரிக்கிறார் காளியம்மாள்.

காளியம்மாளோடு, இருளர் குடியிருப்பில் இருந்து 18 பிள்ளைகள் படிக்கச் சென்றார்கள். எவரும் உள்ளூரைத் தாண்டவில்லை. பள்ளம், மேடென இடைமறித்த எல்லாத் தடைகளையும் கடந்து நினைத்த இலக்கைப் பிடித்திருக்கிறார் காளியம்மாள். அவரின் கனவுகள் ஈடேறட்டும்!