Published:Updated:

`சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லத் தயாராகும் படகுகள்!’ - 8 மாதங்களுக்கு பின் களைகட்டும் குமரி

கன்னியாகுமரியில் படகு சோதனை ஓட்டம்
கன்னியாகுமரியில் படகு சோதனை ஓட்டம்

`கன்னியாகுமரியில் கடந்த மார்ச் மாதம், 17-ம்தேதி முதல் படகுசேவை நிறுத்தப்பட்டது. தற்போது அரசு அறிவித்திருக்கும் தளர்வுகளின்படி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல படகுகளை இயக்கி சோதனை ஒட்டம் நடத்திவருகிறோம்’ என்கிறார் பூம்புகார் கப்பல் கழக அதிகாரி.

சர்வதேசச் சுற்றுலா தலமாக விளங்குவது கன்னியாகுமரி. சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை இங்கு காண்பது சிறப்பான அனுபவமாக இருக்கும். கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அகியவற்றைப் படகில் சென்று பார்வையிடலாம். முக்கடல் சங்கமம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில், கன்னியாகுமரி அருகேயுள்ள வட்டக்கோட்டை எனச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பல இடங்கள் இருக்கின்றன. இதனால் இங்கு உலக நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் கன்னியாகுமரியில் சுற்றுலாதலத்துக்குப் பயணிகள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவருவதால், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் திருவிழா, சுபகாரியங்கள், அரசியல் கூட்டம் போன்ற இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அதேசமயம் சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டுவருகின்றன. லாக்டெளன் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சர்வதேசச் சுற்றுலா தலமான கன்னியாகுமரி வெறிச்சோடியது. சுற்றுலா தொழிலை நம்பியிருந்த பலர் மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் படகு சேவை தொடங்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `கன்னியாகுமரியில் படகு சேவை உடனடியாக தொடங்கப்படும்’ என்று அறிவித்தார். இன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை தொடங்குவதற்கான சோதனை ஒட்டம் தொடங்கியது.

படகுகள்
படகுகள்

இது குறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் படகு சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல படகு தயார்நிலையில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம், 17-ம்தேதி முதல் படகு சேவை நிறுத்தப்பட்டது. தற்போது அரசு அறிவித்திருக்கும் நிலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லத் தயாராகி வரும் பொருட்டு படகுகளை இயக்கி சோதனை ஒட்டம் நடத்திவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு