Published:Updated:

தம்பி டீ இன்னும் வரல! - விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார்... திருவள்ளுவர் சிலைக்கு கடல் பாலம்...

காத்திருக்கும் கன்னியாகுமரி மக்கள்!

பிரீமியம் ஸ்டோரி

சர்வதேசச் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக் கடலின் சற்றுத் தொலைவில், வெவ்வேறு தனித்தனிப் பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை அமைந்துள்ளன. இவற்றில் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் கடல் பகுதிச் சற்று ஆழமானது. திருவள்ளுவர் சிலையைச் சுற்றியுள்ள பகுதியில் சில பாறைகள் இருக்கின்றன. கடல் சற்று சீற்றமாக இருந்தாலே விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குப் படகு சேவை நிறுத்தப்படும். அப்படியும் சில சமயங்களில் விவேகானந்தர் மண்டபத்துக்குப் படகு சென்றாலும், கடல் கொந்தளிப்பைக் காரணம் காட்டி திருவள்ளுவர் சிலைக்குப் படகு செல்லாது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைவது தொடர்கதையாகிறது. இதற்கெல்லாம் தீர்வுகாணும் விதமாகத்தான், ‘கரைப் பகுதியிலிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் செல்ல ரோப் கார் அமைக்க வேண்டும். விவேகானந்தர் நினைவு மண்டபத்திலிருந்து திருவள்ளுவர் சிலைக்குக் கடல் பாலம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருக்கிறது.

கடந்த 22.09.2018 அன்று நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, ‘‘விவேகானந்தர் பாறைக்குச் செல்ல ரோப் கார் வசதி செய்து தரப்படும். விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல கடல் பாலம் அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார். முதல்வர் அறிவித்த ஒரு வாரத்துக்குப் பிறகு அதிகாரிகளுடன் கன்னியாகுமரி சென்ற தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், அங்கு பாலம் அமையும் இடம் மற்றும் ரோப் கார் அமைக்கும் இடங்களைப் பார்வையிட்டார். பணிகள் விரைவில் தொடங்கும் என மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் ரோப் கார் திட்டம் மற்றும் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இணைப்பு பாலத்துக்காகச் சிறு துரும்புகூட நகர்த்தப்படவில்லை.

தம்பி டீ இன்னும் வரல! - விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார்... திருவள்ளுவர் சிலைக்கு கடல் பாலம்...

இந்தநிலையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி நாகர்கோவிலில் நடந்த கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொங்கு பாலம் ஒன்று விரைவில் அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பில் என்னவொரு ‘சிறப்பு’ என்றால்... இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘இணைப்புப் பாலம்’ என்றவர், அதை ‘தொங்கு பாலம்’ என மாற்றி அறிவித்திருக்கிறார்... அவ்வளவுதான். திட்டமும் தொங்கோ தொங்கென்று தொங்குகிறது!

இந்த திட்டம் குறித்து சட்டசபையில் குரல் கொடுத்த கன்னியாகுமரி தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் நம்மிடம், ‘‘திருவள்ளுவர் சிலைக்கும் சேர்த்துத்தான் படகுப் போக்குவரத்துக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறாங்க. ஆனா, விவேகானந்தர் நினைவு மண்டபத்துலருந்து திருவள்ளுவர் சிலைக்குப் பல நேரங்கள்ல பயணிகளை அழைச்சுட்டுப் போறதில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்தோட படகை நிறுத்திடுறாங்க. இதனால, திருவள்ளுவர் சிலைக்குப் போறவங்க எண்ணிக்கை ரொம்ப குறைவாத்தான் இருக்கு. இணைப்புப் பாலம் போட்டாங்கன்னா விவேகானந்தர் பாறையிலிருந்து நடந்தே போய் திருவள்ளுவர் சிலையைப் பார்த்துட்டு வந்துடுவாங்க. அதுபோல, ரோப் கார் அமைச்சாங்கன்னா படகுல போறதைவிட வித்தியாசமான அனுபவமா இருக்கும். ஏற்கெனவே இணைப்புப் பாலம்னு அறிவிச்சு ரெண்டு வருஷமா எந்த வேலையும் நடக்கலை. இப்போ எலெக்‌ஷன் வர்றதால `தொங்கு பாலம் அமைக்கப்படும்’னு முதல்வர் அறிவிச்சுட்டுப் போயிருக்காரு. சீக்கிரமே எலெக்‌ஷன் அறிவிச்சுடுவாங்க. அதனால, நூறு சதவிகிதம் நடக்காத திட்டத்தைத்தான் முதல்வர் அறிவிச்சிருக்காரு’’ என்றார்.

இதற்கிடையே, ரோப் கார் கொண்டு வந்தால், படகுத்துறைக்குச் செல்லும் வழியிலிருக்கும் தங்கள் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவது தடைப்பட்டு, வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் தரப்பிலும் அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தளவாய் சுந்தரம் - ஆஸ்டின்
தளவாய் சுந்தரம் - ஆஸ்டின்

இது பற்றி அ.தி.மு.க-வைச் சேர்ந்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் பேசினோம். ‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுல முதல்வர் அறிவிச்சதுமே மும்பையிலிருந்து ஒரு டீம் வந்து டிசைன் போட்டுட்டாங்க. அதுக்குப் பிறகு மூணு டெண்டருக்கு அழைப்பு விடுத்தாச்சு. டெண்டர் எடுக்க யாரும் வரலை. மும்பையிலுள்ள கன்சல்ட்டிங் கம்பெனிக்கு வேலையைக் கொடுத்திடலாமானு முதல்வர் கேட்டிருக்கார். ஆனாலும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தம் எடுக்க யாராவது வருவாங்களானு பார்த்துட்டு இருக்கோம். திருவள்ளுவர் சிலைக்கு இணைப்பு பாலம்னு ஏற்கெனவே போட்டுட்டோம். அதுக்கு ஆள் வராததால, இப்ப தொங்கு பாலத்துக்கு டிசைன் கொடுத்திருக்கோம். ரெண்டுக்குமே டெண்டர் கால்ஃபார் பண்ணியிருக்கோம். எதுக்கு டெண்டர் எடுக்க வர்றாங்களோ அந்தப் பாலம் அமைப்போம். ரோப் கார் திட்டத்துக்கு சில எதிர்ப்புகள் இருக்கு. அதனால, அந்தத் திட்டத்தை பெண்டிங்ல வெச்சிருக்கோம்’’ என்றார்.

`சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்’

வள்ளுவன் வாக்கு... வேறென்ன சொல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு