Published:Updated:

கடைக்கோடி கிராமம்: அரசின் தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவூர் கிராமங்கள்!

கடைக்கோடி கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடைக்கோடி கிராமம்

17 கி.மீ தொலைவில் தாலுகா அலுவலகம்... 20 கி.மீ தொலைவில் அரசு மருத்துவமனை...

‘‘எங்க கடவூருக்கு வந்து பாருங்க... ஒரேயொரு ஆரம்ப சுகாதார நிலையம் தவிர்த்து ஒத்தை கவர்மென்ட் ஆபீஸைப் பார்க்க முடியாது. எதுன்னாலும் பத்து, இருபது கிலோமீட்டர் தூரம் ஓடணும். கடவூரும், அதைச் சுத்தியுள்ள 34 கிராமங்களும் தனித்தனி தீவுகள்போல, சீந்துவாரில்லாம கிடக்கு’’ என்று புலம்புகிறார்கள் கடவூர் மக்கள்.

கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், கடைக்கோடியில் அமைந்திருக்கும் கடவூர் மற்றும் அதைத் தலைமையகமாகக்கொண்ட 34 கிராமங்களைச் சுற்றி, இயற்கையாக வட்ட வடிவில் மலைகள் அமைந்திருப்பதால், இந்தக் கிராமங்களுக்குச் சென்றுவர மூன்றே வழிகள் மட்டுமே உள்ளன. சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் இந்த கிராமங்களில் வசித்துவரும் நிலையில் மக்கள், அரசு தொடர்பான எந்தவொரு தேவைக்கும் இந்த மலைகளுக்கு அப்பால் இருக்கும் ஊர்களை மட்டுமே நம்பியிருக்கும் அவலம் நிலவுகிறது. இந்தக் கிராமங்களுக்கு நேரில் விசிட் அடித்தோம்.

கடைக்கோடி கிராமம்: அரசின் தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவூர் கிராமங்கள்!

தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி நம்மைப் பார்த்ததுமே கடவூரின் குறைகளை நம்மிடம் மாய்ந்து மாய்ந்து கொட்டத் தொடங்கினார்... ‘‘இங்கே இருக்குற 34 கிராமங்கள்ல 20 கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது... சரியான சாலைகள் கிடையாது. மனுஷன் செத்தா புதைக்கச் சுடுகாடுகூட இல்லைன்னா பார்த்துக்கோங்க. பல ஊர்களுக்கு ஒத்தையடிப் பாதை, முள்காடுகளைக் கடந்துதான் நடைப்பயணமா போகணும். இங்குள்ள பல கிராமப் பள்ளிகள்ல கழிப்பறை இல்லை. கிராம மக்களும் மாணவர்களும் திறந்தவெளியிலதான் இயற்கை உபாதையைக் கழிக்குறாங்க.

கடைக்கோடி கிராமம்: அரசின் தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவூர் கிராமங்கள்!

கடவூர்ல இருக்கவேண்டிய ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், தாலுகா அலுவலகமெல்லாம் 17 கிலோமீட்டர் தூரத்துல மலைகளுக்கு அப்பால இருக்கும் தரகம்பட்டியில இருக்குதுங்க. கடவூர்ல ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும்தான் இயங்குது. கடவூர் தாலுகாவுக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை, கடவூர்ல இருந்து 20 கி.மீ தூரத்துல இருக்குற மயிலம்பட்டியில இருக்கு. கடவூருக்கு அறிவிக்கப்பட்ட அரசு பாலிடெக்னிக், 30 கிலோமீட்டர் தூரத்துல இருக்கும் காணியாளம்பட்டியில இருக்கு. அரசு கலைக் கல்லூரியும் தரகம்பட்டியிலதான் இருக்கு. காவல் நிலையமும் மலைகளுக்கு வெளியே 9 கிலோமீட்டர் தூரத்துல இருக்கும் பாலவிடுதியிலதான் அமைஞ்சுருக்கு.

கடைக்கோடி கிராமம்: அரசின் தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவூர் கிராமங்கள்!

கடந்த 50 வருஷத்துக்கு முன்னாடி கடவூர் ஒன்றிய அலுவலகத்தை தரகம்பட்டியில அமைச்சதால, தொடர்ந்து கடவூர் ஒன்றியத்துக்கு வந்த எல்லா அரசு அலுவலகங்களையும் அங்கேயே அமைச்சுட்டாங்க. ‘ஏதாச்சும் ஒரு அரசு அலுவலகத்தை கடவூர்ல அமைச்சாக்கூட, அரசு அதிகாரிகள் இங்கே அடிக்கடி வருவாங்க. அவங்க பார்வையில பட்டு, எங்க கிராமங்களோட பிரச்னைகளுக்கு விடிவு கிடைக்கும்’னு நாங்களும் எல்லா அதிகார மட்டத்துலயும் கெஞ்சிப் பார்த்துட்டோம். ஒண்ணும் நடக்கலை’’ என்றார் விரக்தியாக.

பா.ஜ.க-வின் கடவூர் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் வாசு நம்மிடம், ‘‘இங்கு விவசாயம்தான் பிரதானம். கடந்த 20 வருஷமா சரியான மழை இல்லாததால, 1,100 அடிக்குக் கீழே போர் போட்டாலும் தண்ணி கிடைக்கலை. வெள்ளாம செஞ்ச சம்சாரிங்க குடும்பமெல்லாம் 300, 400 ரூபா தினக்கூலிக்கு கரூர், திண்டுக்கல்னு டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிகளுக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. கிராமங்களைச் சுத்தியுள்ள மலைகள்ல பெய்யும் மழைத்தண்ணி ஓடைகளா வந்து, குளம், குட்டைன்னு தேங்கும். அதை வெச்சு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திக்குவோம். ஆனா, அந்த நீர்நிலைகளும் பல வருஷமா தூர்வாரப்படாம, தூர்ந்துபோயிருச்சு.

மலைகள்ல பெய்யும் மழைநீரைத் தேக்க, கிழக்குப் பக்கமா இருக்குற முகவனூர்ல பொன்னணியாறு அணையைக் கட்டுனாங்க. மழை பெஞ்சா அந்தத் தண்ணியெல்லாம் அணைக்குப் போயிரும். பூகோள அமைப்புப்படி அந்த அணையோட சொட்டுநீரைக்கூட நாங்க பயன்படுத்த முடியாது. அதனால, மழைத்தண்ணி வரும் ஓடைகளின் குறுக்கே சிறு சிறு தடுப்பணைகளைக் கட்டணும்னு 20 வருஷமா மனு கொடுக்குறோம். யாரும் கண்டுக்கலை. இதனால, குடிநீருக்கும் அல்லாடுறோம். கடந்த 1972-ம் வருஷம் வரைக்கும் சட்டமன்றத் தொகுதியா இருந்தது கடவூர். தொகுதி மறுசீரமைப்புல இந்தத் தொகுதியைக் கலைச்சுட்டு, கிருஷ்ணராயபுரத்தைத் தொகுதியா அறிவிச்சுட்டாங்க. சட்டமன்றத் தொகுதியா இருந்தாலாவது எங்க ஊருக்கு ஏதாச்சும் நல்லது நடந்திருக்கும். எதுக்குமே வழியில்லாம போச்சு’’ என்றார் பரிதாபமாக!

பெரியசாமி,  வாசு
பெரியசாமி, வாசு

கடவூர் பகுதி மக்களின் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். ‘‘நான் இங்கு பணிக்கு வந்ததுமே முதல் வேலையாக, கடவூர் பகுதிக்கு விசிட் அடித்தேன். கடவூர் கிராமங்களில் சிறு சிறு தடுப்பணைகள் கட்டவிருக்கிறோம். அரசு அலுவலகங்களை மாற்றுவது பற்றி, மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க முடியாது. மாவட்ட நிர்வாகத்தால் முடிந்த அளவுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

`அதிகாரப்பரவல் என்பது கீழிலிருந்து மேலே வர வேண்டும்’ என்றார் காந்தி... அவரது சித்தாந்தத்தைப் பின்பற்றியிருந்தால், கடைக்கோடி கிராமங்கள் இப்படிச் சீரழிந்துபோயிருக்காது!