Published:Updated:

“சோளத்தட்டையோடு சேர்ந்து கருகுறப்ப என்னென்ன நினைச்சீங்களோ?!”

சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
சிதம்பரம்

கரூர் விவசாயியின் கண்ணீர்க் கதை!

“சோளத்தட்டையோடு சேர்ந்து கருகுறப்ப என்னென்ன நினைச்சீங்களோ?!”

கரூர் விவசாயியின் கண்ணீர்க் கதை!

Published:Updated:
சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
சிதம்பரம்
‘‘மனுசனுக்குப் பிரச்னைகள் வரும், போகும். ஆனா, விவசாயி களுக்குக் காலமெல்லாம் வேதனைதான். கட்டையில போகுறவரைக்கும் அல்லாடுற பொழப்புதான். ‘வயல்ல போட்ட செஞ்சோளம் சரியா விளையலையே... வாங்கின கடனை அடைக்க வழியில்லையே’னு புலம்பிக்கிட்டே இருந்தாரு மனுஷன். ‘அதெல்லாம் அடைச்சுறலாம்ங்க. பசங்க இருக்காங்க’னு சொல்லிச் சொல்லி அவரைத் தேத்தினேன். கஷ்டத்தை மறந்து நம்பிக்கையா இருந்த மனுஷனை, இப்படி நெருப்பு வடிவுல வந்த விதி எமன்கிட்ட கொண்டுபோய்ச் சேர்த்துடுச்சே...’’ - தொண்டையை அடைக்கும் துக்கத்தை, `ஓ...’வென்று குரலெடுத்து அழுது தீர்க்கிறார் ஜெயம்மாள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலுள்ள வீரராக்கியம்தான் ஜெயம்மாளின் ஊர். பெரிதாக வசதியில்லை. ஆனாலும், தன்னைக் கலங்கவிடாத கணவர் சிதம்பரம், தங்கமாகத் தாங்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் என்று, ‘வறுமையிலும் செம்மையான வாழ்க்கை’ வாழ்ந்துவந்தவர், கடந்த மூன்று நாள்களாக இடி விழுந்த ஓடாக நொறுங்கிக் கிடக்கிறார். ஜெயம்மாளின் அழுகை கொஞ்சம் குறைந்த நேரத்தில், அவரைத் தேற்றியபடியே பேசினோம். ‘‘இவரோட எனக்கு கல்யாணம் நடந்தப்போ, ஒரு ஓலைக்குடிசை வீடுதான் சொந்தமா இருந்துச்சு. மத்தபடி விவசாயம் பண்ண காகாணிகூட சொந்தமா நிலமில்லை. கூலி வேலைக்குத்தான் போவாரு. சம்பாதிக்கிறதுல ஒத்த ரூபா குறையாம கொண்டாந்து என் கையில கொடுத்துருவாரு. டீத்தண்ணி குடிப்பாரு. இல்லைன்னா, நீச்சத்தண்ணியைக் கேட்டு வாங்கிக் குடிப்பாரு. மத்தபடி எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. என்னை அதட்டக்கூட மாட்டாரு!

‘இப்படியொரு தங்கமான புருஷனைக் கொடுத்தியே, உனக்குக் கோடி புண்ணியம்’னு குலசாமிக்கு மனசார நன்றி சொல்லிக்கிட்டே இருப்பேன். எங்களுக்கு முனீஸ்வரன், தினேஷ்குமார்னு ரெண்டு பசங்க. ‘அஞ்சுக்கும் பத்துக்கும் தவிக்கிற இந்த ஈனங்கெட்ட பொழப்பு நம்மோடவே போகட்டும். பசங்களை நல்லா படிக்கவெச்சு, பெரிய வேலைக்கு அனுப்புவோம்’னு சொல்லுவாரு. சொன்னதைப் போலவே, தன் உசுரும் உடம்பும் தேயுற அளவுக்கு உழைச்சு, அவங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்கவெச்சாரு. இப்போகூட, எங்களுக்குச் சொந்தமா காகாணி விவசாய பூமி இல்லை. ஆனாலும், தான் சொன்னபடி மூத்தவனை அரசுப் பள்ளி வாத்தியாராவும், இளையவனை தனியார் கல்லூரி வாத்தியாராவும் ஆக்கினாரு. ரெண்டு பேருக்கும் நல்ல பொண்ணுங்களாப் பார்த்து கல்யாணம் பண்ணிவெச்சாரு. இப்போ ராசா மாதிரி கால்நீட்டி உக்கார்ந்துக்கிட்டு சாப்பிடுற நேரத்துல, ‘வயலே கதி’னு கெடந்து, எங்களைத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டாரே...” மயங்கிச் சரிகிறார். பெண்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, மயக்கத்தைத் தெளியவைக்க முயல்கிறார்கள்.

ஜெயம்மாள்  - தினேஷ்குமார்
ஜெயம்மாள் - தினேஷ்குமார்

தந்தையை இழந்த சோகம் குறையாமல் நின்றிருந்த சிதம்பரத்தின் இளைய மகன் தினேஷ்குமாரிடம் பேசினோம். ‘‘எங்க குடும்பம் இருந்த இருப்புக்கு, நாங்க எட்டாவதைக்கூட தாண்ட முடியாதுனு நினைச்சோம். ஆனா எங்கப்பா எங்களை நல்லா படிக்கவெச்சார். அதுக்காக அவர் பட்ட கஷ்டத்தையெல்லாம் சொன்னா, உங்க மனசு கலங்கிப்போயிரும். இப்போ நான் தனியார் கல்லூரியில் பேராசிரியரா இருக்கேன். அண்ணன் அரசுப் பள்ளி ஆசிரியரா இருக்கார். அப்பாவுக்குக் கனவெல்லாம், ‘சின்னதா ஒரு வீடு கட்டணும். ஒரு காணியாச்சும் சொந்தமா நிலம் வாங்கணும்கிறதுதான். அண்ணன் கடன் வாங்கி, ஏழு வருஷத்துக்கு முன்னாடி இந்தச் சின்னக் கல் வீட்டைக் கட்டினார். ஆனா, அப்பா நினைச்ச சொந்த விவசாய நிலம்கிற கனவை இதுவரை நிறைவேத்த முடியலை. `இன்னும் ரெண்டொரு வருஷத்துல அப்போவோட அந்தக் கனவையும் நிறைவேத்தணும்’னு நினைச்சுக்கிட்டிருந்தோம். ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு’’ என்கிறபோதே அவர் குரல் உடைகிறது.

தன்னைத் தேற்றிக்கொண்டு தொடர்ந்தார், ‘‘அப்பாவுக்கு, ‘காலமெல்லாம் கூலி வேலைக்குப் போறோமே... சொந்த நிலம் இல்லையே’னு அங்கலாய்ப்பு இருந்துக்கிட்டே இருந்துச்சு. அதனால ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, பக்கத்துல நத்தமேட்டுல இந்த 70 சென்ட் நிலத்தை மூணு வருஷ ஒத்திக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து வெள்ளாமை பண்ண வாங்கினார். முதல் போகம், நெல் போட்டார். ஒரு ரூபாகூட லாபம் இல்லைன்னாலும், நட்டமில்லை. ஆனா, கடந்த போகம் போட்ட நெல், அப்பா உழைப்பை ஏமாத்திடுச்சு. 45,000 ரூபாய் வரை செலவு பண்ணியிருந்தார். ஆனா, 25,000 ரூபாய்க்குத்தான் நெல்லை விக்க முடிஞ்சுது. 20,000 ரூபா வரை நட்டமாச்சு. அதுக்குப் பிறகு 25,000 ரூபா வரை கடன் வாங்கி, கையில இருந்த 15,000 ரூபாயையும் சேர்த்து 40,000 ரூபா வரை செலவு பண்ணி செஞ்சோளத்தைப் போட்டிருந்தார். சோளக்கதிர்கள் பிஞ்சுப் பிடிச்சு வர்ற நேரத்துல மழை கடுமையா பேஞ்சிருச்சு. சோளக் கதிர்களெல்லாம் கறுப்பா மாறிடுச்சு. சோளத்தட்டை களும் கறுப்பாயிடுச்சு. தலையில இடி விழுந்த மாதிரி நெஞ்சைப் பிடிச்சுக் கிட்டு அப்பா உட்கார்ந்துட்டார். ‘ஏற்கெனவே, இந்த வயலை ஒத்திக்குப் பிடிக்க வாங்கின ஒரு லட்சம் ரூபா கடன், இப்போ சோளம் போட வாங்கின 25,000 ரூபாயையும் எப்படிச் சம்பாதிப்பேன்... உங்க பேச்சைக் கேட்காம சுயமா உழைக்கணும்னு நினைச்சு இப்படிப் பண்ணிட்டேனே’னு மருகி நின்னார். நானும் எங்க அண்ணனும், ‘எங்களுக்காகக் காலமெல்லாம் உழைச்ச உங்களைவிட, இந்தப் பணம் காசு பெரிசில்லப்பா. நீங்க தைரியமா இருங்க’னு சொன்னோம். கொஞ்சம் மனம் தெளிஞ்சு நடமாடினார்.

செஞ்சோளமெல்லாம் கறுப்பா போனதால, 6,000 வரை விக்க வேண்டிய 100 கிலோ சோளம், வெறும் மூவாயிரத்துக்குத்தான் விலை போச்சு. கறுப்பா போன சோளத்தட்டைகளையும் வாங்க நாதியில்லை. அதனால, சோளத்தை அறுவடை பண்ணாம அதைக் கொளுத்திட்டு, வேற வெள்ளாமை போட நினைச்சார். அதுக்காகத்தான் அன்னைக்கு கையில சோத்து வாளியோட வயலுக்குப் போனார். எல்லாத்தையும் அறுத்து, ஒரு இடத்துல குவிச்சுட்டு, 11 மணிபோல அதுக்குத் தீ வெச்சிருக்கார். அந்தத் தீ எதிர்பாராத வகையில ஆடிக்காத்துல பறந்து, பக்கத்துல உள்ள சோளக்காட்டுல பட்டு எரிய ஆரம்பிச்சிருக்கு. ‘ஐயோ... அசலாரு வெள்ளாமையில தீ பரவிடுச்சே’னு பதறிப்போய் அணைக்க ஓடியிருக்கார். அப்போ சோளத்தட்டையில கால் இடறி கீழே விழுந்திருக்கார். தீயிலருந்து கரும்புகை அதிகமாகக் கிளம்ப, மூர்ச்சை யாகிட்டார். ஆக்சிஜன் கிடைக்காம ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போயிருக்கார். மளமளனு எரிஞ்ச தீ, அவரையும் சேர்த்து எரிச்சிடுச்சு!

சிதம்பரம்
சிதம்பரம்

சோளத்தட்டையை இப்படிக் கொளுத்துறது வழக்கம்தான்கிறதால தூரத்து வயல்ல நின்ன விவசாயி களுக்கு நடந்தது எதுவும் தெரியலை. 12 மணிபோலத்தான் எங்க வயல் பக்கம் வந்த ஒருத்தர், எங்கப்பா எரிஞ்சு கிடந்ததைப் பார்த்துட்டு எங்களுக்குத் தகவல் கொடுத்தார். பதறியடிச்சுக்கிட்டு போய்ப் பார்த்தோம். எல்லாம் முடிஞ்சிருந்தது. இன்னும் 15 வருஷம் உயிரோடு இருந்திருப்பார். உழைப்பு உழைப்புனு கடைசிவரைக்கும் வாழ்ந்த மனுசனுக்கு இப்படியா சாவு வரணும்?’’ குரல் உடைந்து அழுகிறார்.

பக்கத்து வயல்காரரான சின்னசாமி வீட்டில் பேசினோம். ‘‘எங்க வயல்ல போட்டிருந்த சோளமும் கறுப்பா போயிடுச்சு. நாங்களும் கொளுத்தலாம்னு தான் இருந்தோம். ‘எரியட்டும்’னு விட்டிருக்கலாம். நாங்க ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டோம். அவரைவிட இந்தச் சோள வெள்ளாமையா எங்களுக்குப் பெரிசு? ஈ, எறும்புக்கும் கெடுதல் நினைக்காத சிதம்பரத்துக்கு இப்படிச் சாவு வந்திருக்கக் கூடாது” - தங்கள் பங்குக்கு வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

‘‘சோளத்தட்டையோடு சேர்ந்து கருகுறப்ப என்னென்ன நினைச்சாரோ...” என்று அழுதார் அவரின் மனைவி. விளையாத வயலில் உரமாகிடலாம்னு நினைச்சிருப்பாரோ?!