Published:Updated:

`2 நாள்களாகத் தொடர்பில் இல்லை!' - கோவா கடலில் தத்தளிக்கும் 32 குமரி மீனவர்கள்

``இரண்டு விசைப்படகுகளில் சுமார் 32 மீனவர்கள் புயலுக்குப் பயந்து கோவா கடற்கரையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். கடந்த இரண்டு நாள்களாக இரண்டு விசைப்படகுகளும் தொடர்பில் இல்லை''

விசைப்படகு
விசைப்படகு

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்தும் கேரள மாநிலம் கொச்சி, முனம்பம் ஆகிய மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். புயல் எச்சரிக்கை காரணமாக கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்க, அருகிலுள்ள துறைமுகங்களில் கரைசேருமாறு அரசு அறிவுறுத்தியது.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில்
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில்

அதன்பேரில், கோவா மாநிலத்தில் தம்மாம் தீவிலும் குஜராத் மாநிலத்தில் வேராவேல் துறைமுகத்திலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவிகாட், மும்பை, ரத்தனகிரி முதலிய மீன்பிடித் துறைமுகங்களிலும் கர்நாடக மாநிலத்தில் கார்வார், மால்பி துறைமுகங்களிலும் கேரளாவில் கொச்சின், முனம்பம் ஆகிய துறைமுகங்களிலும் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் கரை சேர்ந்துள்ளன. மேலும், பல படகுகளில் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``கோவா மாநில ஆழ்கடல் பகுதியில் 40-க்கும் அதிகமான விசைப்படகுகள் சூறைக்காற்று காரணமாக படகை கரையை நோக்கி செலுத்த இயலாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. குறிப்பாக `எல்ஷடாய்- IND/TN 15/MM-4424 மற்றும் ஸ்டார் ஆப் தி சி IND/TN 15/MM- 5557 என்ற இரண்டு விசைப்படகுகளில் சுமார் 32 மீனவர்கள் புயலுக்குப் பயந்து கோவா கடற்கரையை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர். கடந்த இரண்டு நாள்களாக இரண்டு விசைப்படகுகளும் தொடர்பில் இல்லை என்று கரை சேர்ந்த பிற மீனவர்கள் கூறியுள்ளனர்.

விசைப்படகு
விசைப்படகு

காற்று வீசுகின்ற பகுதியில் இந்த இரண்டு விசைப்படகுகளும் தத்தளிப்பதாக கூறுகிறார்கள். எனவே, புயல் காற்று காரணமாக படகை செலுத்த இயலாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை கடலோர காவல் படையின் மூலம் பாதுகாப்பாக கரை சேர்க்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும், மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமத்தினருக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

மீனவர்களை விரைந்து காப்பாற்றுமாறு அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.