தொடர்கள்
சினிமா
Published:Updated:

“மணிரத்னத்திடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை!” - கல்கி பேத்தி சீதா ரவி

சீதா ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
சீதா ரவி

படங்கள்: சந்தீப்

பாராட்டுகள், விமர்சனங்கள் சூழ பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறது ‘பொன்னியின் செல்வன்.’ ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி என நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருந்தாலும் ‘பொன்னியின் செல்வன்’ நிஜ ஹீரோ அமரர் கல்கிதான். ‘கல்கியின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டாலும், இதற்கான எழுத்து சார்ந்த பங்கைக் கல்கியின் குடும்பத்துக்கு மணிரத்னம் செலுத்துவதே முறையாக இருக்கும்’ என்று குரல்கள் எழுகின்றன. இந்தச் சூழலில் கல்கியின் பேத்தியும் ‘கல்கி’ இதழின் ஆசிரியராக இருந்தவருமான சீதா ரவியிடம் படம் குறித்த அவரது குடும்பத்தாரின் பார்வை, விமர்சனங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகளை முன்வைத்துப் பேசினேன்.

“மணிரத்னத்திடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை!” - கல்கி பேத்தி சீதா ரவி

“நீங்கள் ‘பொன்னியின் செல்வன்’ பார்த்து விட்டீர்களா? படம் எப்படி இருக்கிறது?”

“படம் வெளியாவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, ஸ்பெஷல் ஷோ பார்க்க சுஹாசினி அலுவலகத்திலிருந்து அழைத்திருந்தார்கள். மணிரத்னம் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் மட்டுமே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஷோ அது. எந்த எதிர்பார்ப்பையும் நாங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை. மணிரத்னம் தலைசிறந்த இயக்குநர். அவரது பார்வையில் ‘பொன்னியின் செல்வன்’ எப்படி வரப்போகிறது என்ற ஆர்வமும் குறுகுறுப்பும் மட்டுமே இருந்தது. அதேநேரம், நஷ்டமடையக்கூடாது என்கிற கவலையும் வந்துபோனது. ஆனால், அத்தனை கவலைகளையும் படம் மறக்கடித்துவிட்டது. அந்த அளவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

அத்தனை பேர் நடித்துள்ளனர். படத்தில், ஒருவர்கூட நடிகராகத் தெரியவில்லை. அந்தப் பாத்திரங்களாகவே தெரிந்தார்கள். ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் என் ஃபேவரிட் கதாபாத்திரங்கள் வந்தியத்தேவனும் பூங்குழலியும்தான். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை கார்த்தி மிக நேர்த்தியாக உள்வாங்கிச் செய்திருக்கிறார். மணிரத்னத்தின் அர்ப்பணிப்பு உணர்வைப் புரிந்துகொள்ள முடிந்தது.”

“மணிரத்னத்திடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை!” - கல்கி பேத்தி சீதா ரவி

‘‘நாவலாக ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்கள், அதேபோல படத்தை மணிரத்னம் எடுக்கவில்லை என்கிறார்களே?”

“நானும் இரண்டு, மூன்று சீன்களை மிஸ் பண்ணுனதா நினைக்கிறேன். குறிப்பா, அரிசலாற்றங்கரையில் வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திக்கும் காட்சி படத்தில் இல்லை. அப்படியிருந்தும் குறை தெரியாமல் படத்தை நிறைவாகவே இயக்கியுள்ளார் மணிரத்னம். சில மாற்றங்கள் செய்தாலும், கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்கள் மாறாமல் இருப்பதும் கதையின் ஜீவன் கெடாமல் இருப்பதும் முக்கியம். அந்த விதத்தில், எங்கள் தாத்தாவின் எழுத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் மணிரத்னம். எல்லாவற்றையும் படமாக எடுக்கமுடியாது. அதனால் சுருக்கியிருக்கலாம். எதிர்பார்ப்போடு போனால் ஏமாற்றம் மிஞ்சும். அதனால், எதிர்பார்ப்பில்லாமல் பாருங்கள். எங்கள் குடும்பத்தினருக்குத் திருப்தியாகவே இருந்தது. என் தங்கை லட்சுமி நடராஜன் மகனும் மருமகளும், இன்னொரு பேத்தியான கெளரியின் கொள்ளுப்பேரன் அபினவ்வும் லண்டனில் படம் பார்த்துவிட்டு ‘பிடித்திருந்தது’ என்றார்கள். பெங்களூரில் இருக்கும் தம்பி மனைவி, பிள்ளைகளுக்கும் பிடித்திருந்தது.”

“மணிரத்னத்திடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை!” - கல்கி பேத்தி சீதா ரவி

‘‘கல்கியின் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டாலும் படக்குழுவினர் உங்கள் குடும்பத்திற்கு நிதி தந்திருக்க வேண்டும் என்று குரல்கள் எழுகின்றனவே?’’

“என் தாத்தா கல்கியின் நூற்றாண்டையொட்டி, 1999-ம் ஆண்டு அவரது எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அப்போதிலிருந்தே, எல்லோரும் பொன்னியின் செல்வனை வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதுபோல, இப்போது படமாக எடுத்திருக்கிறார்கள். அதனால், மணிரத்னம் எங்கள் குடும்பத்தை வந்து சந்திக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அவர் வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை. முன்பு, எம்.ஜி.ஆருக்கு ஐந்து வருடங்கள் மட்டும்தான் என்ற நிபந்தனையுடன் உரிமையைக் கொடுத்திருந்தார் அப்பா. தொழில்நுட்ப வசதியில்லாததால் அப்போது படமாக்க முடியவில்லை. இப்போது தொழில்நுட்பம் உதவியுள்ளது. ரொம்ப அழகாக, அளவாக, தொழில்நுட்பமே படம் என்று ஆகிவிடாமல் பயன்படுத்தியுள்ளார் மணிரத்னம். அதற்கு, அவரை நாங்கள் பாராட்டத்தான் செய்யவேண்டும். பணமெல்லாம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள், கொடுக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. என் தாத்தாவின் எழுத்துகளும் சோழர் பெருமையும் எல்லோரையும் சென்றடையவேண்டும். அந்த நோக்கம் நிறைவேறியதே போதும். லாப நோக்கில் செய்தாலும், அதைவிட மேன்மையான நோக்கு படத்தில் இருப்பதாக நம்புகிறேன்.”

“பொன்னியின் செல்வன் இசை, பாடல்கள் எப்படி?”

“பாடல்களும் இசையும் ஜனரஞ்சகமாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் நிச்சயமாக ஆராய்ச்சியெல்லாம் பண்ணித்தான் செய்திருப்பார். ஆனால், சோழர் காலத்துக்கேற்ப 100 சதவிகிதம் பொருத்தமாக இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. கொஞ்சம் அயல்நாட்டு இசைக் கலப்போடும் இருந்தமாதிரி தோன்றியது.”

‘‘அடுத்ததாக, கல்கியின் எந்த நாவல் படமானால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?”

‘‘ ‘சிவகாமியின் சபதம்.’ இந்த நாவலை எங்கள் தாத்தா திரைக்கதையாகத்தான் எழுதினார். ஆனால், யாரும் படம் பண்ண முன்வரவில்லை. அந்தக் காலத்தில் தொழில்நுட்ப வசதி இல்லாததால் படமாகியிருக்காது என்று நினைக்கிறேன். இப்போது சிறந்த நாட்டியக் கலைஞரை வைத்து எடுக்கலாம். அதற்கு இசையும் நடனமும் ரொம்ப முக்கியம். திரையிசை ஒத்துவராது. வேறுமாதிரியான நடனமும் இசையும் பயன்படுத்த வேண்டும்.”

அப்பா ‘கல்கி’ ராஜேந்திரனுடன்
அப்பா ‘கல்கி’ ராஜேந்திரனுடன்

‘‘ராஜராஜ சோழனை இந்துவாகக் காட்ட முயற்சி நடக்கிறது என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறாரே?”

‘‘நாம் மனிதர்களா, இந்தியர்களா என்று சிந்திப்பதை விட்டுவிட்டு இந்துக்களா, இஸ்லாமியர்களா, கிறிஸ்தவர்களா என்று நம்மை நாமே வட்டத்துக்குள் அடைத்துச் சிறைப்படுத்திக் கொள்கிறோம். அந்தச் சிறைகளிலிருந்து வெளிவரவேண்டும் என்பதற்காகவே பொன்னியின் செல்வன் எழுதப்பட்டதாக நம்புகிறேன். என் தாத்தா எழுத்துகளில் மத ஒற்றுமை, நல்லிணக்கம், மதம் கடந்த ஆன்மிகச் சிந்தனைகளைத்தான் முன்வைத்துள்ளார். பரந்து விரிந்த பார்வை மன்னர்களுக்கு இருந்ததாகச் சித்திரித்தார். அப்படி இருக்கும்போது, ஏன் ஒரு வட்டத்திற்குள் அடைபடவேண்டும்?

தாத்தா பொதுவாழ்வில் இருந்தவர். அவருக்கு நேரம் கிடைப்பதே பெரிது. இரவு உட்கார்ந்தால் விடிய விடிய எழுதி அத்தியாயத்தை முடிப்பார். ஒருமுறை அவரின் மகள் வயிற்றுப் பேத்தி கெளரி அந்த அத்தியாயத்தை விளையாடிக் கிழித்துப் போட்டுவிட்டாள். ‘ராத்திரி முழுக்க எழுதின கதை இப்படியாகிடுச்சே’ என்று அப்பா குழந்தையை அதட்டியுள்ளார். ‘இதுக்குப்போய் குழந்தையைத் திட்டுவாங்களா? கிழிந்ததை ஒட்டிடு’ என்று தாத்தா கூறியுள்ளார். இதுபோன்ற சுவாரஸ்யங்களையெல்லாம் அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். இன்னும் என் அப்பா ‘கல்கி’ ராஜேந்திரன் ‘பொன்னியின் செல்வன்’ பார்க்கவில்லை. வயதாகிவிட்டதால் தியேட்டருக்குச் சென்று அமர்ந்து படம் பார்க்கவும் முடியாது. ஓ.டி.டி-யில் வரும்போது அவரைப் பார்க்க வைப்போம்.’’