அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

போதை, வன்முறை, மிரட்டல்... சர்ச்சையில் காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள்!

நெடுங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
நெடுங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி

போதைப்பொருள்களுடன் மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் வீடியோ எடுத்ததும், விழிப்புணர்வுக் கூட்டத்தில் ஓர் ஆசிரியர் என் அனுமதியின்றி பேசியதும் தவறு.

“போதை தலைக்கேறியபடி பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவர்களின் அட்டகாசத்தால், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேதான் மாணவிகளும் ஆசிரியைகளும் வகுப்பறையில் இருக்கிறோம்.” - இது ஆசிரியை ஒருவரின் வாக்குமூலம்! அண்மையில், காரைக்கால் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வுக் கூட்டத்தில், ஆசிரியை ஒருவர் எழுப்பிய இந்தக் குற்றச்சாட்டு நெடுங்காடு அரசுப் பள்ளி நிர்வாகத்துக்குள் கடும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. ‘என்னதான் நடக்கிறது அந்தப் பள்ளியில்..?’ என்ற விசாரணையில் இறங்கினோம்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலரிடம் பேசினோம். “இங்கே 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் சுமார் 20 மாணவர்கள் எல்லாவகை போதை வஸ்துகளையும் பயன்படுத்துகிறார்கள். எப்போதும் ‘கூல்-லிப்ஸ்’ என்ற போதைப்பொருளை உதட்டில் அடக்கிக்கொள்கிறார்கள். டாய்லெட்டுதான் இவர்களின் மது அருந்தும் பார். அங்கு சிறுநீர் கழிக்க வரும் மாணவர்களை இவர்கள் அடித்து உதைக்கிறார்கள். மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் கிண்டலடிக்கிறார்கள். ஆசிரியைகள் போர்டில் எழுதத் திரும்பினால், அவர்கள் மீது பேப்பர் ராக்கெட்டுகளை ஏவுகிறார்கள்.

நெடுங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி
நெடுங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி

முன்னாள் அமர்ந்திருந்த மாணவன் முதுகில், போதை மாணவர் ஒருவர் கத்தியால் கிழிக்க, சட்டை கிழிந்து முதுகிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்கள் சிலர் போதையில் மயங்கி வகுப்பறையில் வாந்தி எடுப்பதும், படுத்து உறங்குவதும் அடிக்கடி நிகழ்கின்றன. வேறு வழியில்லாமல் மாணவிகள் கூட்டாகச் சேர்ந்து கலெக்டருக்கு இது குறித்துப் புகார்க் கடிதம் எழுதிவிட்டார்கள். கலெக்டரும் நேரில் வந்து பார்த்து, மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கவும், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அழைத்துப் பேசவும் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி கல்வித்துறை அதிகாரி செய்த விசிட்டில், மாணவர்கள் சிலர் போதையில் மிதப்பதை உறுதிசெய்திருக்கிறார்.

இதற்கிடையே கலெக்டருக்குப் புகார் மனு அனுப்பிய மாணவி ஒருவரை பள்ளி முதல்வர் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அதனால் அந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார். மாணவர்களிடமிருந்து போதைப்பொருள்களைக் கையும் களவுமாகப் பிடித்து வீடியோ எடுத்த ஆசிரியரும் பள்ளி முதல்வரால் மிரட்டப்பட்டிருக்கிறார். விழிப்புணர்வுக் கூட்டத்தில், உண்மையை எடுத்துச் சொன்ன ஆசிரியரையும் பள்ளியில் கட்டம்கட்டி வைத்திருக்கிறார்கள்.

போதை, வன்முறை, மிரட்டல்... சர்ச்சையில் காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள்!

ஆரம்பத்தில் நான்கு மாணவர்கள்தான் இப்படித் தவறான செயலில் இறங்கியிருக்கின்றனர். அப்போதே பள்ளி நிர்வாகம் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், நிலைமை இந்த அளவுக்குப் போயிருக்காது. இதேநிலை நீடித்தால் மற்ற மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும்” என்றனர் கவலையுடன்.

மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்த திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் அறிவுச்செல்வனிடம் பேசியபோது, “என் பேச்சை கவனிக்கும் நிலையில் மாணவர்கள் இல்லை. ஹேர்ஸ்டைல், முக்கால் பேன்ட் என மாணவர் தோற்றத்திலேயே அவர்கள் இல்லை. எளிய கேள்விகளுக்கே அவர்களால் பதில் தர முடியவில்லை. அவர்கள் நிலை வேதனைக்குரியது” என்றார்.

போதை, வன்முறை, மிரட்டல்... சர்ச்சையில் காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள்!

இதையடுத்து குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளி முதல்வர் சித்ராவிடம் பேசியபோது, “போதைப்பொருள்களுடன் மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் வீடியோ எடுத்ததும், விழிப்புணர்வுக் கூட்டத்தில் ஓர் ஆசிரியர் என் அனுமதியின்றி பேசியதும் தவறு. யதேச்சையாகக் கிழிக்கப்பட்ட மாணவனின் சட்டைக்கு மாற்றாக இரண்டு மீட்டர் துணி கொடுத்து, பிரச்னையைச் சரிசெய்துவிட்டேன். நான் அறிவுரை கூறியதை ஒரு மாணவி தவறாகப் புரிந்துகொண்டாள். எனவே இது குறித்து அவள் தந்தையிடம் நானே பேசிவிட்டேன். ‘யாருக்கும் தொல்லை தராமல், மாணவர்கள் வகுப்பறையில் தூங்கினால் அதைக் கண்டுகொள்ள வேண்டாம்’ என்கிறேன். அதையும் மீறி ரகளை செய்யும் மாணவரை என் அறையில் கொண்டு வந்து வைத்துக்கொள்கிறேன். உள்ளுரைச் சேர்ந்த சில ஆசிரியர்கள்தான் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள். அவர்களுக்குக் கல்வித்துறை அதிகாரி ஒருவரும் துணைபோகிறார்” என்று பதில் கூறி நம்மை அதிரவைத்தார்.

இதைத் தொடர்ந்து கல்வித்துறை துணை இயக்குநர் ராஜேஸ்வரியிடம் பேசினோம். “பள்ளி முதல்வரின் செயல்கள், அவர் மாணவர்களின் தவறுகளை மறைப்பதிலேயே அக்கறை காட்டுவதாக இருக்கின்றன. போதை மாணவர்களின் பெற்றோர்களின் முகவரி கேட்டு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், இன்றுவரை பள்ளி முதல்வர் அந்த முகவரிகளை அனுப்பவில்லை. மாறாக, உள்ளூர் ஆசிரியர்கள் சிலர்மீது குறை சொல்கிறார். எனவே, இரண்டு தரப்பிலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன். அவர்களிடமிருந்து பதில் வந்ததும் இயக்குநருக்கு அனுப்பி, அவரது உத்தரவுபடி தக்க நடவடிக்கை எடுப்போம்” என்றார் உறுதியுடன்.

அறிவுச்செல்வன்
அறிவுச்செல்வன்
முகமது மன்சூர்
முகமது மன்சூர்

இறுதியாக மாவட்ட கலெக்டர் முகமது மன்சூரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். “மாணவர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாவது குறித்து, பல பள்ளிகளிலிருந்தும் புகார்கள் வந்திருக்கின்றன. மாணவர்களுக்கு போதைப்பொருள்கள் கிடைப்பதைத் தடுக்க காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து கவுன்சலிங் கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறேன்” என்றார்.