‘‘பல ஆண்டுகளாக, `ஏரியைத் தூர்வார வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறோம். அதைவிடுத்து, ஏரிக்குள் மணல் திட்டுகள் அமைக்க அரசு 4.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. மணல் திட்டுகள் அமைப்பது ஏரியின் நீர்க் கொள்ளளவைக் குறைத்து, விவசாயிகளை பாதிக்கும் செயல்’’ என்று கொந்தளிக்கின்றனர் அரியலூர் மாவட்ட கரைவெட்டி ஏரியின் சுற்றுவட்டார விவசாயிகள்.
தமிழ்நாட்டிலுள்ள பிரமாண்டமான ஏரிகளில் ஒன்று கரைவெட்டி ஏரி. 1,100 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த ஏரி, அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி கிராமத்தில் உள்ளது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, காமராஜர் ஆட்சிக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்கும்போது லட்சக்கணக்கான பறவைகள் இங்கு வந்து செல்லும். இதனால் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இந்த ஏரி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இப்போதும், `பறவைகளுக்காக...’ என்று சொல்லித்தான் மணல் திட்டுகள் அமைக்கப்படுகின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்க சண்முகசுந்தரம், ‘‘கடந்த 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட இந்த ஏரி தூர்வாரப்படலை. ஏரியில சுமார் 20 அடி உயரம் வரைக்கும் வண்டல் சேர்ந்திருக்கு. அதனால கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏரியின் முழுமையான கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்க முடியலை. இங்கே பறவைகள் வருவதும் குறைஞ்சிடுச்சு. இந்த ஏரியை நம்பி பாசனம் செஞ்ச பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கு. அதனால, தூர்வாரி ஆழப்படுத்தணும்னு நீண்டகாலமா கோரிக்கைவெச்சுக்கிட்டு இருக்கோம். இதை தமிழக அரசு கண்டுக்கலை. ஆனா, இப்போ திட்டுகள் அமைக்க 4.95 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்காங்க. திட்டுகள் அமைச்சா தண்ணீர் தேக்குவது பாதிக்கப்படும். அதுக்கு பதிலாக, இந்தப் பணத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால், விவசாயிகளும் பயனடைவோம்; பறவைகளும் பலனடையும். இதை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்திக்கிட்டு இருக்கோம்’’ என்றார்.
விவசாயி அய்யப்பன், ‘‘இந்த ஏரியின் மொத்த பரப்பு 1,100 ஏக்கராக இருந்தாலும்கூட, குறிப்பிட்ட 300 ஏக்கர்லதான் அதிகமாகத் தண்ணீர் தேங்கி நிக்கும். இதை, `ஏரியின் இதயப் பகுதி’னு சொல்லலாம். எட்டு திட்டுகளையும் இங்கேதான் அமைக்கிறாங்க. ஒவ்வொரு திட்டும் தலா 20 ஏக்கர். 300 ஏக்கரில் 160 ஏக்கரில் திட்டுகள் மட்டுமே அமைத்தால், எங்கே தண்ணியைத் தேக்க முடியும்?’’ என்று கவலைப்படுகிறார்.
இந்த விஷயத்தில், `பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை’ என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டபோது, 4.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எட்டு மணல் திட்டுகள் அமைக்கப்போவதாக மட்டுமே விவசாயிகளிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும்கூட, தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகள் உறுதியளிக்கவில்லை. ஆர்.டி.ஓ தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போதுகூட தூர்வாருவது குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை.
`திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில், தகவல் பலகை வைக்க வேண்டும்’ என்பது விதிமுறை. அதில், என்னென்ன பணிகள் நடைபெறும்; எப்போது தொடங்கி எப்போது முடிவடையும்; ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு செலவாகும் என்பவை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும். ஆனால் நாம் பார்த்தபோது தகவல் பலகையே இல்லை.

விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காகவே இப்போது தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகள் பேசுவதாக ஏரியா மக்கள் தெரிவிக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை இல்லாததால், இதில் முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கிறார்கள்.
இது குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமனிடம் பேசினோம். ‘‘விவசாயம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு பறவைகளும் முக்கியம். நாங்கள் அமைக்கப்போகும் எட்டு திட்டுகளிலும் 10,000 மரங்கள் வளர்க்க முடியும். இதுதான் பறவைகளுக்குப் பிடித்த இயல்பான சூழல். இது மிகவும் அவசியமானது. அதேசமயம் ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 60,000 கனமீட்டர் வண்டல் மண்ணை ஏரியிலிருந்து வெளியேற்றி அப்புறப்படுத்தவும், அதில் 40,000 கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இவை தவிர மேலும் ஒரு லட்சம் கனமீட்டர் அளவுக்கு மண்ணைத் தூர்வாரி, ஏரியை ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் நிதி கேட்டிருக்கிறோம். இந்தத் திட்டத்தில் எந்த முறைகேடும் நடக்காது’’ என்றார்.
‘‘திட்டுகளால் எந்தப் பயனும் இல்லை!’’

ஏரிக்குள் மணல் திட்டுகள் அமைப்பது குறித்து சூழலியல் ஆய்வாளர்களிடமும் பேசினோம். ‘‘தமிழரின் பாரம்பர்ய நீர் மேலாண்மையின்படி ஏரிகளில் செயற்கையான மணல் திட்டுகள் அமைக்கப்பட்டதே இல்லை. தண்ணீரைத் தேக்கிவைத்து, விவசாயத்துக்குப் பயன்படுத்துவதற்காகத்தான் ஏரிகள் உருவாக்கப்பட்டன. ஏரிக்கரைகளிலுள்ள ஆலம், அரசு, நீர் மருது, பூவரசு, வேம்பு உள்ளிட்ட மரங்களில்தான் பறவைகள் கூடுகட்டி வாழ்ந்தன. தற்போது அழகுக்காகத் திட்டுகள் அமைக்கலாம். ஆனால், நிச்சயமாக தண்ணீர் கொள்திறன் பாதிக்கப்படும். 1998-ம் ஆண்டு கரைவெட்டி ஏரியில் 10 திட்டுகள் அமைத்தார்கள். அனைத்தும் அந்த ஆண்டே கரைந்துவிட்டன. ஏரிகளின் முதன்மையான பயன்பாடு விவசாயம்தான். இதனூடாக, பறவைகளும் இளைப்பாறலாம். கரைகளில் அதிக அளவில் மரங்கள் வளர்ப்பதன் மூலமாக மட்டுமே பறவைகளுக்கு நன்மை செய்ய முடியும். அதேசமயம் கரைகளும் பலம் பெறும்” என்றார்கள்.