Published:Updated:

கைப்புள்ள, புல்லட் பாண்டி கெட்டப்!- வடிவேல் பாணியில் கரூர் இளைஞரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்

`வின்னர்' படத்தில் வடிவேல் இருப்பதுபோல ஒரு வண்டியையும், அதைத் தள்ள இரண்டு கையாட்களையும் ஏற்பாடு செய்திருந்தனர். அச்சு அசலாக நிஜ கைப்புள்ள வடிவேலுவை கண்முன் நிறுத்திய பிரபு, ஹெல்மெட்; சீட் பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம், விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

கைப்புள்ள வடிவேல் கெட்டப்பில் பிரபு
கைப்புள்ள வடிவேல் கெட்டப்பில் பிரபு ( நா.ராஜமுருகன் )

மீம்ஸ்கள் தொடங்கி, முகநூலில் கருத்து சொல்வது வரை கைகொடுக்கும் வடிவேலு கெட்டப்புகளை வைத்து கரூர் போலீஸார், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வரும் வானக ஓட்டிகளிடம் நூதன முறையில் பிரசாரம் செய்தது, பார்ப்பவர்களைக் கவர்ந்தது.

புல்லட் பாண்டி வடிவேல் கெட்டப்பில் பிரபு
புல்லட் பாண்டி வடிவேல் கெட்டப்பில் பிரபு
நா.ராஜமுருகன்
Vikatan

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பையொட்டி, நாடு முழுவதும் ஹெல்மெட் அணிய வலியுறுத்தியும், கார் ஓட்டுபவர்களை சீட் பெல்ட் அணிய வலியுறுத்தியும், காவல்துறையினர் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். சாலை விதிகளை மீறுபவர்கள்மீது கடுமையான அபராதமும் விதிக்கப்படுகிறது. அந்த வகையில், கரூர் நகர காவல் நிலைய போலீஸாரும், போக்குவரத்துப் பிரிவு போலீஸாரும் வடிவேல் கெட்டப்புகளைப் போடவைத்து, அவர்கள் மூலம் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது பற்றியும், காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணவு ஏற்படுத்தியது ரசிக்கும்படியாக இருந்தது.

எமன் கெட்டப்பில் பிரபு
எமன் கெட்டப்பில் பிரபு
நா.ராஜமுருகன்

கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் மாரிமுத்து ஆகிய மூன்றுபேரும் சேர்ந்த இந்த வித்தியாசமான முயற்சியை எடுத்தனர். ஹோட்டல்களில் மாஸ்டராகப் பணிபுரியும் பிரபு மற்றும் கார்த்திகேயன் என்ற இரண்டு இளைஞர்களை வைத்துதான் இந்த முயற்சியை எடுத்தனர். இதில், வடிவேல் கெட்டப்புகளில் வாகன ஓட்டிகளிடம் பிரசாரம் செய்தது பிரபுதான்.

கடந்த ஒரு வார காலமாகவே இப்படி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்கள். முதல் நிகழ்ச்சியாக, சில தினங்களுக்கு முன்பு கரூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள ரவுண்டானா அருகே, தாம்பூலம் நிறைய லட்டுகளோடு போலீஸார் ஆஜராகினர். அப்போது, அங்கே இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களையும், கார்களில் சீட் பெல்ட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளையும் பாராட்டியதோடு, அவர்களுக்கு லட்டு கொடுத்து மகிழ்வித்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம், விழிப்புணர்வு நோட்டீஸ்களைக் கொடுத்து, 'நாளை முதல் கண்டிப்பாக ஹெல்மெட்; சீட் பெல்ட் போட வேண்டும். இல்லைனா, அபராதம்தான்' என்று கூறி அனுப்பிவைத்தனர். அதற்கு மறுநாள், பிரபுவை எமன் வேடம் போடவைத்து, கைகளில் பாசக்கயிற்றைக் கொடுத்து, அதே ரவுண்டானா பகுதியில் போலீஸார் நிறுத்தினர்.

புல்லட் பாண்டி வடிவேல் கெட்டப்பில் பிரபு
புல்லட் பாண்டி வடிவேல் கெட்டப்பில் பிரபு
நா.ராஜமுருகன்

ஹெல்மெட், சீட் பெல்ட் போடாமல் வரும் வாகன ஓட்டிகளை மறித்து, அவர்கள்மீது எமன் வேடத்தில் இருந்த பிரபு, பாசக்கயிற்றை வீசினார். ஜெர்க்கான வாகன ஓட்டிகளிடம், விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி, அறிவுரை வழங்கினார் எமன். மறுநாள், போலீஸார் பிரபுவை வடிவேலுவின் எவர்கிரீன் கெட்டப்பான `வின்னர்' படத்தில் வரும் கைப்புள்ள கெட்டப்பில் கொண்டுவந்து நிறுத்தினர். அவருக்கு `வின்னர்' படத்தில் வடிவேல் இருப்பதுபோல் ஒரு வண்டியையும், அதைத் தள்ள இரண்டு கையாட்களையும் ஏற்பாடுசெய்திருந்தனர்.

நிஜ கைப்புள்ள வடிவேலுவை கண்முன் நிறுத்திய பிரபு, ஹெல்மெட்; சீட் பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம், விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். அது, நல்ல ரீச் ஆனது. அதேபோல், ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொண்ட வடிவேல், ஸாரி பிரபு இன்று, 'கோயில்' படத்தில் வடிவேல் போட்ட புல்லட் பாண்டி கேரக்டருக்குள் தன்னை வார்த்துக்கொண்டு வக்கனையாக வந்து நின்றார். அந்தப் படத்தில் வடிவேல் தன்னை மாடு முட்டியதால், கூடையை உடையாக உடுத்தியிருப்பார். அந்த கெட்டப்பில் தனக்கு உதவியாளராக கார்த்திகேயனைச் சேர்த்துக்கொண்டு, அதே ரவுண்டானா பகுதியில் ஆஜரானார்.

உதவி ஆய்வாளர் பிரபாகரனோடு பிரபு
உதவி ஆய்வாளர் பிரபாகரனோடு பிரபு
நா.ராஜமுருகன்

ஹெல்மெட் ;சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகளிடம், 'நீங்க தொடர்ந்து இப்படி அணியாமல் வந்தால், உங்களுக்கு நடக்ககூடாதது நடந்து, என்னைப்போல ஆயிருவீங்க. அதனால, நாளையில் இருந்து கண்டிப்பா இருசக்கர வாகனங்கள்ல வருபவர்கள் ஹெல்மெட் அணிஞ்சுகிட்டும், கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிஞ்சுகிட்டும் வரணும்' என்றதோடு, வாகன ஓட்டிகள் கடைபிடிக்கவேண்டிய 27 விதிமுறைகள் அடங்கிய நோட்டீஸை அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கரூர் போலீஸாரின் இந்த வித்தியாசமான முயற்சியைப் பார்த்து ரசித்து சிரித்ததோடு, பாராட்டிவிட்டும் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் முக்கிய நபரான, கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரனிடம் பேசினோம். "தொடர்ந்து பல முயற்சிகளை ஒரு மாத காலமாக செய்துகிட்டு வர்றோம். அதனால் கரூர்வாசிகள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டார்கள். 70 சதவிகித வாகன ஓட்டிகள், முறையாக விதிமுறைகளைக் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 30 சதவிகிதம் பேர் இன்னமும் மாறலை. அவங்களையும் ஹெல்மெட் போடவைப்பது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்கவைத்து, கரூர் மாவட்டத்தில் அனைவரையும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வைக்கத்தான், வித்தியாசமான வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுபண்ணினோம்.

பிரபாகரன் (உதவி ஆய்வாளர்)
பிரபாகரன் (உதவி ஆய்வாளர்)
நா.ராஜமுருகன்

அந்த வகையில், வடிவேல் படங்களில் பயன்படுத்திய பல கெட்டப்புகளில் பிரபுவை நடிக்கவைத்து, வித்தியாசமான முறையில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறோம். அது நல்லா ரீச் ஆகுது. 'உங்களுக்காக நான் மாறலை; என் தலைவன் வடிவேலுக்காக சாலைவிதிகளை கடைபிடிக்கிறேன்'னு பலபேர் மாறுறாங்க. எது எப்படியோ, அனைவரும் சுகமான பயணம் மெற்கொள்ள ஏதுவாக, சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களோட குறிக்கோள்" என்றார்.