Published:Updated:

`நானும் போலீஸ்தான்; என்மேல கைவைக்க முடியுமா?!' - போதையுடன் காரை ரோட்டில் நிறுத்தி வம்பிழுத்த காவலர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தகராறில் ஈடுப்பட்ட காவலர் லோகநாதன்
தகராறில் ஈடுப்பட்ட காவலர் லோகநாதன்

மது போதையில் இருந்த அந்த நபர், 'நானும் போலீஸ்தான். முடிந்தால் அடித்துப் பார்க்கவும்' என சவால்விட்டார். அதோடு, தனது உடம்பில் அணிந்திருந்த சட்டையை அகற்றி சாலையில் வீசி, அரை நிர்வாணமாக பொதுமக்கள் முன்னிலையில் முக்கியச் சாலையில் தகராறில் ஈடுபட்டார்.

தலைகேறிய மதுபோதையில் தனது காரை நடுரோட்டில் நிறுத்தி, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்த காவலர், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 'நான் யார் தெரியுமா?' என்றதோடு, தனது மேல்சட்டையைக் கழற்றி, அரை நிர்வாணமாக அலப்பறை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தகராறில் ஈடுப்பட்ட காவலர் லோகநாதன்
தகராறில் ஈடுப்பட்ட காவலர் லோகநாதன்

கரூர், தான்தோன்றிமலை அருகே கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. அந்தச் சாலையில் 8 -ம் தேதி மாலை 5 மணி அளவில், சிவப்பு நிற கார் ஒன்றில் வந்த நபரொருவர் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டுவந்தார்.

 பண மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

இது குறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், போதை ஆசாமியை சாலையிலிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, அவர்களையும் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியும், பணியிலிருந்த போலீஸாரைத் தாக்கியும் தகராறில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் மது போதையிலிருந்த அந்த நபர், 'நானும் போலீஸ்தான். முடிந்தால் அடித்துப் பார்க்கவும்' என சவால்விட்டார். அதோடு, தனது உடம்பில் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி சாலையில் வீசி, அரை நிர்வாணமாக பொதுமக்கள் முன்னிலையில் முக்கியச் சாலையில் தகராறில் ஈடுபட்டார்.

லோகநாதன் வந்த கார்
லோகநாதன் வந்த கார்

அங்கிருந்த பொதுமக்கள் பலர் அதைக் கண்டு முகம் சுளித்தனர். அதோடு, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, 'கண்ணியமிக்க காவல்துறைக்கு இது போன்ற காவலர்களால் களங்கம் ஏற்பட்டுவருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளும் வரை அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரவும்' எனவும் பதிவிட்டனர். இதனால், இந்தக் காணொலி கரூர் மாவட்டம் முழுக்கச் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதற்கிடையில், இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, தகராறில் ஈடுபட்ட மது போதை ஆசாமி, கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றிவருவதும், உரிய மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த நிலையில், மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்ட அந்தக் காவலர் லோகநாதனை, கரூர் மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு