Published:Updated:

`சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்; இப்ப மாசம் ₹60,000 சம்பாதிக்கிறோம்!' - வறுமையை ஜெயித்த சகோதரர்கள்

பீட்சா தயாரிப்பில் கார்த்திகேயன், அருண்குமார்
பீட்சா தயாரிப்பில் கார்த்திகேயன், அருண்குமார் ( நா.ராஜமுருகன் )

வறுமையை ஜெயித்த தனது குடும்ப நிலைமையின் முன் கதை சுருக்கத்தோடு, பேச்சை தொடங்குகிறார் அருண்குமார்.

``நான் பத்தாவது படிக்கிற வரைக்கும், கூரை வீட்டில்தான் வசித்தோம். அதன் பிறகு, ஓடு போட்டாலும், அதுவும் சிதிலமாகி, மழைக்காலத்தில் தண்ணி வீட்டுக்குள் ஒழுகும். அப்பா, கோயில் பூசாரிங்கிறதால, பெருசா வருமானம் இருக்காது. பலநாள் மூணுவேளை சாப்பிடுறதுக்கே கஷ்டப்பட்டோம். ஆனா, `வறுமையை ஜெயிக்கணும், ஒழுகுற வீட்டை இடிச்சுட்டு, பெருசா வீடு கட்டணும்'னு நானும், என்னோட அண்ணனும் வைராக்கியமா இருந்தோம்.

கஸ்டமருக்கு பரிமாறும் அருண்குமார்
கஸ்டமருக்கு பரிமாறும் அருண்குமார்
நா.ராஜமுருகன்

கஷ்டத்திலும் சமையல் சம்பந்தமா படிச்சோம். வெளிநாடு போய் கை நிறைய சம்பாதிச்சோம். ஊர்ல ரூ. 70 லட்சம் மதிப்பில் பெரிய வீடு கட்டினோம். `இனி உள்ளூருலேயே சம்பாதிப்போம்'னு பீட்சா கடை வச்சோம். இப்போ, மாசம், ரூ.60,000 வரை சம்பாதிக்கிறோம்" என்று வறுமையை ஜெயித்த தனது குடும்ப நிலைமையின் முன் கதை சுருக்கத்தோடு, பேச்சை தொடங்குகிறார் அருண்குமார்.

31 வயது இளைஞரான அருண்குமார், கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தைச் சேர்ந்தவர். இவரும், இவரின் அண்ணன் கார்த்திகேயனும் சேர்ந்து, கரூர் திண்ணப்பா தியேட்டர் அருகே, நம்பர் 1 ஹாட் பீட்சா என்ற பெயரில் கடை நடத்திவருகிறார்கள். கடையில் வேலையில் `பிஸி'யாக இருந்த அருண்குமாரைச் சந்தித்துப் பேசினோம்.

`சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்; இப்ப மாசம் ₹60,000 சம்பாதிக்கிறோம்!' - வறுமையை ஜெயித்த சகோதரர்கள்
நா.ராஜமுருகன்

``என்னோட 22 வயசு வரைக்கும் சொல்லாத கஷ்டத்தை அனுபவிச்சுட்டேன். அப்பா சுப்பிரமணியன், அருகில் உள்ள சிறிய அம்மன் கோயிலில் பூசாரியாக இருந்தார். அம்மா சித்ராதேவி கூலி வேலைக்குப் போவாங்க. சொந்தமா கால்காணிகூட விவசாய நிலம் கிடையாது. இருக்கிற ஒரு வீடும் குடிசை வீடா இருந்துச்சு. நான் பத்தாவது படிக்கும்போது, அதை ஓட்டுவீடா மாத்தினாங்க. ஆனா, அதுவும் சிதிலமடைஞ்சு, மழைக்காலத்தில் ஒழுகும். இரவு முழுக்க, மழை தண்ணியில் நனைஞ்சுக்கிட்டு, மொத்தக் குடும்பமும் கொட்டக்கொட்ட முழிச்சுக்கிட்டு இருப்போம்.

அப்பா வாரத்துல மூணு நாள்தான் கோயிலுக்குப் போவார். அங்க வர்ற ஒண்ணு ரெண்டு பக்தர்கள் அஞ்சு, பத்துனு தர்ற காசை வச்சுதான் சாப்பாட்டு பிரச்னையை சமாளிக்கணும். ஆனா, 50 ரூபாகூட அவருக்கு கிடைக்காது. அப்படி, நாங்க பட்ட கஷ்டம், என்னையும், என் அண்ணனையும் மனசு முடங்க வைக்கலை. மாறாக, `நாம சாதிக்கணும். பொருளாதார ரீதியாக உயரணும். ஊர்லேயே பெரிய வீடா கட்டணும்'னு வைராக்கியத்தைத்தான் விதைச்சுச்சு. பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதும், மேல படிக்க வசதியில்லாததால், `அண்ணன் மட்டும் படிக்கட்டும்'னு நினைச்சு, எல்.ஜி.பி கம்பெனியில மாசம் ரூ.2,500 சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன்.

பீட்சா
பீட்சா
நா.ராஜமுருகன்

2007-ம் வருஷம் வரை அங்க வேலை பார்த்தேன். இதுக்கிடையில், 2007-ம் ஆண்டு கேட்டரிங் டெக்னாலஜி மூணு வருஷம் கோர்ஸை அண்ணன் படிச்சு முடிச்சார். பெங்களூர்ல மாசம் ரூ. 6,000 சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தார். இன்னொருபக்கம், எனக்கு வேலை கஷ்டமா இருந்துச்சு. போதிய சம்பளம் கிடைக்கலை. அதனால், அதை ரிசைன் பண்ணிட்டு, கடன் வாங்கி, ஒரு வருஷம் கேட்டரிங் டெக்னாலஜி கோர்ஸ் படிச்சேன்.

2008-ம் ஆண்டு, பெங்களூர்ல ஒரு ஹோட்டல்ல ரூ. 6,000 சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தேன். அதன் பிறகு, இன்னொரு பிரபல ஹோட்டல்ல 2009-ம் அண்டு, ரூ. 8,000 சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். 2011-ம் ஆண்டு ரிசைன் பண்ணுனப்ப, மாசம் ரூ. 11,000 வரை வாங்கினேன். அமெரிக்காவைச் சேர்ந்த பயணிகள் கப்பல் நிறுவனத்தில் மாசம் ரூ. 60,000 சம்பளத்துக்கு, 2011-ம் ஆண்டு வேலை கிடைச்சுது. ஒரு வருடம் அங்கே வேலை பார்த்தேன். அதன்பிறகு, 2012-ம் ஆண்டு, நியூயார்க்கில் நம் நாட்டு பஞ்சாபிகாரர் ஒருவர் நடத்தி வந்த ரெஸ்டாரன்டில் மாசம் ஒண்ணேகால் லட்சம் சம்பளத்தில் வேலை கிடைச்சுச்சு. அங்கே கடுமையா உழைச்சேன்.

பீட்சா
பீட்சா
நா.ராஜமுருகன்

2014-ம் ஆண்டு அந்த வேலையை விட்டப்ப, மாசம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கினேன். அதன்பிறகு, அட்லாண்டா மாநிலத்தில் மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஆரம்பிச்ச ரெஸ்டாரன்டில் மாசம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மூணு வருஷம் கழிச்சு அந்த வேலையை விட்டப்ப, மாசம் இரண்டரை லட்சம் சம்பளம் வாங்கினேன். என்னோட கடின உழைப்புதான், அவ்வளவு சம்பளம் வாங்குற அளவுக்கு என்னை உயர்த்திச்சு. இன்னொரு பக்கம், எங்கண்ணன் கார்த்திகேயன், பெங்களூர்ல அஞ்சு வருஷம் பணிபுரிஞ்சுட்டு, 2012-ம் ஆண்டு, சிங்கப்பூர்ல ஒரு ஹோட்டல்ல மாசம் ரூ. 60,000 சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தார்.

2014-ம் ஆண்டு அவர் அந்த வேலையை விட்டுட்டு, மாசம் ரூ.75,000 வரை சம்பளம் வாங்கினார். அதன்பிறகு, மொரீசியஸில் இரண்டு வருஷம், மாசம் 1.5 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்தார். அதன்பிறகு, அந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு, ஊருக்கு வந்தார். நாங்க ரெண்டு பேரும் சம்பாதிச்ச பணத்தில், ஊரில் 70 லட்சம் மதிப்பில் பெரிய வீட்டைக் கட்டினோம். `மழை, வெயிலுக்கு அண்டகூட சரியான வீடில்லாம அவந்தரையா கிடந்தோம். இப்போ, நமக்கு இவ்வளவு பெரிய வீடா?'னு அப்பாவும் அம்மாவும் ஆனந்தகண்னீர் வடிச்சாங்க.

 வீட்டின் முன்பு சகோதரர்கள்
வீட்டின் முன்பு சகோதரர்கள்
நா.ராஜமுருகன்

அதோடு, 2013-ம் வருஷமே, கரூர் தண்ணீர் பந்தல் அருகே ரூ. 7 லட்சம் மதிப்பில் பிளாட் ஒண்ணு வாங்கினோம். அதன்பிறகு, அண்ணனுக்கு 2016-ம் வருஷம் திருமணம் நடந்துச்சு. 2018-ம் ஆண்டு ஊருக்கு வந்த எனக்கும் நாலு மாசம் முன்புதான் திருமணம் ஆனுச்சு. அதுக்கு முன்பே, `இனி சொந்த மாவட்டத்திலேயே தொழில் பண்ணுவோம்'னு அண்ணனும் நானும் முடிவு பண்ணினோம். `தெரிஞ்ச ஹோட்டல் தொழிலையே பண்ணலாம்'னு நினைச்சப்ப, இங்கே நிறைய ஹோட்டல் இருந்தது. அதனால், `பீட்சா கடை மாதிரி ஆரம்பிக்கலா'ம்னு நினைச்சோம்" என்றார்.

அடுத்து பேசிய, அவரின் சகோதரர் கார்த்திகேயன்,

``காரணம், கரூர்ல ஃபேக்டரி மேடுலதான் பீட்சா கடைகள் இருந்துச்சு. ஹோம் மேடு மாதிரியான பீட்சா கடைகள் இல்லை. அதனால், ஒரு வருஷத்துக்கு முன்னாடி, கரூர் திண்ணப்பா தியேட்டர் பக்கத்தில் நம்பர் 1 ஹாட் பீட்சா என்ற பெயரில் கடையை ஆரம்பிச்சோம். தரமாக பீட்சா தயாரிச்சோம். ஆனாலும், ஆரம்பத்துல பிக்கப் ஆகலை. அதன்பிறகு, ஆன்லைன் மூலமா விளம்பரம், ஆன்லைன் ஆர்டர், டோர் டெலிவரினு டெக்னாலஜி வழிமுறையில் முயற்சி பண்ணினோம். ஆரம்பத்துல, 25 சதவிகிதம் ஆஃபர் கொடுத்தோம். அதன்பிறகு, பிக்கப் ஆச்சு. சொமேட்டோ, ஃப்ளையர்ஈட்ஸ், டெலிவரி ஸ்டார்னு உணவு டெலிவரி கம்பெனிகளுடன் டையப் வச்சோம். அதனால், ரெகுலர் கஸ்டமர்கள் உருவானாங்க. அதனால், படிப்படியா வளர ஆரம்பிச்சோம். இப்போ, ஹோம் டெலிவரி பண்ண இரண்டு பேரை நியமிச்சுருக்கோம்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்
நா.ராஜமுருகன்

அஞ்சு பேர் கடையில் இருக்கிறோம். பீட்சா, பிரைடு ரைஸ், சப்பாத்தி ரோல், பர்கர், சாண்ட்விட்ச், பிரைடு சிக்கன், சிக்கன் லாலிபப், சிக்கன் 65, சிக்கன் மஞ்சூரியன், நூடுல்ஸ், பலூடா, ஐஸ்க்ரீம், மில்க்ஷேக்னு உணவு வகைகளை அதிகப் படுத்தியிருக்கிறோம். இப்போதைக்கு, எல்லா செலவுகளும் போக மாசம் ரூ. 60,000 கையில் நிக்குது. அடுத்தடுத்து, தமிழகத்தின் பல இடங்களிலும் கிளைகளைத் திறக்க யோசனை வச்சுருக்கோம். முதல்கட்டமா, இப்போ கரூர் காந்திகிராமத்தில் முதல் கிளையை ஆரம்பிக்க இருக்கிறோம். எல்லா முயற்சிகளிலும், நானும் தம்பியும் ஒற்றுமையாகவே இருந்து செயல்படுவோம். முயற்சி செஞ்சா இங்கே யாரும் ஜெயிக்கலாம், துரத்தும் வறுமையைத் துரத்தியடிக்கலாம்" என்று கூறி முடித்தார்.

வாழ்த்துகள் சகோதர்களே!.

அடுத்த கட்டுரைக்கு