Published:Updated:

விஸ்ரூபமெடுத்த கர்நாடகா ‘ஹிஜாப்’ விவகாரம்... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் மத அமைப்புகள்!

ஹிஜாப்
பிரீமியம் ஸ்டோரி
ஹிஜாப்

கர்நாடகாவில் சில கல்லூரிகளில் மட்டுமே சீருடை கட்டாயம் என்ற விதி இருக்கிறது. அங்கெல்லாம்கூட ஹிஜாப் அணிந்து வருவது இத்தனை காலம் சர்ச்சையானது கிடையாது.

விஸ்ரூபமெடுத்த கர்நாடகா ‘ஹிஜாப்’ விவகாரம்... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் மத அமைப்புகள்!

கர்நாடகாவில் சில கல்லூரிகளில் மட்டுமே சீருடை கட்டாயம் என்ற விதி இருக்கிறது. அங்கெல்லாம்கூட ஹிஜாப் அணிந்து வருவது இத்தனை காலம் சர்ச்சையானது கிடையாது.

Published:Updated:
ஹிஜாப்
பிரீமியம் ஸ்டோரி
ஹிஜாப்

ஐந்து மாநிலத் தேர்தல்கள், நாடாளுமன்றத்தில் ராகுலும் மோடியும் வார்த்தைப் போரில் ஈடுபட்டது... என எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு டீக்கடை தொடங்கி ட்விட்டர் வரை தீயெனப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது `ஹிஜாப்’ விவகாரம். ‘மத அமைப்புகளின் அரசியல் லாபத்துக்காக கர்நாடகாவில், மாணவர்கள் பலியாடாக்கப்படுகிறார்கள்’ என்று தேசிய ஊடகங்கள் வரை விமர்சிக்கும் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலுள்ள அரசு பியூ (11 மற்றும் 12-ம் வகுப்பு) கல்லூரியில், எட்டு மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு வகுப்புக்கு வர பெற்றோர் மூலமாகப் பல மாதங்களாக அனுமதி கோரிவந்தனர். ஒருகட்டத்தில் எழுத்துபூர்வமாகவும் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் அளித்திருந்தனர். அவரிடமிருந்து பதில் வராத நிலையில், டிசம்பர் 27 அன்று அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு வந்தனர். ஆனால், வகுப்புக்குள் செல்ல அந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வருகைப் பதிவேட்டில் ‘ஆப்சென்ட்’ இடப்பட்டது. இதையடுத்து அந்த மாணவிகள் கல்லூரி வாசலுக்கு வெளியே நின்று எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

அடுத்த நாளும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கல்லூரி வாசலில் நின்று மாணவிகள் போராட்டம் செய்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாணவர் அமைப்பான `கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ அவர்களுக்கு ஆதரவாக வந்தது. விவகாரம் கர்நாடகா முழுவதும் பற்றிக்கொண்டது. இந்தப் போராட்டம் தொடர்ந்த நிலையில், கர்நாடகாவின் சிக்மக்ளூர் மாவட்டத்திலுள்ள அரசுக் கல்லூரியில், பா.ஜ.க-வின் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த மாணவர்கள் காவித்துண்டு அணிந்துவரவே அங்கு ஹிஜாப், காவித்துண்டு இரண்டுக்கும் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் புதிதாக ஹிஜாப் அணிந்தவர்கள் அல்ல; பல ஆண்டுகளாக ஹிஜாப் அணியும் வழக்கம் அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

விஸ்ரூபமெடுத்த கர்நாடகா ‘ஹிஜாப்’ விவகாரம்... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் மத அமைப்புகள்!
விஸ்ரூபமெடுத்த கர்நாடகா ‘ஹிஜாப்’ விவகாரம்... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் மத அமைப்புகள்!

இப்படியாகத் தொடங்கிய பிரச்னை கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவ, விஸ்வரூபம் எடுத்தது ஹிஜாப் விவகாரம். பல காலமாக ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளித்திருந்த கல்லூரிகளிலும் ஹிஜாப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இது குறித்து 18 மாணவிகள் ஒன்றிணைந்து ஐந்து வழக்குகளைத் தொடுத்தனர். இந்த நிலையில், கர்நாடக அரசு ஓர் உத்தரவை வெளியிட்டது. ‘கல்லூரி வளர்ச்சிக்குழு பரிந்துரைக்கும் சீருடையை மாணவ, மாணவிகள் கட்டாயம் அணிய வேண்டும். சமத்துவம், கண்ணியம், சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் ஆடைகள் அணிவது தடைசெய்யப்படுகிறது’ என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. ஹிஜாப் அணிவதை இந்த உத்தரவு மறைமுகமாகத் தடை செய்தது. இந்த அரசு உத்தரவை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இதற்கிடையில், ஹிஜாப்புக்கு அனுமதி இருந்த சில கல்லூரிகளிலும் காவித்துண்டு அணிந்துகொண்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் `ஜெய் ராம்’ கோஷம் எழுப்பியபடி பேரணியாகச் சென்றனர். அவர்களுக்கு இந்துத்துவ அமைப்பினர் சிலர் காவித்துண்டுகள், தலைப்பாகைகள் ஆகியவற்றைக் கொடுத்தனர். ஷிமோகாவிலுள்ள ஒரு பள்ளியில், தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக்கொடி ஏற்றிய வீடியோ நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக, நீலத்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்த சில மாணவர்கள் `ஜெய் பீம்’ கோஷம் எழுப்பினர். இதனால் கர்நாடகாவில் பதற்றம் அதிகரித்தது.

விஸ்ரூபமெடுத்த கர்நாடகா ‘ஹிஜாப்’ விவகாரம்... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் மத அமைப்புகள்!

பிரச்னையின் உச்சகட்டமாக, பிப்ரவரி 8 அன்று மாண்டியா மாவட்டத்தின் கல்லூரி ஒன்றில் நடந்த சம்பவம், மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்கவைத்தது. அந்தக் கல்லூரிக்கு அசைன்மென்ட்டைச் சமர்ப்பிக்க, புர்கா அணிந்துவந்த முஸ்கான் என்ற மாணவியை, காவித்துண்டு அணிந்துகொண்டு `ஜெய் ராம்’ கோஷம் எழுப்பியபடி, கும்பலாக வந்த மாணவர்கள் தடுக்க முயன்றனர். அவர்களைக் கண்டு சற்றும் அச்சப்படாத அந்த மாணவி, ஒற்றை ஆளாக அவர்கள் முன்னின்று, `அல்லாஹூ அக்பர்... அல்லாஹூ அக்பர்...’ என்று ஆவேசமாக எதிர்க்குரல் எழுப்பினார். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் அந்த மாணவியை பத்திரமாக கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர். “கும்பலாக வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்களே அல்ல. நான் பயப்படவில்லை. சக இந்து மாணவர்களும், ஆசிரியர்களும் எனக்கு ஆதரவளித்தார்கள். கல்விதான் எங்கள் முன்னுரிமை. ஆடையைக் காரணம் காட்டி, அதைச் சீர்குலைக்க நினைக்கிறார்கள்’’ என்று முஸ்கான், தேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது!

கர்நாடகாவில் சில கல்லூரிகளில் மட்டுமே சீருடை கட்டாயம் என்ற விதி இருக்கிறது. அங்கெல்லாம்கூட ஹிஜாப் அணிந்து வருவது இத்தனை காலம் சர்ச்சையானது கிடையாது. திடீரென இந்த விவகாரம் ஏன் கிளம்பியது, இதைக் கிளப்பிவிட்டது யார், பேரணி செல்லும் மாணவர்களுக்குக் காவித்துண்டுகளை வழங்கியது யார், பின்னாலிருந்து அந்த மாணவர்களை இயக்குவது யார் என்று அடுக்கடுக்கான கேள்விகள் நாடு முழுக்க விவாதங்களில் எழுப்பப்படுகின்றன.

‘ஹிஜாப் அணிவது அரசியல் சட்டப்படி எங்களுக்கு இருக்கும் உரிமை’ என்பது மாணவிகள் வாதம். கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர், ``உரிமை என்று சொல்லப்படும் ஹிஜாப் அணிதல், அவசியமான மத வழக்கமாக இருக்க வேண்டுமா?’’ என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். கர்நாடகக் கல்வி அமைச்சர் நாகேஷ், ‘‘சீருடை விதிகளை எல்லோரும் மதிக்க வேண்டும். ஹிஜாப் அணிவதை அந்த விதிகள் அனுமதிக்கவில்லை’ என்று வெளிப்படையாகவே சொல்கிறார்.

விஸ்ரூபமெடுத்த கர்நாடகா ‘ஹிஜாப்’ விவகாரம்... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் மத அமைப்புகள்!

‘‘எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கல்லூரிகளுக்குள் நுழைந்த பிறகே இந்த விவகாரம் பெரிதானது’’ என்று குற்றம்சாட்டுகிறது, பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத். (ஏ.பி.வி.பி) ஆனால், ‘‘ஏ.பி.வி.பி., விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஹிந்து ஜாகரன வேதிகே ஆகிய அமைப்புகளே பிரச்னைக்குக் காரணம். இத்தனை காலம் இல்லாமல் இப்போது அவர்களின் கண்களை ஹிஜாப் உறுத்துவதற்குக் காரணம் அரசியலே’’ என்கிறது கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா.

இந்த விவகாரத்தை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்களோ, ``2023-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவே, மத அரசியலை பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கையிலெடுத்திருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷின் கை ஓங்குவதால் `இந்துக்களின் காவலர்கள் நாங்கள்தான்’ என்று காட்டிக்கொள்ளவே `ஜெய் ராம்’ கோஷங்களோடு மாணவர்களைப் பேரணியாகச் செல்லவைத்து, இந்திய அளவில் இந்த விவகாரத்தைப் பேசுபொருளாக்கியிருக்கிறது பா.ஜ.க. ஹிஜாப் சர்ச்சை ஏற்பட்ட கல்லூரிகள் அனைத்திலும் பள்ளி வளர்ச்சிக்குழுவில் பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாகவே திட்டமிட்டு இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டிருக்கிறது.

இத்தனைக்கும் ஹிஜாப் என்கிற உடை, சீருடையை முழுவதுமாக மறைப்பதில்லை. மாறாக, முகத்திலிருந்து கழுத்துக்குக் கீழே வரை மட்டுமே மறைக்கும் ஓர் உடை. ஆனால், கர்நாடக பா.ஜ.க அமைச்சர்கள் மேலோட்டமாக ‘மத அடையாளமுள்ள எந்த உடையும் வேண்டாம்’ என்று கூறிவிட்டு அமைதி காக்கின்றனர். தனிக்குழு அமைத்து இது குறித்து விசாரிக்கவோ, கல்லூரி வளாகத்துக்குள் காவிக்கொடி ஏற்றியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவோ அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ‘வருங்காலத்தில் காவிக்கொடியே தேசியக்கொடியாக மாறலாம்’ என்று பேசியிருக்கிறார். பா.ஜ.க தனது மதரீதியான பிரிவினைவாத அரசியலுக்கு இந்த முறை மாணவர்களை பலியாக்கியிருப்பதுதான் வேதனை” என்றார்கள்.

சமூக ஒடுக்குமுறைகள், சமத்துவமின்மை அதிகம் காணப்படும் இந்தியாவில், கல்வி ஒன்றுதான் தடைகளை உடைத்து முன்னேறுவதற்கான வழியாக இருக்கிறது. ஆனால், அந்த வழியையும் முடக்கும் வகையில் கல்விக்கூடங்களில் மத வெறுப்பைத் தூண்டி, மாணவர்களைத் திசைதிருப்புகின்றன மதவாத சக்திகள். `நம்மைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்பதைக்கூட உணராமல், மாணவர்களில் சிலர் இப்படியான காரியங்களில் ஈடுபடுவது நாட்டின் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, அந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கும் ஆபத்தானது.

இந்தியாவின் ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்கும் ஹிஜாப் விவகாரத்தில், மத்திய அரசு அமைதி காக்காமல், உடனடியாகப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஜனநாயக நாடாக இந்தியா தொடர்ந்து ஒளிர முடியும்!