Published:Updated:

நீதி கிடைத்தது... கருணை கிடைக்குமா?

க.அலம்பம்
பிரீமியம் ஸ்டோரி
க.அலம்பம்

பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீங்களாச்சும் அரசாங்கத்துகிட்ட சொல்லி சொந்தமா ஒரு குடிசைக்கு ஏற்பாடு செய்ய மாட்டீங்களா

நீதி கிடைத்தது... கருணை கிடைக்குமா?

பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீங்களாச்சும் அரசாங்கத்துகிட்ட சொல்லி சொந்தமா ஒரு குடிசைக்கு ஏற்பாடு செய்ய மாட்டீங்களா

Published:Updated:
க.அலம்பம்
பிரீமியம் ஸ்டோரி
க.அலம்பம்

கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது க.அலம்பம் கிராமம். ஆங்காங்கே ஓட்டு வீடுகளும், காரை வீடுகளும் இருந்தாலும், கடைக்கோடியில் சில குடிசைகள் காணப்படுகின்றன. வறுமைக்கு வாய் முளைத்தது போன்றிருந்த அந்தக் குடிசைகளின் வாசலில் குனிந்துதான் செல்ல முடியும். உள்ளே சில தட்டுமுட்டுப் பாத்திரங்களைத் தவிர சொத்து பத்து வேறெதுவும் இல்லை. நாம் அங்கு சென்றபோது, “பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீங்களாச்சும் அரசாங்கத்துகிட்ட சொல்லி சொந்தமா ஒரு குடிசைக்கு ஏற்பாடு செய்ய மாட்டீங்களா?” என்று கேட்டபடி நம்மைச் சூழ்ந்துகொண்டார்கள் மக்கள். யார் இவர்கள், இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?

அதை அறிந்துகொள்ள 15 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்... 2007-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிலரை முருகேசன் என்பவர் கரும்பு வெட்டுவதற்காக பெரம்பலூர் மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றார். ஆயிரம் கிலோ கரும்பு வெட்ட 190 ரூபாய் கூலி பேசப்பட்டு, குறைந்த முன்பணம் வழங்கி ஆறு பெண்கள் உட்பட 18 பேர் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்குச் சரியான உணவு மற்றும் கூலி கொடுக்காததாலும், அவமரியாதையாக நடத்தியதாலும் ஐந்து பேர் பாதியிலேயே ஊர் திரும்பிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், மீதமுள்ள 13 பேரை கடுமையாகச் சித்ரவதை செய்திருக்கிறார். சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதோடு இரவு, பகல் பாராது கரும்பு வெட்டும்படி கொடுமைப்படுத்தியிருக்கிறார். இதற்கு மறுத்த ஆண்கள் தானியக் குதிரிலும், பெண்கள் மற்றொரு பகுதியிலும் அடைத்துவைக்கப்பட்டனர்.

நீதி கிடைத்தது... கருணை கிடைக்குமா?

தானியக்குதிரில் அடைக்கப்பட்டு, சரியான உணவு தண்ணீர் இல்லாமல் தவித்தவர்களின் மலத்தை அவர்களின் கையால் அள்ள வைத்திருக்கிறார்கள். இதில் கேள்வி கேட்டவர்களை, உறவினர்கள் இருவரைச் சேர்த்துக்கொண்டு இரும்புக்கம்பியால் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கிறார் முருகேசன். கொடுமைகளின் உச்சமாக சத்தியா என்ற கர்ப்பிணி செல்போனைத் திருடியதாகக் கூறி, அவரின் கணவர் முன்னிலையிலேயே நிர்வாணப்படுத்தி வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தத் தகவல் கசிந்து, கள்ளக்குறிச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்குச் செல்லவே... போலீஸார் 13 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து முருகேசன், விஜயகுமார், குமார் ஆகியோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தக் கொடூரங்கள் குறித்து 18.03.2007 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘தானியக்குதிரில் தலித் கூலிகள்... பெரம்பலூர் தீண்டாமை திகில்...’ என்கிற தலைப்பில் வெளியான கட்டுரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சித்ரவதைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கதிர் என்பவரின் உதவியோடு, ஜூ.வி கட்டுரையை மேற்கோள் காட்டி பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 6,250 ரூபாய் நிவாரணமும், கூடுதலாக சத்தியா என்ற பெண்ணுக்கு 25,000 ரூபாயும் அப்போதே வழங்கப்பட்டது.

சத்தியா
சத்தியா

இன்னொரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போலீஸார் பதிவுசெய்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், 15 வருடங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘முருகேசனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 15,000 அபராதம், விஜயகுமார், குமார் இருவருக்கும் தலா ஓராண்டுச் சிறைத் தண்டனை, 5,000 அபராதம் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நாம் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் வசிக்கும் க.அம்பலம் கிராமத்துக்குச் சென்றோம்...

பெரும் சித்ரவதைக்குள்ளான சத்தியாவிடம் பேச்சுக் கொடுத்தோம்... தயங்கியபடியே பேசியவர், “அன்னைக்கு மீட்கப்பட்ட 13 பேர்ல ரெண்டு பேர் இறந்துட்டாங்க. எங்களை மீட்டப்போ, அரசாங்கம் கொஞ்சம் காசு கொடுத்து உதவி செஞ்சதோடு சரி... அதுக்கப்புறம் எங்களை யாரும் கண்டுக்கவே இல்லை. ஒண்ட சொந்தமா ஒரு குடிசைகூட இல்லாம அவஸ்தைப் படுறோம். எங்க கஷ்டமெல்லாம் தெரிஞ்சுருந்தும், அதிகாரிகள் எங்களுக்காக எந்த உதவியும் செய்யலை. கழனிக்காட்டு வேலைக்குப் போனா 60 ரூபாதான் தினக்கூலி கிடைக்குது. இதுல பிள்ளை குட்டிகளை படிக்கவெக்கிறதா... வயித்துக்குச் சாப்பிடுறதான்னு தெரியலை” என்று கலங்கினார்.

பிச்சை பிள்ளை
பிச்சை பிள்ளை

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பிச்சைபிள்ளை, “கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவங்களோட வாழ்க்கை மேம்படுறதுக்கு இலவச வீட்டுமனையோ, நிலமோ அரசு வேலைவாய்ப்போ தரலாம்னு கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தில் சொல்லியிருக்காங்க. நாங்களும் பல முறை கலெக்டர் ஆபீஸுக்கு நடையா நடந்தும் பிரயோஜனம் இல்லை. எங்க பகுதியில நிறைய அரசு புறம்போக்கு நிலம் இருக்குங்க. அதுல நாங்க வசிக்குறதுக்கு வீட்டுமனையைக் கொடுத்து அரசாங்கம் உதவணும்” என்று கைகூப்பினார்!

நீதி கிடைத்தது... கருணை கிடைக்குமா?

இந்த மக்களின் துயரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் கொண்டு சென்றோம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர் “சம்பந்தப்பட்ட நபர்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, தேவையான உதவிகளைச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்கிறேன்” என்றார்.

அரசின் கருணைப் பார்வை இந்த விளிம்புநிலை மக்கள் மீதும் விழுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism