சினிமா
Published:Updated:

அன்பின் கலைஞன் அப்பு!

புனித் ராஜ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
புனித் ராஜ்குமார்

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் என்னுடன் பேசுவதைத் தவிர்த்ததில்லை. அவர் மறைவுக்கு முந்தின நாள் இரவுவரை பேசிக்கொண்டே இருந்தார்

புனித் ராஜ்குமார்... கன்னட வெள்ளித்திரையில் ஆறு மாதக் குழந்தை நட்சத்திரமாக உதித்தவர், 46 வயதில் கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரமாய் ஜொலித்து விண்ணோடு கலந்துவிட்டார். உடற்பயிற்சி ஆர்வலரான புனித், மாரடைப்பால் மரணித்ததைத்தான் இந்தக் கட்டுரையைத் தட்டச்சும்போதுகூட ஜீரணிக்க முடியவில்லை. கர்நாடகாவின் மிகப்பெரும் ஆளுமையாக உருவாகி வந்த அவரின் திடீர் மறைவு கர்நாடக மக்களுக்குப் பேரிழப்புதான்.

தந்தை ராஜ்குமார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்பதால் எளிதாகவே சினிமாவின் கதவுகள் புனித்துக்குத் திறந்தன என்றாலும், ரத்தமும் வியர்வையும் சிந்திதான் தந்தையின் பெயரைக் கடைசிவரை காப்பாற்றியிருக்கிறார். கைக்குழந்தையாய் அவர் தந்தையோடு நடித்த முதல் படம் ‘பிரேமத காணிக்கே'வில் வில்லன் இவரைத் தூக்கி வீச, மெத்தையில் பொத்தென விழுந்து அழுதிருப்பார் புனித். சொல்லப்போனால் முதல் ஸ்டண்ட் காட்சி அதுதான் எனலாம்.

தனித்த அடையாளத்தைக் குழந்தை நட்சத்திரமாய் அடைந்தவர் புனித். 14 வயதிற்குள் 14 படங்களில் நடித்துவிட்டார். ‘பெட்டத ஹூவு' படத்துக்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருதும் பெற்றார். 1989-ல் தந்தையோடு நடித்த ‘பரசுராம்'தான் குழந்தை நட்சத்திரமாகக் கடைசிப் படம். அதன்பிறகு 2002-ல் பூரி ஜெகன்நாத்தின் ‘அப்பு' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ‘அப்பு' படம் அதிரிபுதிரி ஹிட்டாகி, பட்டிதொட்டியெங்கும் ‘அப்பு' என்ற செல்லப்பெயரைப் புனித்துக்கு வாங்கிக்கொடுத்தது. அதன்பிறகு இவர் நடித்ததெல்லாம் ஹிட்தான். ‘அபி', ‘வீர கன்னடிகா', ‘மௌரியா', ‘அரசு', ‘மிலானா', ‘ஜாக்கி', ‘ஹுடுகாரு', ‘ரணவிக்ரமா', ‘யாரே ஹூகதல்லி', ‘ராஜகுமாரா', ‘அண்ணா பாண்ட்', ‘மைத்ரி', ‘நடசார்வபௌமா', ‘யுவரத்னா' போன்ற கர்நாடகாவின் தியேட்டர் கொண்டாட்டப் படங்களின் ராஜாவானார். ‘ராஜகுமாரா', கன்னட சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என சாதனை படைத்தது. யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ தான் அந்த சாதனையை அண்மையில் முறியடித்தது.

டான்ஸ் மூவ்மென்ட்களில் வடக்கே ஹ்ரித்திக் ரோஷன், தெற்கே அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆருக்கு செம டஃப் கொடுக்கும் அளவுக்கு பின்னிப் பெடலெடுக்கும் சாண்டல்வுட்டின் பவர் ஸ்டார் இவர்தான்!

கர்நாடகா மக்களுக்கு இவரைப் பிடிக்க முக்கியமான காரணம், தந்தை ராஜ்குமாரைப் போலவே தோற்றத்திலும் நடிப்பிலும், பாடும் திறமையுடனும் இருப்பது மட்டுமல்லாமல் அவரைப்போலவே ரசிகர்கள்மீது அன்பு காட்டியதும்தான். அடிக்கடி ‘ஃபேன்ஸ் மீட்' ஏற்பாடு செய்து அவர்களோடு அளவளாவி மகிழ்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். பெங்களூரு சதாசிவநகர் வீட்டின் முன் நிற்கும் ரசிகர்களை வீட்டுக்குள் அழைத்து உபசரித்து அனுப்புவார். சிலர் பண உதவிகள்கூட அப்படிப் பெற்றுச் செல்வதுண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஒரு வெறித்தனமான ரசிகர், ‘அப்புவின் வீட்டைச் சுற்றிப் பார்க்கணும்' என்று வந்து நிற்க, கைபிடித்து அழைத்துச் சென்று வீட்டைச் சுற்றிக்காட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.

இப்படி மாஸ் மகாராஜாவாய் தந்தையின் செல்வாக்கை இந்தக் கடைக்குட்டி காப்பாற்றியதோடு தன் தாயின் மறைவுக்குப் பின் அவரின் கனவையும் காப்பாற்றியது. ஆம். கன்னட சினிமாவின் நம்பர் 1 தயாரிப்பாளராய் கோலோச்சிய பெண்மணி அவர். இப்போது தயாரிப்பாளராகவும் பல இளம் படைப்பாளிகளையும் நடிகர்களையும் கன்னட சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வந்தார் புனித்.

தன் போட்டியாளர்களான சுதீப், தர்ஷன், யாஷ் போன்றோரை மனதாரப் பாராட்டும் நெருங்கிய நண்பனாக இருந்தவர். தமிழ் சினிமாமீது அளவுகடந்த மரியாதை கொண்டவர். அதிலும், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் மூவரையும் ரொம்பவே பிடிக்கும் எனப் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

‘‘சினிமாமீது பெருங்காதல் கொண்டவர் அப்பு. ‘லூசியா' படத்தைப் பார்த்து என்னை வீட்டுக்கு அழைத்திருந்தார். விருந்து என்றதும் அவர் வீட்டுக்குப் போகும்வரை எனக்கு நிறைய தயக்கம் இருந்தது. ஆனால், அவர் என்னை எவ்வளவு தூரம் மதிக்கிறார் என்பதை அங்குபோனபோது உணர்ந்தேன். ‘ஆக்‌ஷன் மசாலா இல்லாம உங்க ஸ்டைல்லயே நாம படம் பண்ணலாம். கதை ரெடி பண்ணுங்க!' என்று சொன்னார். கதையே கேட்காமல் என்னை ஒப்பந்தம் செய்தார். என்மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்.

அன்பின் கலைஞன் அப்பு!

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் என்னுடன் பேசுவதைத் தவிர்த்ததில்லை. அவர் மறைவுக்கு முந்தின நாள் இரவுவரை பேசிக்கொண்டே இருந்தார். ‘அடுத்தமாதம் ஷூட்டிங் போகலாம். வரும் திங்கள்கிழமை காஸ்ட்யூம் டிசைனிங்கிற்காக உங்களை நேரில் சந்திக்கிறேன்' எனச் சொன்னேன். வெள்ளிக்கிழமையே விடைபெற்று விட்டார். கடைசியாய்ப் பார்த்த அவருடைய சிரித்த முகம் அப்படியே மனதுக்குள் இருக்கட்டும். நிறைய கனவுகளோடு வாழ்ந்த மனிதர் அவர். அவரின் அண்ணன் சிவராஜ்குமாரை அவரே இயக்க வேண்டும் என ஒரு அழகான ஆக்‌ஷன் கதையை என்னிடம் சொன்னார். அவர் கதை சொல்லும் நேர்த்தி அசரவைத்தது.

கன்னட சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போகும் கனவு அவருக்கு இருந்தது. ‘கே.ஜி.எஃப்-க்குப் பிறகு நம்மளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நாம ஹாலிவுட் தரத்துல படத்தைக் கொண்டு வரணும். ‘கவாலுதாரி' ஹேமந்த் போல நிறைய டைரக்டர்களை உருவாக்கணும்' எனச் சொன்னார்’’ சொல்லும்போதே குரல் உடைந்து பேசுகிறார் இயக்குநர் பவண்குமார். இவருடைய இயக்கத்தில் ‘த்வித்வா' என்ற படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாராகிக்கொண்டிருந்தார் புனித்.

தந்தையின் குணாதிசயங்களோடு பிறந்த புனித் அவரைப்போலவே தன் கண்களையும் தானம் செய்து நெகிழவைத்திருக்கிறார். ஞாயிறன்று புனித்தின் இறுதி ஊர்வலத்தில், ‘அப்பு... எழுந்து வாருங்கள்!' என்று மக்கள்கூட்டம் கத்தியபோது, அவர் எழுந்துவரமாட்டாரா என்று தோன்றியது.

உங்கள் கண்களாய் இருந்த சினிமாவழி தினமும் வாருங்கள் அப்பு!