சமூகம்
Published:Updated:

அடுத்த தாதா யார்? - ஸ்ரீதர் ஆதரவாளர்களுக்குள் நடக்கும் ‘கேங் வார்’

ஸ்ரீதர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீதர்

கதிகலங்கும் காஞ்சிபுரம்

ரெளடி ஸ்ரீதரின் ஆதரவாளர்களுக்கிடையே நடக்கும் மோதலால் பதறிக்கிடக்கிறது காஞ்சிபுரம். குற்றவழக்குகளில் இல்லாதவர்களும் கொல்லப்படும் நிலையில், ரெளடிகளிடம் காஞ்சிபுரம் போலீஸார் காட்டும் மென்மையான போக்கு, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினேஷ், தணிகா, தியாகு
தினேஷ், தணிகா, தியாகு

காஞ்சிபுரத்தில் கோலோச்சிவந்த ரெளடி ஸ்ரீதர், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக 2017-ம் ஆண்டு கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். `இனிமேல் நிம்மதியாக வாழலாம்’ என வியாபாரிகளும் தொழிலதிபர்களும் பெருமூச்சு விட்டனர். ஆனால், ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் தினேஷ், தணிகா ஆகியோர் இரு அணிகளாகப் பிரிந்து நடத்தும் ‘கேங் வார்’, காஞ்சிபுரத்தையே நிலைகுலையவைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தினேஷின் ஆதரவாளரான சதீஷ்குமார், செய்யாறு பகுதியில் பேருந்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். சதீஷ்குமார்மீது, தணிகா ஆதரவாளரான வழக்கறிஞர் சிவக்குமாரை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்ளது.

சிவக்குமாரை கொலைசெய்ய முயன்றதற்கு பழிதீர்க்கவே, தணிகா ஆதரவாளர்கள் சதீஷ்குமாரை போட்டுத்தள்ளினர். இதையடுத்து காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்திவந்த தணிகாவின் ஆதரவாளர்களும், ஸ்ரீதரின் உறவினர்களுமான கருணாகரன், விக்னேஷ் ஆகியோரை தினேஷ் கேங் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கருணாகரன் உயிரிழந்தார். விக்னேஷ் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார். இவர்கள் இருவர்மீதும் எந்த வழக்கும் இல்லை. இப்படி பழிவாங்கும் படலம் தொடரும் நிலையில் இருதரப்பிலும் கத்தியைக் கூர்தீட்டிக் கொண்டிருக்க, மக்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.

சடலமாக சதீஷ்குமார்
சடலமாக சதீஷ்குமார்

இவர்களுக்குள்ளான பகை பற்றி, காஞ்சிபுரம் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“ஸ்ரீதரின் டிரைவராக இருந்தவர் தினேஷ். ஸ்ரீதர் கை காட்டிய அனைவரையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்தவர். சுருங்கச் சொன்னால், `தளபதி’ திரைப்பட பாணியிலான நட்பு இருவருக்கும். ஸ்ரீதர் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு அடுத்தது தினேஷ்தான் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், ஸ்ரீதருக்குத் தெரியாமல் ரகசியமாக உள்ளடி வேலைகளையும் செய்துவந்தார் தினேஷ். இதை அறிந்துகொண்ட ஸ்ரீதர், தினேஷை ஓரங்கட்டிவிட்டு அந்த இடத்துக்கு தணிகை அரசு என்கிற தணிகாவை கொண்டுவந்தார். அப்போது தொடங்கியது இந்தப் பகை.

ஸ்ரீதர் கொடுத்த இடத்தை, கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார் தணிகா. ஸ்ரீதரை முகநூலில் கேலிசெய்த தினேஷின் நண்பர் சந்திரசேகரின் கதையை முடித்தார். தன் எல்லைக்குள் குறுக்கிட்ட தினேஷ் கூட்டாளியான ‘ஒயிட்’ கார்த்திக் என்பவரைக் கொடூரமாக கொலைசெய்து பாலாற்றில் வீசினார். இப்படி, தணிகாவின் கிராஃப் ஏறத் தொடங்கியது.

கண்ணன்
கண்ணன்

இதனால் தினேஷ், தணிகா இருவருக்கும் இடையிலான குரோதம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. நாட்டு வெடிகுண்டு, வீச்சரிவாள், கள்ளத்துப்பாக்கி சகிதமாக இருதரப்பும் அவ்வப்போது பொது இடங்களில் மோதிக் கொண்டனர். கைது, ஜாமீன் என காவல் துறையினருக்கும் ரெளடிகளுக்குமான கண்ணாமூச்சி விளையாட்டு தொடர்ந்தது. இந்தச் சூழலில் ஸ்ரீதர் வெளிநாடுகளில் பதுங்கி இருந்தபோது, போலீஸிடம் அப்ரூவரானார் தினேஷ். ஸ்ரீதர் குறித்து தனக்குத் தெரிந்த அத்தனை ரகசியங்களையும் போலீஸிடம் சொன்னதால், சிறையில் புதுமாப்பிள்ளைபோல் கவனிக்கப் பட்டார் தினேஷ். ஸ்ரீதரைவிட கொடூரமான தொழில்முறைக் கொலைகாரன் தினேஷ். ஜெயிலில் இருந்தே கொலைகள் செய்வதில் கில்லாடி.

ஸ்ரீதர் இறந்த பிறகு தினேஷ், தணிகா, தியாகு, வசூல்ராஜா, பூனை முருகன் என, குட்டி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும், தங்களின் எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள நினைத்தனர். தினேஷ், தணிகா, தியாகு ஆகிய மூவரிடமும் கள்ளத்துப்பாக்கி இருக்கிறது. வியாபாரிகளிடம் இன்டெர்நெட் காலில் பேசி மிரட்டுகிறார்கள். தினேஷ் தரப்பினருக்கு திருட்டு மணலிலும், தியாகுவுக்கு பட்டு ஜவுளி வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதிலும் பணம் வருகிறது. தணிகா ஆட்களுக்கு வழிப்பறிக் கொள்ளை, கஞ்சா போன்ற சட்ட விரோதத் தொழில்கள் மூலம் வருமானம் வருகிறது. இருதரப்பினரும் போலீஸாரை ஏகபோகமாக கவனிக்கின்றனர். அதனால், போலீஸ் அவர்களை கண்டுகொள்வதில்லை. ரெளடிகளின் கொட்டத்தை அடக்க, முதலில் போலீஸில் உள்ள கறுப்பு ஆடுகளைக் களையெடுக்க வேண்டும்.

2016-ம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, காஞ்சிபுரம் பெருநகராட்சி 12-வது வார்டுக்கு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட தினேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். எதிரணியில் ஸ்ரீதரின் உறவினர் வெங்கடேஷ் என்பர் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தலின்போது மோதல் வெடிக்கலாம் எனப் பதறிய நிலையில், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால் பகை முற்றியிருக்கிறது. ஸ்ரீதரின் முக்கிய சொத்துகளின் விவரம் தினேஷுக்கும் தணிகாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அதைக் கைப்பற்ற இருவரும் துடிக்கின்றனர். இருவரில் யார் முந்துகிறார்களோ அவர்தான் காஞ்சியின் அடுத்த தாதா” என்று விரிவரித்தனர்.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

இதுகுறித்து விளக்கம் கேட்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணனை தொலைபேசியில் பலமுறை தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினோம். பதில் இல்லை. sp.kpm@tncctns.gov.in என்ற மெயில் ஐடிக்கும் தகவலை அனுப்பிவிட்டு, மீண்டும் போன் செய்தோம். நாம் தகவலைச் சொல்லும் போதே இணைப்பைத் துண்டித்துவிட்டார்.