Published:Updated:

`நிவாரண உதவிகள் ஏழைகளுக்குப் போய்ச் சேர்ந்ததா?' -சர்ச்சையில் காரைக்கால் கந்தூரி விழா பணம்

பள்ளிவாசல்
பள்ளிவாசல்

கந்தூரி விழா நடத்தாததால், அதற்கான பணத்தைக் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குவதாக சொன்னார்கள். இது வரவேற்கக் கூடிய ஒன்றுதான். ஆனால்?

கொரோனா ஊரடங்கால் நடத்த முடியாமல் போன காரைக்கால் கந்தூரி விழாவுக்கான செலவு பணத்தில், நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அதில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் எட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

காரைக்கால், மஸ்தான் பள்ளி வீதியில் `மஸ்தான் சாகிபு ஒலியுல்லா தர்ஹா ஷரீப் பள்ளிவாசல்' அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறும் கந்தூரி விழா மிகவும் பிரபலமாகும். இவ்விழாவில் இளைஞர்கள் ஆர்வமிகுதியாலும், போட்டி மனப்பான்மையாலும் அலங்கார ஊர்திகள், தாரை, தப்பட்டைகள் என பல லட்ச ரூபாய்களைச் செலவு செய்வது வழக்கம். வண்ண விளக்குகளால் நகரமே ஒளிரும். மத வேறுபாடில்லாமல் அனைவரும் கலந்துகொள்ளும் இந்த விழா அப்பகுதியில் களைகட்டும்.

இஸ்மாயில்
இஸ்மாயில்

அத்தகைய கந்தூரி விழா இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் நின்று போனது. வக்பு நிர்வாக சபையின் சார்பாக கந்தூரி விழாவுக்காக செலவு செய்ய இருந்த லட்சக்கணக்கான தொகையை, கொரோனா நிவாரணமாக நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர். இந்தப் பணத்தில் அரிசி மற்றும் மளிகைப்பொருள்கள் வாங்கியதில்தான் புகார் எழுந்துள்ளது.

இதுபற்றி சமூக ஆர்வலர் இஸ்மாயிலிடம் பேசினோம்.

``கந்தூரிக்காக செலவு செய்யப்படும் தொகை வக்பு நிர்வாக சபையின் சொத்துகள் மூலமாக கிடைக்கக் கூடியதாகும். கந்தூரி விழா நடத்தாததால், அதற்கான பணத்தைக் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குவதாக சொன்னார்கள். இது வரவேற்கக் கூடிய ஒன்றுதான்.

`எச்சரிக்கை, அறிவுரை மட்டுமே.. தண்டனை இல்லை!' -`கொரோனா' போரில் பாடம் கற்பிக்கும் காரைக்கால்

ஏறக்குறைய மூன்று லட்ச ரூபாய் அளவில் மளிகைப் பொருள்களை வாங்கி உள்ளனர். அதற்கு ஏதேனும் பொது டெண்டர் கொடுத்து பொருள் வாங்கினார்களா என்றால் இல்லை. அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நிர்வாக சபை உறுப்பினர்கள் என பயனாளிகளைப் பாகப்பிரிவினை செய்துகொண்டு, அவரவர்களுக்குத் தேவையான நபர்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொடுத்துள்ளனர். உண்மையான ஏழைப் பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை.

அதற்குப் பதிலாக காரைக்கால் வக்பு நிர்வாக சபைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான வாடகையை தள்ளுபடி செய்வது, பள்ளிகளின் இமாம்கள், பிலால்கள், உதவியாளர்கள் மற்றும் நிர்வாக சபை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பது போன்ற முறையைக் கையாண்டு இருந்தால் உண்மையான பயனாளிகள் பயன் அடைந்து இருப்பார்கள். இதில் அரசியல் தலையீடும் இருந்திருக்க முடியாது" என்றார்.

தவிர்க்கமுடியாத காரணங்களால் சிட்டிங் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோருக்கு தலா 50 நிவாரணப் பொருள்கள் அடங்கிய பேக்கிங் கொடுத்தோம். அது அவர்கள் மூலமாக பயனாளிகளுக்குப் போய் சேர்ந்திருக்கிறது.
வக்பு நிர்வாக சபை செயலாளர்

இதுபற்றி வக்பு நிர்வாக சபை செயலாளர் செல்லப்பாவிடம் விளக்கம் கேட்டோம். ``விழா நடத்தியிருந்தால் சுமார் 3 லட்ச ரூபாய் செலவாகியிருக்கும். விழா நடத்தியதாகக் கருதிக்கொண்டு அப்பணத்தை கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிட நிர்வாகத்தில் முடிவு செய்தோம்.

அதன்படி எங்கள் நிர்வாக இடத்தில் குடியிருக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கும் கந்தூரி விழாவுக்கு ஊழியம் செய்யும் சுமார் 100 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருள்களை வழங்கினோம். தவிர்க்கமுடியாத காரணங்களால் சிட்டிங் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோருக்கு தலா 50 நிவாரணப் பொருள்கள் அடங்கிய பேக்கிங் கொடுத்தோம். அது அவர்கள் மூலமாக பயனாளிகளுக்குப் போய் சேர்ந்திருக்கிறது. முறைகேடு ஏதுமில்லை. இதில் சில ஏழைக் குடும்பங்கள் விடுபட்டிருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை" என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு