Published:Updated:

`8 வருஷம் கழிச்சு, வெளி உலகத்தைப் பாக்கக் குடுத்து வச்சிருக்கு!' - உதவிகளால் நெகிழ்ந்த லோகநாதன்

வெளிஉலகைப் பார்க்கும் லோகநாதன்
வெளிஉலகைப் பார்க்கும் லோகநாதன் ( நா.ராஜமுருகன் )

8 வருடங்களாகத் தன்னை சீண்டகூட நாதியில்லை என்று கலங்கிக் கிடந்த லோகநாதன் முகத்தில், `தனக்காக அரசே உதவ வந்திருக்கிறதே' என்ற மகிழ்ச்சிப் பிரவாகம். அதோடு, `லோகநாதனுக்கு நல்லது நடக்கப் போவுதாம்' என்று வீரமாபாளையத்தைச் சேர்ந்த நல்ல மனிதர்கள் சிலரும் கூடினார்கள்.

மின்சாரம் தாக்கி கால்கள் இரண்டும் செயலிழந்து, எட்டு வருடங்களாக கட்டிலில் படுத்த படுக்கையாகக் கிடந்த லோகநாதனைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரை, பலரது இதயங்களிலும் ஈரம் சுரக்கவைத்து, எண்ணற்ற உதவிகளை பெற்றுத் தந்திருக்கிறது.

லோகநாதனுக்கு உதவிகள் வழங்கும் செண்பகவள்ளி
லோகநாதனுக்கு உதவிகள் வழங்கும் செண்பகவள்ளி
நா.ராஜமுருகன்

அரசும் சில தனியார் அமைப்புகளும் உதவிக்கு வர, உறவுகளால் நொந்துபோயிருந்த லோகநாதனின் இதயத்தில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. அரசு சார்பில் வழங்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் வந்த லோகநாதனின் முகத்தில் அத்தனை வெளிச்சம்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள வீரமாபாளையத்தைச் சேர்ந்தவர், லோகநாதன். பக்கத்து வீட்டு மனிதருக்கு உதவி செய்யப்போய், மின்சாரம் தாக்கி, இடுப்புக்கு கீழ் முழுமையாகச் செயலிழந்த நிலைக்குப் போனார். மரக்கிளையை வெட்டச் சொன்னவர், இரவோடு இரவாக வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார். உறவுகளும் கைவிட்டனர்.

லோகநாதனின் பரிதாப நிலை
லோகநாதனின் பரிதாப நிலை
நா.ராஜமுருகன்

தனிமரமானார் லோகநாதன். சுவரற்ற ஒரு வீட்டில் தனியாக கட்டிலில் படுத்தபடியே தன் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு, நம்பிக்கை குலையாமல் வாழ்ந்துவந்தார்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த சில நல்ல மனிதர்கள் லோகநாதனுக்கு உணவுப் பொருள்களை வழங்கி, அனுசரணையாக இருந்தார்கள். இந்தச் சூழலில்தான், கடந்த ஜூன் 1-ம் தேதி விகடனில் அவரது துயரங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரை வெளிவந்தது.

`உறவுகள் உதாசீனப்படுத்துறதுதான் வாழணுங்கிற ஆசையைத் தூண்டுது’ - தன்னம்பிக்கை மனிதர் லோகநாதன்!
லோகநாதன் தற்போது வசிக்கும் இடம்
லோகநாதன் தற்போது வசிக்கும் இடம்
நா.ராஜமுருகன்

கட்டுரையை வாசித்த பலரும் லோகநாதனுக்கு உதவிகள் செய்ய முன்வந்தார்கள். கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளியும் நம்மைத் தொடர்புகொண்டு லோகநாதன் பற்றி விசாரித்தார். பிறகு, ``அரசு தரப்பில் லோகநாதனுக்கு சில உதவிகளை வழங்க இருக்கிறோம். நீங்களும் வர வாய்ப்பிருக்குமா?" என்று அழைப்பு விடுத்தார். தட்டாமல் கிளம்பினோம்.

எட்டு வருடங்களாகத் தன்னை சீண்டக்கூட நாதி இல்லை என்று கலங்கிக்கிடந்த லோகநாதன் முகத்தில், `தனக்காக அரசே உதவ வந்திருக்கிறதே' என்ற நெகிழ்ச்சி! அதோடு, `லோகநாதனுக்கு நல்லது நடக்கப் போவுதாம்' என்று அவர்மீது இத்தனை நாள்களும் கருணைகாட்டிய, வீரமாபாளையத்தைச் சேர்ந்த நல்ல மனிதர்கள் சிலரும் லோகநாதன் வீட்டருகே கூடினார்கள்.

லோகநாதனுக்கு உதவிகள் வழங்கும் செண்பகவள்ளி
லோகநாதனுக்கு உதவிகள் வழங்கும் செண்பகவள்ளி
நா.ராஜமுருகன்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதா மாதம் அரசு வழங்கும் 1,500 ரூபாய் உதவித்தொகைக்கான ஆர்டரை லோகநாதன் கையில் வைத்தார், செண்பகவள்ளி. கூடவே 35 கிலோ அரிசியும் வழங்கினார். தவிர, இயற்கை உபாதைகள் கழிக்க தேவைப்படும் டியூப்புகள், காட்டன், பேசன், சிறுநீர் சேகரிக்கும் பை, கையுறை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் வழங்கினார் செண்பகவள்ளி.

இவை தவிர, இயற்கை உபாதைகள் கழிக்கும் வசதியுடன்கூடிய சக்கர நாற்காலியையும் வழங்கினார். எல்லோரும் சேர்ந்து லோகநாதனை அதில் அமரவைத்தார்கள். வீட்டைவிட்டு லோகநாதனை வெளியே கொண்டுவந்தார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு திறந்தவெளி காற்றைச் சுவாசித்த லோகநாதனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

தனது சொந்த நிலத்தில் வீடு கட்டி வாழ ஆசைப்படுவதாக லோகநாதன் கட்டுரையில் தெரிவித்திருந்தார். கரூரைச் சேர்ந்த ஒன்ஸ்டெப் அறக்கட்டளை உள்ளிட்ட 6 அமைப்புகள் அதற்கு உதவ முன்வந்துள்ளன.

லோகநாதனுக்கு பணஉதவி செய்யும் கந்தசாமி
லோகநாதனுக்கு பணஉதவி செய்யும் கந்தசாமி
நா.ராஜமுருகன்

புதிய வீட்டுக்கான பூஜையும் அன்றைய தினமே போடப்பட்டது. கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளியே பூஜையைத் தொடங்கிவைத்தார். வீரமாபாளையத்தை உள்ளடக்கிய வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி, 5,000 ரூபாயை லோகநாதனுக்கு வழங்கினார். அதோடு, லோகநாதனின் புதிய இல்லத்துக்கு ஊராட்சி சார்பில் தண்ணீர் இணைப்பை ஏற்படுத்தித் தருவதாக உத்தரவாதம் கொடுத்தார், கந்தசாமி.

கிடைத்த உதவிகளால் நெகிழ்ந்து போயிருந்த லோகநாதன் நம்மிடம் பேசினார்.

``நான் இந்த நிலைக்கு வர காரணமான அந்த மனிதர் எங்கோ ஓடிட்டார். எனக்கு எந்த உதவியும் செய்யலே. உறவுக்காரங்களும் புறந்தள்ளிட்டாங்க. வாழ்க்கையில் படாத கஷ்டம் இல்லை. என் சொந்த இடத்தில், ஒரு ஓலைக்குடிசை கட்டமாட்டோமானு ஏங்கிப் புழுங்கியிருக்கேன். விகடன் மூலமா நிறைய நல்ல மனிதர்கள் ஆதரவு கிடைச்சிருக்கு. `சொந்த வீடு' கட்டணும்ங்கிற கனவும் நிறைவேறப் போகுது. வாழ்ந்துடலாம்ங்கிற நம்பிக்கை வருது...

சக்கரநாற்காலியில் அமரவைக்கப்படும் லோகநாதன்
சக்கரநாற்காலியில் அமரவைக்கப்படும் லோகநாதன்
நா.ராஜமுருகன்

எல்லாத்தையும்விட, எட்டு வருஷம் கழிச்சு திரும்பவும் வெளியுலகத்தைப் பாத்திருக்கேன். என்னைப் பத்தி கேள்விப்பட்டவுடனே வந்து உதவி செய்த அரசாங்கத்தையும், அமைப்புகளையும் காலம் முழுக்க மறக்க மாட்டேன்..." என்றார் நா தழுதழுக்க!

``லோகநாதனுக்கு உதவ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த விகடனுக்கு நன்றி. 6 அமைப்புகள் ஒருங்கிணைஞ்சு 2 லட்சம் செலவுல லோகநாதனுக்கு வீடு கட்டித் தரப்போறோம். ஹாலோபிளாக் கற்களை வைத்து, இரண்டு அறைகள், ஒரு வெஸ்டர்ன் டாய்லெட், லோகநாதன் சமைக்கும் அளவுக்கான பிரத்யேக சமையலறை எல்லாம் அதுல இருக்கும்.

லோகநாதன் இடத்தில் புதுவீடு கட்ட பூமி பூஜை
லோகநாதன் இடத்தில் புதுவீடு கட்ட பூமி பூஜை
நா.ராஜமுருகன்

மேற்கூரையா கூலிங் சீட் போடப்போறோம். அதிகபட்சம் ஒரு மாசத்துல வீட்டு வேலை முடிஞ்சுரும். அவரோட முதுகுல இருந்து வெளியேவந்த ஸ்டீல் பிளேட்டை அகற்றிட்டு, புதுசா ஸ்டீல் பிளேட் வைக்க மருத்துவர்களிடம் ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்கிறோம். கடைசிவரைக்கும் லோகநாதனுக்கு உதவியா இருப்போம்" என்றார் ஒன்ஸ்டெப் அறக்கட்டளையைச் சேர்ந்த ரமேஷ்குமார்.

லோகநாதன் வாழ்க்கையில் வசந்தம் வீசட்டும்!

அடுத்த கட்டுரைக்கு