மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 55 - தேனி - வளமும் வாய்ப்பும்

வாழை
பிரீமியம் ஸ்டோரி
News
வாழை

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 55 - தேனி - வளமும் வாய்ப்பும்

வாழைநார் பேப்பர்!

இலையாக, காயாக, கனியாக, தண்டாக, நாறாக என வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்தரக்கூடியவை. வாழையிலிருந்து பல்வேறு புராடக்டுகளை உருவாக்க முடியும். அந்தப் பட்டியலில் பேப்பர், புடவை உள்ளிட்டவற்றையும் இணைத்துக்கொள்ளலாம்!

1912-ம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த சில் சார்லஸ் என்பவர்தான் வாழைநாரிலிருந்து பேப்பர் தயாரிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இயற்கையாகவே வாழைநார் எளிதில் கிழியாத உறுதித்தன்மைகொண்டது என்பதால், பேப்பர் தயாரிப்புக்கு ஏற்றது. வாழைத்தண்டை உரித்து, சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அவற்றைக் கூழாக (Pulp) மாறும் வரை வேகவைக்க வேண்டும். பின்னர் அந்தக் கூழ்க் கரைசலை நைலான் பேப்பரால் மூடப்பட்ட கொள்கலனில் ஊற்றிக் காயவைத்து, வாழைநார் பேப்பரைத் (Banana Fibre paper) தயாரிக்கலாம்.

கனவு - 55 - தேனி - வளமும் வாய்ப்பும்

தேனி மாவட்டத்தில் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுதோறும் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1,20,00,000 டன் அளவுக்கு வாழைநார் ஆண்டுதோறும் கிடைக்கிறது. இதைக்கொண்டு பேப்பர் தயாரிக்கலாம். இந்த பேப்பரிலிருந்து நோட் புக், அலங்கார விளக்குகள் போன்ற பலவற்றைத் தயாரித்து ஆண்டுதோறும் கோடிகளில் வருமானம் பெறலாம். பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்கி தேனியை, பொருளாதார வளம்மிக்க மாவட்டமாக மாற்றியமைக்கலாம்!

கனவு - 55 - தேனி - வளமும் வாய்ப்பும்

வாழைநார் பட்டுப்புடவை!

வாழையைக்கொண்டு சானிடரி பேட்ஸ் (Sanitary Pads), ஃபைபர் ஃபேப்ரிக் (Fibre Fabric), ஃபைபர் சில்க் (Fibre Silk), பிரெட் (Bread), பவுடர் (Powder), மஃபின்ஸ் (Muffins), பீர் (Beer), குளிர்பானம் (Juice), ஜாம் (Jam), யோகர்ட் (Yogurt), சிப்ஸ் (Chips) உள்ளிட்டவற்றைத் தயாரிக்க முடியும். என்றாலும், இவற்றில் அதிக அளவில் வருமானம் ஈட்டும் புராடக்டாக மாறியிருக்கிறது வாழைநார்ப் பட்டு (Banana Fibre Silk). இது நிலையானது (Sustainable), நீடித்து உழைக்கக்கூடியது (Durable). அதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் (Eco Friendly) இருப்பதால், இந்த வகைப் பட்டை உடுத்த பெண்கள் பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்த மார்க்கெட்டைக் கைப்பற்றி, பலவகை நிறங்களில், டிசைன்களில் வாழைநார் பட்டு ஆடைகளைத் தயாரிக்க வேண்டும். அவற்றைத் திருமணம், விழாக்காலங்களில் அணியும் ஆடைகள் எனத் தரம் பிரிக்க வேண்டும்.

வாழைநாரைப் பயன்படுத்தி பல்வேறு வகைகளில் புடவைகள், பட்டுகள் விற்பனை செய்யும் பணியில் `ஆனந்தம்’ என்கிற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் கிளைகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் தரம், டிசைன், வகைக்கு ஏற்றவாறு 2,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறது. எனவே, வாழைநார் பட்டுக்கு நல்ல விலை இருப்பதால், தேனி மாவட்டத்தில் வாழைநார் பட்டுக்கென தனித் தொழிற்சாலை ஒன்றை நிறுவ வேண்டும். அங்கே தயாரிக்கப்படும் புடவைகள், பட்டுகள் மற்றும் அவை சார்ந்த பல்வேறு தயாரிப்புகளுக்கென தனி பிராண்ட் ஒன்றை உருவாக்கி, அவற்றைச் சரியான வகையில் விளம்பரம் செய்து, பிரபலப்படுத்த வேண்டும். வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் அவசியம்.

தேனி மாவட்டத்தில் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 800 கன்றுகள் வீதம் ஆண்டொன்றுக்கு 0.8 டன் அளவுக்கு வாழைநார் கிடைக்கிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் கிடைக்கும் வாழைநாரின் மொத்த விளைச்சலான 12,000 டன்னிலிருந்து சுமார் 50 சதவிகிதம் அளவுக்கு மட்டும் எடுத்துக்கொண்டால் 6,000 டன் கிடைக்கும். ஒரு வாழைநார் பட்டுப்புடவை தயாரிக்க அரை கிலோ நார் தேவைப்படுவதாகக் கொண்டால், ஆண்டொன்றுக்கு சுமார் 1,20,00,000 வாழைநார் பட்டுப்புடவைகளைத் தயாரிக்கலாம். ஒரு பட்டுப்புடவையின் விலை 5,000 ரூபாய் என நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டுக்குத் தோராயமாக 6,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம். மேலும், ஏறக்குறைய 1,000 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதனால் தேனி மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயர்ந்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்.

கனவு - 55 - தேனி - வளமும் வாய்ப்பும்

பனானா இன்ஸ்டன்ட் ஸ்மூத்தி மிக்ஸ்!

உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் தங்களின் கட்டுடலைப் பராமரிப்பதற்கு புரோட்டீன் பவுடரைத் தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்வதுண்டு. பலவிதமான உணவுப்பொருள்களிலிருந்து புரோட்டீன் பவுடர்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்தவகையில் வாழைப்பழத்திலிருந்தும் புரோட்டீன் பவுடர் தயாரிக்கிறார்கள். அதற்கும் மார்க்கெட்டில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் இந்த மார்க்கெட் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்பதால், அதை விரைந்து கைப்பற்ற வேண்டும். அதற்கான ஒரு தொழிற்சாலையை தேனி மாவட்டத்தில் நிறுவுவது அவசியம். வாழைப்பழ புரோட்டீன் பவுடருடன் கொஞ்சம் ஏலக்காய் பவுடரையும் (வாசனைக்காக) சேர்க்கலாம். மேலும் நாட்டுச்சர்க்கரை அல்லது பனை வெல்லம், பாதாம், முந்திரி போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் 
கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் ஆண்டொன்றுக்கு 6 லட்சம் டன் வாழைப்பழம் விளைச்சல் கிடைக்கிறது. அதேபோல சுமார் 3,700 ஏக்கர் அளவுக்கு ஏலக்காய் பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு 100 கிலோ வீதம் ஆண்டொன்றுக்கு 370 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. புரோட்டீன் பவுடர் தயாரிக்க வாழைப்பழ விளைச்சலிருந்து 2 சதவிகிதத்தையும் ஏலக்காயிலிருந்து 1 சதவிகிதத்தையும் எடுத்துக்கொண்டால், ஏறக்குறைய 1,200 டன் அளவுக்கு வாழைப்பழ இன்ஸ்டன்ட் ஸ்மூத்தி மிக்ஸ் தயாரிக்க முடியும். இதிலிருந்து ஆண்டுக்கு, 150 கிராம் அளவுகொண்ட சுமார் 8 கோடி பாக்கெட்டுகள் தயாரிக்க முடியும். ஒரு பாக்கெட்டின் விலை 125 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தால், ஆண்டொன்றுக்கு 1,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெறும்.

(இன்னும் காண்போம்)