Published:Updated:

சாதி... மதம்... போக்சோ... மடாதிபதி கைதும், அரசியல் கட்சிகளின் மௌனமும்!

சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டபோது...
பிரீமியம் ஸ்டோரி
சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டபோது...

``பாரபட்சமின்றி விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்படும்’’

சாதி... மதம்... போக்சோ... மடாதிபதி கைதும், அரசியல் கட்சிகளின் மௌனமும்!

``பாரபட்சமின்றி விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்படும்’’

Published:Updated:
சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டபோது...
பிரீமியம் ஸ்டோரி
சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டபோது...

கர்நாடகாவிலுள்ள சித்ரதுர்கா மடத்தின் மடாதிபதியும், சக்திவாய்ந்த லிங்காயத் மதகுருவுமான சிவமூர்த்தி முருகா சரணரு செப்டம்பர் ஒன்றாம் தேதி கைதுசெய்யப்பட்டது மாநிலத்தையே பரபரப்பாக்கியிருக்கிறது. எல்லா விவகாரங்களிலும் பா.ஜ.க-வைச் சீண்டும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் மடாதிபதி கைது விவகாரத்தில் அடக்கிவாசிக்கின்றன.

இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

பாலியல் புகாரில் மடாதிபதி!

சித்ரதுர்காவிலுள்ள முருகா ராஜேந்திர லிங்காயத் மடத்துக்குச் சொந்தமான பள்ளியில் படிக்கும் 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு மாணவிகளை, மடாதிபதி சிவமூர்த்தி மூன்று வருடங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மாணவிகள், கடந்த ஜூன் மாதமே புகாரளிக்கக் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்த காவல் அதிகாரிகள் மடத்துக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, மடத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்துக்கே வந்து அந்த மாணவிகளைத் திருப்பி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் சார்பில் ஒரு என்.ஜி.ஓ அளித்த புகாரின்பேரில், ஆகஸ்ட் 26 அன்று, சிவமூர்த்தி உட்பட மடத்தைச் சேர்ந்த ஐந்து பேர்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின்கீழும் வழக்கு பதிந்தது காவல்துறை.

சாதி... மதம்... போக்சோ... மடாதிபதி கைதும், அரசியல் கட்சிகளின் மௌனமும்!

அதன் பிறகும் கைது நடவடிக்கை இல்லாததால் சித்ரதுர்கா, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆறு நாள்கள் கழித்து, செப்டம்பர் 1-ம் தேதி இரவு கைதுசெய்யப்பட்டார் சிவமூர்த்தி. அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் மாவட்ட நீதிபதி. இதையடுத்து, மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்ட சிவமூர்த்தி, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மௌனம் காக்கும் கட்சிகள்!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ``பாரபட்சமின்றி விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்படும்’’ என்பதோடு நிறுத்திக்கொண்டார். ``மற்ற விவகாரங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று கொந்தளிக்கும் பா.ஜ.க அரசு, இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்கிறது’’ என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா வெளிப்படையாகவே சிவமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

`பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது பா.ஜ.க’ என்று பலமுறை கொந்தளித்த காங்கிரஸும் இம்முறை அடக்கி வாசிக்கிறது. கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார், ``சிவமூர்த்தி செய்த சமூக சேவைகளை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சதி வேலைகள்கூட இருக்கலாம்’’ என்று கூறியிருக்கிறார். மற்றோர் எதிர்க் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறது.

பா.ஜ.க எம்.பி லஹார் சிங் (Lahar Singh) மட்டுமே இந்த விஷயத்தில் ஓரளவுக்கு மாணவிகள் பக்கம் நின்று பேசியிருக்கிறார். அவர், ``சிறுமிகளின் குற்றச்சாட்டுகளைப் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும். ஒரு சமூகமாக இது போன்ற குற்றச்சாட்டுகள் சரிவர விசாரிக்கப்படுவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்’’ என்றிருக்கிறார்.

லிங்காயத் சமுதாய வாக்குகள்தான் காரணமா?

கர்நாடக தேர்தல்களில், லிங்காயத் சமூக வாக்குகள் பெரும்பங்கு வகிக்கின்றன. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு லிங்காயத் மடாதிபதிகள் முழு ஆதரவளித்தனர். அதன் விளைவாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-ஐ கைப்பற்றியது பா.ஜ.க. காங்கிரஸின் மூத்த தலைவர் சித்தராமையா, 2005-ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து வெளிவந்தபோது, அவருக்கு முழு ஆதரவளித்தார் சிவமூர்த்தி. தொடர்ந்து காங்கிரஸில் இணைந்த அவர், லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவுடன் முதல்வரானார். ஒரு மாதத்துக்கு முன்பாக கர்நாடகம் வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சித்ரதுர்கா மடத்துக்குச் சென்று, சிவமூர்த்தியிடம் தீக்‌ஷை பெற்றார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் கர்நாடக அரசியல் நோக்கர்கள், ``லிங்காயத் சமூகத்துக்கென கிட்டத்தட்ட 18% வாக்குவங்கி இருக்கிறது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவைக் கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தில் முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது பா.ஜ.க. இதையடுத்து, லிங்காயத் மடாதிபதிகள் சிலர் பா.ஜ.க-வுக்கான ஆதரவு நிலையிலிருந்து விலகினர். சுதாரித்துக்கொண்ட பா.ஜ.க, `75 வயதுக்கு மேல் யாருக்கும் பதவி கிடையாது’ என்ற கட்சியின் விதியையும் மீறி, அவருக்குக் கட்சியின் தேசிய தேர்தல்குழு, உயர்நிலைக் குழுவில் இடமளித்தது. இன்னும் எட்டு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், எந்தக் கட்சியும் இந்த விவகாரத்தில் பெரிதாகத் தலையிட விரும்பவில்லை.

சாதி... மதம்... போக்சோ... மடாதிபதி கைதும், அரசியல் கட்சிகளின் மௌனமும்!

கர்நாடகத்திலுள்ள லிங்காயத் மடாதிபதிகளில் முக்கிய மானவர் சிவமூர்த்தி. எனவே, தேர்தல் தேதி நெருங்க வில்லையென்றாலும், இந்த விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அமைதியாகத்தான் இருந்திருப்பார்கள்’’ என்கின்றனர்.

மேலும், ``இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்ற பிம்பம் நாடு முழுவதுமிருக்கிறது. அதோடு, ஓ.பி.சி., பட்டியலின மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான வேலைகளிலும் பா.ஜ.க இறங்கியிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக மடாதிபதி கைதுசெய்யப்பட்டிருக்கலாம்’’ என்றும் சொல்கின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் 53,874 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பதாகச் சொல்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் சாதி, மத, வாக்கு அரசியலுக்காக அரசியல் கட்சிகள் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்!