மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 46 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

பருத்தி விதை எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
News
பருத்தி விதை எண்ணெய்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

பருத்தி விதை எண்ணெய் (Cotton Seed Oil)

பெரம்பலூர் மாவட்டத்தின் வளங்களுள் ஒன்று பருத்தி. சுமார் 76,000 ஏக்கர் அளவுக்கு, பருத்தி இங்கே பயிரிடப்படுகிறது. பருத்தி என்றால் ஆடைகளுக்கான மூலப்பொருள் என்றே பலரும் கருதிவந்தனர். பல பின்னலாடைத் தயாரிப்பு நிறுவனங்கள்கூட ஆரம்பத்தில் பருத்தியைக் கொள்முதல் செய்து, நூல் தயாரிக்கும் செயல் முறையின்போது விதையை ஒரு கழிவாகக் கருதி, அதைக் குப்பையில் வீசினர். மிக தாமதமாகத்தான் அதையும் மதிப்புக் கூட்டலாம் என்பதை அறிந்தனர். இப்போது பருத்தி அளவுக்கு அதன் விதையும் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.

கனவு - 46 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

பெரம்பலூர் மாவட்டத்தில், பருத்தியிலிருந்து பஞ்சையும் விதையையும் தனியாகப் பிரித்தெடுக்க ஆலைகள் இருக்கின்றன. ‘காட்டன் கின்னிங்’ (Cotton Ginning) முறையில் செயல்படும் இத்தகைய ஆலைகள், பஞ்சை தனியாகப் பிரித்து எடுத்த பிறகு, விதையைச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர். கொஞ்சம் மெனக்கெட்டால் பருத்தி விதையிலிருந்து எண்ணெயைத் தனியாகப் பிரித்தெடுத்து விற்பனை செய்து நல்ல வருமானம் பெற முடியும் என்பதால், அதற்கான தொழிற்சாலையைப் பெரம்பலூர் மாவட்டத்தில் நிறுவ வேண்டும்.

பொதுவாக, சுத்திகரிக்கப்படாத பருத்தி விதை எண்ணெய், நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால் அதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மேற்கத்திய நாடுகளில் சுத்திகரிக்கப்பட்ட பருத்தி விதை எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் சமையல் எண்ணெயாக இதைக் கருதுவதில்லை. அதனால், விளக்கு எரிக்க, மெழுகில் சேர்க்கப் பயன்படுத்துகின்றனர். இதில் வைட்டமின்-இ இருப்பதால், சருமம் சார்ந்த அழகுசாதனப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, வருமானம் பெறலாம்.

கனவு - 46 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி இரண்டு போகமாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 2,30,000 டன் அளவுக்குப் பருத்தி விதை கிடைக்கிறது. இதிலிருந்து தோராயமாக 30 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டால் சுமார் 70,000 டன் பருத்தி விதை கிடைக்கும். ஒரு கிலோ பருத்தி விதை எண்ணெய் எடுக்க 10 கிலோ விதை தேவைப்படுகிறது. இந்தக் கணக்கீட்டின்படி 70,000 டன் பருத்தி விதையிலிருந்து சுமார் 7,000 டன் அளவுக்குப் பருத்தி விதை எண்ணெயை உற்பத்தி செய்ய முடியும். சுத்திகரிக்கப்படாத ஒரு லிட்டர் எண்ணெயை 1,750 ரூபாய் என வைத்து விற்பனை செய்தால், ஆண்டுதோறும் ஏறக்குறைய 1,200 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். மேலும் அருகிலிலுள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து உற்பத்தியாகும் பருத்தி விதைகளிலிருந்து சுமார் 50 சதவிகிதத்தைக் கைப்பற்றினாலே சுமார் 4,400 கோடி ரூபாய் வருமானம் பெறுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இதனால் அந்தப் பகுதியின் பொருளாதாரமும், அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படும்.

பருத்திப் புண்ணாக்கு (Cotton Seed Cake)

கிராமப் பொருளாதாரத்தில் விவசாயிகளுக்கு `கை மேல் பலன்’ என்று குறிப்பிடும் அளவுக்குக் கைகொடுப்பது பால் உற்பத்திதான். ஓரிரு மாடுகள் தொடங்கி, பெரிய பண்ணைவைத்து நடத்தும் அளவுக்குக் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களும் உண்டு. இத்தகையோருக்குப் பால் அதிக அளவில் கிடைப்பதற்குப் பெரும் உதவியாக இருப்பது புண்ணாக்குதான். பருத்தி விதையிலிருந்து எண்ணெயை நீக்கிய பிறகு எஞ்சும் புண்ணாக்கு, கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பருத்திப் புண்ணாக்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் பருத்தி அதிக அளவில் உற்பத்தியாகிறது. இங்கே பருத்தியிலிருந்து விதையையும் பஞ்சையும் பிரித்தெடுத்த பிறகு விதையைப் பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் விற்றுவிடுகிறார்கள். சொற்பமான அளவுக்கே புண்ணாக்குக்குப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் கால்நடைப் பண்ணைகளில் அதிக அளவு பயன்படுத்தப்படுவது சோயாபீன் (Soybean) உணவுகளைத்தான்.

சோயாபீனுக்கு மாற்றாகப் பருத்தி புண்ணாக்கைப் பயன்படுத்தலாம். கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவாகவும், அதிக அளவில் பால் உற்பத்தி கிடைப்பதோடு, விலையும் மிகக்குறைவு என்பதால், விவசாயிகள் மத்தியில் பருத்திப் புண்ணாக்குக்கு கிராக்கி ஏற்படும். அந்தப் புண்ணாக்கைக் கொஞ்சம் பிராண்டாக மாற்றி, விற்பனை செய்தால் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டலாம்.

கனவு - 46 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு இரு போகம் பயிரிடப்படும் பருத்தியிலிருந்து 2,30,000 டன் அளவுக்குப் பருத்தி விதை கிடைக்கிறது. இதிலிருந்து சுமார் 30 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டாலே தோராயமாக 70,000 டன் அளவு கிடைக்கும். இதிலிருந்து எண்ணெயைத் தனியாகப் பிரித்தெடுத்த பிறகு புண்ணாக்கு மட்டுமே சுமார் 35,000 டன் அளவுக்குக் கிடைக்கும். ஒரு கிலோ புண்ணாக்கின் விலை 40 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்குத் தோராயமாக 140 கோடி அளவுக்கு வருமானம் பெற முடியும். அதுமட்டுமின்றி, அருகிலுள்ள பிற மாவட்டங்களிலிருந்தும் 50 சதவிகிதப் பருத்தி விதையைக் கைப்பற்றி, புண்ணாக்கு தயாரித்தால் ஆண்டுக்கு ஏறக்குறைய 360 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தைப் பெறுவதோடு, சுமார் 250 பேருக்கு நேரடியாகவும், அதைச் சார்ந்த பிற தொழில்களின் வழியே 750 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதனால், பெரம்பலூர் மாவட்ட மக்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் மேம்படும்.

கனவு - 46 - பெரம்பலூர் - வளமும் வாய்ப்பும்

ரயில் போக்குவரத்து மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை!

பெரம்பலூர் மாவட்டத்தில் இரு முக்கியமான தேவைகளை ஆய்வின்போது பங்கேற்ற பலரும் சுட்டிக்காட்டினர். ஒன்று, ரயில் போக்குவரத்து. மற்றொன்று, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இவை இரண்டும் மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதால் அது குறித்தும் எழுதுவது அவசியமாகிறது.

சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்லும் வாகனங்கள் தோராயமாக நள்ளிரவு 1 மணியிலிருந்து 3 மணி வரை கடப்பதாகவும், அந்த நேரத்தில்தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுவதாகவும் ஆய்வின்போது என்னோடு உரையாடியவர்கள் குறிப்பிட்டனர். அந்த விபத்துகளில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்க உரிய மருத்துவமனை அங்கே இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். திருச்சிக்குத்தான் செல்லவேண்டிய நிலைமை இருப்பதால், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்லும்போது பாதி வழியிலேயே அவர்கள் இறக்க நேரிடுகிறது. பெரும்பாலும் விபத்தில் சிக்கும்போது இதயம், மூளை, நரம்பு மண்டலங்களில்தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகின்றன என்பதால் அதற்குரிய சிகிச்சை அந்த மாவட்டத்தில் கிடைக்கப்பெறாததால் இந்த நிலைமை என்றும் கூறி வருத்தப்பட்டனர். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை நிறுவ வேண்டியது முக்கியம். இந்த மருத்துவமனையை அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியதாக அமைப்பது அவசியம். இது பொருளாதார முன்னேற்றத்துக்கு நேரடியாக பங்களிக்கவில்லையென்றாலும், அந்தப் பகுதியில் இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு அமையும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைப் போக்கு வரத்து ஒன்றையே மக்கள் அதிகம் நம்பியிருக் கின்றனர். சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுவதால், அவற்றை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கும் பிற தேவைகளுக்கும் அவர்கள் ரயில் போக்குவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்கு ஆத்தூரிலிருந்து அரியலூர் வரையாகவோ, இடையில் பெரம்பலூரில் நின்று செல்லும் வகையிலோ அல்லது சேலம் ஆத்தூரிலிருந்து நாமக்கல் வரையோ ஓர் இணைப்பு ரயில்பாதையை ஏற்படுத்தித் தந்தால், அந்தப் பகுதி மக்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் மேம்படும்!

(இன்னும் காண்போம்)