Published:Updated:

அண்டை மாநிலங்களில் இல்லாத தடை... தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? - வலுக்கும் கள் தடை நீக்கக் கோரிக்கை!

கள்ளு
பிரீமியம் ஸ்டோரி
கள்ளு

பனை மரத்திலிருந்து இறக்கக்கூடிய கள்ளுக்கு போதை குறைவு என்பதால், அதில் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்தார்கள்

அண்டை மாநிலங்களில் இல்லாத தடை... தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? - வலுக்கும் கள் தடை நீக்கக் கோரிக்கை!

பனை மரத்திலிருந்து இறக்கக்கூடிய கள்ளுக்கு போதை குறைவு என்பதால், அதில் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்தார்கள்

Published:Updated:
கள்ளு
பிரீமியம் ஸ்டோரி
கள்ளு

`தமிழர்களின் பாரம்பர்ய உணவுப் பட்டியலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிலிருந்தே இடம்வகிக்கும் கள்ளுக்கு, தமிழ்நாட்டிலேயே தடை இருப்பது கொடுமை இல்லையா? உலகில் பனை, தென்னை மரங்கள் இருக்கும் 108 நாடுகளில் விதிக்கப்படாத தடை... அவ்வளவு ஏன், நம் அண்டை மாநிலங்களில்கூட இல்லாத தடை... தமிழ்நாட்டில் மட்டும் இருப்பது எந்த வகையில் நியாயம்?’ என வெடிக்கிறார்கள் தமிழகப் பனைத் தொழிலாளர்கள்!

“சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில், கள் தடையை நீக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்” எனத் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவை ஆளுநர் உரையில் அப்படி எந்த அறிவிப்பும் வெளிவராத சூழ்நிலையில், ஜனவரி 21-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடந்தது. மேலும் இந்தப் போராட்டம் பல்வேறு கட்டங்களாகப் பல மாவட்டங்களில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பனைத் தொழிலாளர்கள், தமிழ்நாடு கள் இயக்கத்தினர் முன்னெடுத்திருக்கும் இந்தப் போராட்டத்துக்கு நா.த.க., ம.நீ.ம., பா.ஜ.க., ச.ம.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் முழு ஆதரவு அளித்திருக்கின்றன!

போராட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``தமிழ்நாடு அரசு, மிக மலிவான தரத்துடன் உருவாக்கப்படும் டாஸ்மாக் மதுவுக்கு மாற்றாகவும், அதன் கோரப்பிடியிலிருந்து தமிழர் உடல், மனநலனை மீட்டெடுக்கும் வகையிலும் கள் சந்தை மீதிருக்கும் தடையை நீக்கி, மீட்டுருவாக்கம் செய்து, பனைசார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். பொய் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டுள்ள பனையேறிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். காலம் கடத்தாமல் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், கள் தடையை நீக்கக் கோரிப் போராடிவரும் ‘தமிழ்நாடு கள் இயக்க’ ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமியிடம் பேசினோம். ``கடந்த பல ஆண்டுகளாகக் கள் மீதான தடையை நீக்கக் கோரி தமிழக முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என அனைவரையும் நேரில் சந்தித்து, கோரிக்கை வைத்தோம். ஆனால், எல்லா முதலமைச்சர்களுமே எங்களை ஏமாற்றிவிட்டார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளின் மந்திரிமார்களுமே மதுபான ஆலைகளை நடத்திவருகிறார்கள். அ.தி.மு.க-வுக்கு மிடாஸ் உள்ளது; தி.மு.க அமைச்சர்கள் சிலருக்கும் பினாமி பெயர்களில் மதுபான ஆலைகள் இருக்கின்றன. 12 ரூபாய் அடக்கவிலை கொண்ட ஒரு பாட்டில் மதுவை, டாஸ்மாக்கில் வைத்து 380 ரூபாய்க்கு விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். கள் மீதான தடை நீக்கப்பட்டால், தங்களின் லாபம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்றும் பயனில்லை. ‘ஏன் கள்ளுக்குத் தடை?’ எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டோம். அதற்கு அரசுத் தரப்பில், ‘பனை மரத்திலிருந்து இறக்கக்கூடிய கள்ளுக்கு போதை குறைவு என்பதால், அதில் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்தார்கள். அதைக் குடித்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு பனைமரமும் ஒரு உற்பத்திசாலை என்பதால், எங்களால் கலப்படத்தைத் தடுக்க முடியவில்லை. டாஸ்மாக்குக்கு வெறும் ஒன்பது நிறுவனங்கள்தான் மதுக்களைத் தயாரித்துக் கொடுப்பதால், எங்களால் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சுலபமாக முடிகிறது. எனவே, 01-01-1987 முதல் கள்ளுக்குத் தடை” என பதிலளித்திருக்கிறார்கள்.

அண்டை மாநிலங்களில் இல்லாத தடை... தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? - வலுக்கும் கள் தடை நீக்கக் கோரிக்கை!

இது முழுக்க அரசின் கையாலாகாத்தனம். ஆந்திரா, தெலங்கானா, கேரளா, பாண்டிச்சேரி என மற்ற மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியும்போது, தமிழ்நாடு அரசால் மட்டும் முடியவில்லையென்றால், இங்கிருக்கும் முதல்வர்களுக்கு ஆளுமை இல்லையா? கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இதுதான் உலகளாவிய நடைமுறை. அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அதன்படி நடக்க வேண்டும். கள் தடையை நீக்க வேண்டும்” எனக் கோரிக்கைவைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``மற்றவர்கள் குற்றம்சாட்டுவதுபோல எந்த தி.மு.க நிர்வாகியும் மதுபான ஆலையைச் சொந்தமாக வைத்திருக்கவில்லை. அப்படியே ஒருவேளை தி.மு.க-வினர் வைத்திருந்தாலும்கூட, முதலமைச்சர் ஸ்டாலின் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார். இந்த அரசாங்கத்துக்கு மக்கள்தான் முக்கியமே தவிர, நான்கு தி.மு.க-வினர் பிழைப்பது அல்ல. ``சாதாரணமாகக் கள்ளுக்கு அனுமதி கொடுத்துவிட முடியாது. 1% மாறுபட்டாலும் கள், மதுத்தன்மைகொண்ட வேறொன்றாக மாறிவிடுகிறது. எனவே, எந்தவிதச் சட்டச் சிக்கலும் வராதபடி, கள் என்பதை போதை தராத பொருள் என்ற பட்டியலில் கொண்டுவர முறைப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் சம்பந்தப்பட்ட துறையிடம் விரிவான அறிக்கை கேட்டிருக்கிறார். விரைவில் விவசாயிகள், பனைத் தொழிலாளர்களை அழைத்துப் பேசி, நிபுணர் குழுக்கள் அமைத்துத் தீர்வு காணப்படும்” என்றார்.

நல்லசாமி
நல்லசாமி
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கடந்த செப்டம்பர் மாதத்தில், பனை மரங்களைப் பாதுகாக்கவும், எண்ணிக்கையைப் பெருக்குவதற்கும் பனை மேம்பாட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்து, ஒரு லட்சம் பனை விதைகளை வேளாண்துறைக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல சமீபத்தில், பதநீர் இறக்குபவர்கள், விற்பவர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக் கூடாது என அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருக்கிறார். அதே அக்கறையோடு, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் கள் இறக்குமதிக்கு, தடை நீக்குவது குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism