
”தினமும் வேலைக்குச் செல்கையில், சாலை ஓரங்களிலும், மர நிழல்களிலும் ஆதரவின்றி, கிழிந்த உடைகளோடு அமர்ந்திருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது, மனசுக்கு கஷ்டமா இருக்கும்.
”தினமும் வேலைக்குச் செல்கையில், சாலை ஓரங்களிலும், மர நிழல்களிலும் ஆதரவின்றி, கிழிந்த உடைகளோடு அமர்ந்திருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது, மனசுக்கு கஷ்டமா இருக்கும். `இவங்களுக்குனு யாருமே இல்லையா, எங்கே படுப்பாங்க, மழை வந்தா எங்கே ஒதுங்குவாங்க, அவங்களுக்கு சாப்பாடு எப்படிக் கிடைக்கும்'னு பல கேள்விகள் அடிமனசை அறுக்கும். அப்படித் தோணும்போதே, `அவங்களுக்கு ஒருவேளை சாப்பாடு கிடைக்க வழி பண்ணணும்' என்று நினைப்பேன். அந்த நினைப்புதான், 15 இளைஞர்களை ஒன்றுசேர வைத்தது; இப்போது தினமும் 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது’’ என்று வார்த்தைகளிலும் முகத்திலும் மலர்ச்சியோடு பேசுகிறார் உதயகுமார்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவருடன் இன்னும் 14 இளைஞர்களும் இணைந்து, கரூர் நகரில் ஆதரவின்றி இருக்கும் மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் என தினமும் 50 பேருக்கு மூன்று வேளை உணவு தருகிறார்கள். இவர்கள் வசதியான வீட்டுப் பிள்ளைகள் என்று முடிவுகட்டிவிட வேண்டாம். பெயின்டர், ரயில் நிலையத்தில் மூட்டை தூக்குபவர், டெய்லர், சாலையோரத்தில் சோளத்தட்டு விற்பவர் என அன்றாடக் கூலிகள்தாம். `சங்கமம்' என்று அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் இப்போது பலரது பசியாற்றி வருகிறார்கள்.


சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் மனிதர்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த இளைஞர்களைச் சந்தித்தோம். நம்மிடம் முதலில் பேசிய உதயகுமார், ``நான் பி.ஏ, பி.எட் படிச்சிருக்கேன். ஆனா, சரியான வேலை கிடைக்கலை. சிம்கார்டு வித்துப் பார்த்தேன்; தொழில்ல நஷ்டம். அதனால், சோளத்தட்டைகளை வாங்கிவந்து, சாலையோரம் வச்சு விற்பனை பண்ணினேன். மாசம் 12,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். கொரோனாவால அந்தத் தொழிலும் செய்ய முடியலை. தற்காலிகமா இப்போ ஒரு தனியார் கம்பெனியில வேலைக்குப் போயிட்டிருக்கிறேன். வாடகை வீடுதான். பெருசா வருமானமில்லை. ஆனா, வாழ்க்கை மீதோ, சகமனிதர்கள் மீதோ எனக்கு எந்தப் புகாரும் இல்லை. `உனக்கும் கீழே உள்ளவர் கோடி'ன்னு கண்ணதாசன் பாட்டைப் பாடிட்டு, காலத்தை ஓட்டும் ரகம் நான். அதனால், அப்படி வாழ்க்கை போகும்போதுதான் கரூரில் கண்ணில் எதிர்ப்படும் ஆதரவற்றவர்களின் நிலை என்னை இம்சித்தது. எனது வருமானத்துல மிச்சம் பிடிச்சு, 2019-ம் ஆண்டு நவம்பர்ல இருந்து தினமும் ஒருத்தருக்கு ஒருவேளை சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஒருநாள் அதைப் பார்த்த ரயில்வே ஸ்டேஷன்ல மூட்டை தூக்கும் வேணு சந்துரு, `தினமும் 10 பேருக்கு சாப்பாடு கொடுக்கலாமே?'ன்னு சொன்னான். `அதுக்குப் பணவசதி இல்லையே'ன்னு சொன்னேன். உடனே, பல மாவட்டங்கள்ல ஸ்பான்சர்கள் மூலமா, வறியவர்களின் பசியாற்றும் அமைப்புகளின் வீடியோக்களைக் காண்பிச்சப்ப, எனக்கும் நம்பிக்கை வந்துச்சு. 2020 பிப்ரவரி மாசம், ரெண்டு பேரும் சேர்ந்து 10 பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தோம். அதை போட்டோவாக ஃபேஸ்புக் பக்கத்துல பதிஞ்சோம்.
அதைப் பார்த்துட்டு, திருமணம் நடந்து 20 நாளே ஆன கவியரசும் அவரின் மனைவியும் 20 பேருக்கு சாப்பாடு கொடுத்து உதவுனாங்க. அதன்பிறகு பலரும் திருமணம், பெரிய காரியம், பிறந்தநாள் என்று தங்கள் இல்ல விழாக்களைச் சிறப்பிக்க, ஆதரவற்றவர்களுக்கு சாப்பாடு கொடுத்து உதவ ஆரம்பிச்சாங்க. அதனால், கொஞ்சகாலம், `பசியுடன் கண்ணுக்குத் தெரிஞ்ச எந்த மனிதரும் இரவு படுக்கப் போகக்கூடாது'ன்னு, இரவு உணவு மட்டும் கொடுத்தோம். எங்களின் இந்த முயற்சியைப் பார்த்த தச்சு வேலை பார்க்கும் தளபதி சரவணன், குமார், யோகபால் ராஜா, தியானேஷ்வரன், சக்திவேல், பானுமதி, பெயின்டர் லோகநாதன், சித்ரா, ஜெயலட்சுமி, பிரியா கண்ணன், சுரேஷ், கவியரசு, பைலட் பிரவீன், மூட்டை தூக்கும் வேணு சந்துருன்னு 14 பேர் இணைஞ்சாங்க. ஹோட்டல்ல இருந்துதான் சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சோம். அதன்பிறகு, கணவரை இழந்த அக்கா ஒருத்தங்க வாழ்வாதாரத்துக்காக நடத்தும் மெஸ்ல இருந்து சாப்பாடு வாங்க ஆரம்பிச்சோம். இரவு உணவு மட்டும் தொடர்ந்து 70 நாள்கள் கொடுத்தோம். அதன்பிறகு, இரவு, காலை உணவுன்னு 90 நாள்கள் கொடுத்தோம்.
அதுக்குப் பிறகு, இதுல பலரும் கைகோக்க, அதுல இருந்து இன்று வரை குறைஞ்சது 50 பேருக்கு மூணு வேளையும் சாப்பாடு கொடுத்திட்டிருக்கோம். ஸ்பான்சர் எல்லா நேரமும் கிடைக்கமாட்டாங்க. பாதி நாள் நாங்க 15 பேரும் எங்க வருமானத்துல மிச்சம் பிடிச்சு சாப்பாடு வாங்கித் தருவோம். அப்படியும் இல்லன்னா, மூணு பேரு இருக்காங்க. அவங்க, `யாரும் கிடைக்கலன்னா, உடனே சாப்பாடு வாங்கிக் கொடுத்திருங்க. நாங்க பணம் கொடுத்திடறோம்'னு உறுதிமொழி கொடுத்திருக்காங்க. பலபேரின் பசியாத்துறோம் என்பதில் பெரிய மனநிறைவு கிடைக்குது சார்’’ என்றார்.


அடுத்து பேசிய பெயின்டர் லோகநாதன், ``நானும் எம்.ஏ., பி.எட்னு இரண்டு டிகிரி படிச்சிருக்கேன். ஆனா, சரியான வேலை அமையலை. குடும்ப வறுமைக்காக பெயின்ட் அடிக்கிற வேலைக்குப் போயிட்டு இருக்கேன். நண்பர் உதயகுமார் பதிவைப் பார்த்துட்டு, நானும் இந்த நல்ல காரியத்தில் இணைஞ்சேன். காப்பகத்துக்குப் போக விரும்புபவர்களை அங்க அனுப்பி வைப்போம். நாங்க சாப்பாடு கொடுக்கிறவங்களுக்கு உடம்புக்கு முடியலன்னா, மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போவோம். அதுல, மூணு பேரு இறந்துபோயிட்டாங்க. அப்போ, மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அதேபோல், சிலர் எங்களிடம், `ஏதாச்சும் தொழில் பண்ண வசதி செஞ்சு தாங்க'ன்னு கேட்டிருக்காங்க. அதுக்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம். மனநலம் பாதிக்கப்பட்டவங்க, அழுக்கான கிழிஞ்ச உடை அணிஞ்சபடி, நிறைய முடியோடு இருப்பாங்க. அவங்களுக்கு முடிவெட்டிவிட்டு, குளிப்பாட்டி, புது உடையையும் அணிவிப்போம். கடந்த சுதந்திர தினத்தன்று அப்படி 19 பேருக்கு முடிவெட்டிவிட்டு, புத்தாடை அணிவிச்சோம். தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாள்கள்ல பிரியாணி கொடுப்போம். போர்வை, புத்தாடை, ஸ்வீட்னு கொடுப்போம். கடந்த தீபாவளிக்குக்கூட இரண்டு வேளை பிரியாணி உணவு கொடுத்ததோடு, 30 பேருக்கு உடை, ஸ்வீட், போர்வை எல்லாம் வாங்கிக் கொடுத்தோம். அதேபோல், கிராமப்பகுதிகளில் ஆதரவில்லாமல் இருக்கும் முதியோர்கள் 9 பேருக்கு மாசா மாசம் அரிசி, மளிகை சாமான்களும் வாங்கித் தருகிறோம்’’ என்றார்.
இவர்களோடு கைகோத்துள்ள, சுய உதவிக்குழுவில் பணிபரியும் பிரியா கண்ணன், ``நான் சின்ன வயசுல ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருக்கேன். அதனால், தர்மசிந்தனை இயல்பாகவே இருந்துச்சு. என் மகன், மகளோட பிறந்தநாள்கள், திருமண நாள் என்று சங்கமம் அமைப்பு மூலம் ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்தோம். `தாயி, நீங்க நல்லாருக்கணும்'னு அந்த முதியவர்கள் கையைப் பிடிச்சுட்டு, நா தழுதழுக்க சொல்றப்ப, எனக்கு மனசு உருகிப் போயிடும். அதனால், இந்த நல்ல காரியத்தில் சங்கமம் அமைப்போடு நானும் இணைஞ்சுட்டேன். நானும் என் தோழிகள், தெரிஞ்சவங்களை இதற்கு ஸ்பான்சர்களா மாற்றிவிட்டேன். `பசியில்லா கரூர்' என்பதை உருவாக்கிக் காட்டும் வேகத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
நல்ல மனங்கள் வாழ்க!
******
இந்த அமைப்பை ஆரம்பித்த உதயகுமார் கபடி பிளேயர். ஆனால், தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளை, ஏழ்மை நிலைமையில் உள்ள இளைஞர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக, தமிழக அளவில் இருந்து பிளேயர்களை வரவழைத்து, தகுதியான வீரர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதுகுறித்து பேசியவர், "தமிழ்நாடு அளவுல இருந்து 204 பேர் வந்தாங்க. அதுல 30 வீரர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு மூணு நாள் பயிற்சி கொடுத்து, அதுல இருந்து 14 பேர்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். அந்த 14 பேர்களுக்கு படிப்பு செலவு, உடை, இன்சூரன்ஸ், சாப்பாடுனு எல்லா செலவுகளையும் நாங்களே செய்ய இருக்கிறோம். இந்த டீமை எல்லா இடத்துக்கும் விளையாட அழைச்சுட்டுப் போய், சிறந்த அணியாக மாற்ற இருக்கிறோம். அடுத்தடுத்து இப்படி ஏழ்மை நிலைமையில் உள்ள வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கபடியில் சிறந்த வீரர்களாக உருவாக்க இருக்கிறோம். அதன்மூலம், பல எளிய குடும்ப பின்னணியைக் கொண்ட மாணவர்கள், அரசு வேலைக்குப் போகும் வாய்ப்பு ஏற்படும்" என்கிறார்.